குழந்தைப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைப் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜனவரி, 2021

பொங்கல் வாழ்த்துகள்!


பனிப்பொழிவில் தைப்பொங்கல்

   பைங்கரும்பு மஞ்சளுடன்

இனிப்புடனே பல்சுவையாய்

   ஏற்றுகின்ற பொங்கலினை

முனைப்புடனே வைக்கின்றோம்!

   மூவுலகும் போற்றிடவே

வனப்புடைய பொங்கலினை

   வாசலிலே வைத்திடுவோம்!

ஏர்முனைக்கு நேரிங்கே

   ஏதுமில்லை நாட்டினிலே

போர்முனைதான் வெற்றிபெறப்

   புரிவதன்றோ ஏர்முனைதான்!

மாடுகளைப் போற்றிடுவோம்

   மண்வளத்தைக் காத்திடுவோம்!!

பீடுபெறப் பொங்கலிட்டுப்

   பேருவகை அடைந்திடுவோம்!!!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


வியாழன், 24 டிசம்பர், 2020

மழைத் துளி!

முத்து முத்தாய் மழைத்துளிகள்

முற்றம் எங்கும் தெறித்துவிழ!

கொத்துக் கொத்தாய்ப் பூமியெங்கும்

கொட்டு கின்ற நீரமுதம்!!


பட்டுப் போன்ற மலர்களிலே

படிந்திருக் கும்தேன் துளிகள்!

சிட்டு களுக்கில் லாமல்

சிதற வைக்கும் மழைத்துளிகள்!!


மேகம் என்னும் கூரையிலே

மின்னல் இடிதான் முழங்க!

தாகம் அதைத்தீர்ப் பதற்குத்

தரைக்கு வந்த தேனமுதம்!!


பூமி எங்கும் பசுமைதனைப்

பூத்திருக் கச்செய் திடுமே!

சாமிஎன உயிர்கள் எல்லாம்

தலைவணங் கும்மழைத் துளியாம்!!


ஆறுகுளம் ஏரி மற்றும்

அணைக ளுமேநீர்ப் பெருக!

சோறு தின்ன தானியங்கள்

தோற்று விக்கும் மழைத்துளிதான்!!


குடிக்க நல்ல நீர்தருமே!

குளிப்பதற் கும்பயன் படுமே!

செடிகொடிகள் மரங்கள் எல்லாம்

    செழிக்க வைக்கும் மழைத்துளிதான்!!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


செவ்வாய், 2 நவம்பர், 2010

தீப ஒளித் திருநாள்!

வெடவெடக்கும் குளிரடிக்க
       விடியலிலே எண்ணையிட்டு
நடுநடுங்கக் குளித்துவிட்டு
       நல்லநல்ல புத்தாடை
நாமணிந்து குடும்பத்துடன்
       நடத்துகின்ற திருநாளாம்!

மாமன்மச்சான் புடைசூழ
       மகிழ்வுடனே சேர்ந்துவந்து
பூமிதனைக் காத்திடவே
       பொல்லாத அசுரர்களின்
தீமைதனை வேரறுத்த
       திருமாலின் அடிவணங்கிக்
கொண்டாடும் நன்னாளாம்
       குழந்தைகட்குப் பரவசமாம்!

பண்டிகையாம் ஊரெங்கும்
       பரபரக்கும் தீபாவளி!
வண்ணவண்ணப் பூச்சரமாய்
       வானமெங்கும் மத்தாப்பு!
கண்பறிக்கச் சிந்துகின்ற
       களிப்பூட்டும் பண்டிகையாம்!

நகரமெங்கும் இடியெனவே
       நாலுதிக்கும் தானதிர
சிகரமெல்லாம் எதிரொலிக்கச்
       சீறிவரும் வெடிவகைகள்!
மத்தாப்பு, ஆனைவெடி
       வானயுரும் ராக்கெட்டும்
சித்தத்தைக் கலக்கிடுமே
       சீறுகின்ற சக்கரம்தான்!

வீடுகளில் நெய்மணக்க
       விதவிதமாய் இனிப்புகளாம்
சீடைவகை அதிரசமும்
       தித்திக்கும் தேன்குழலும்
வாசமெங்கும் கமகமக்க
       வகைவகையாய்ப் பட்சணங்கள்
நேசமுடன் குடும்பத்துடனே
       நிறைந்திடுமே தீபஒளி!

அன்புடன்,
- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)