ஞாயிறு, 7 மார்ச், 2021

கொல்லிமலை - வெருனூர் (வீரகனூர்பட்டி) - கொங்கலாய்

கொல்லிமலை

 

தமிழக மலைகளில் இலக்கியப் பெருமையும், வரலாற்றுச் சிறப்பும், இயற்கை வளமும் செறிந்தது கொல்லிமலை. புலவர் நாவில் பொருந்திய சிறப்புப் பெற்றது. பல்லாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட பெருங்கற்சின்னங்கள், முதுமக்கள் தாழிகள் கொல்லிமலையில் கிடைத்துள்ளன. வரலாற்றுக் காலத்தில், கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஓரியின் ஆட்சிக் கீழிருந்தது.  “கொல்லியாண்ட வல்வில்லோரி'' என்று இலக்கியங்களால் புகழ்ந்து பேசப் பெற்றவன்.  ஓரியின் குதிரையும், ஓரி எனப் பெயர் கொண்டது. ஓரி ''ஆதனோரி'', ''வல்வில்லோரி" என வழங்கப்பட்டான். இவனுடைய வில்லாற்றலைக் கழைதின் யானையார் என்னும் புறநானூற்றுப் புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார்.


கொல்லிமலையிலுள்ள சிறுகுடியில் வசிக்கும் மக்கள் உணவுக்காக யானையின் தந்தங்களை விற்று உணவு பெறுவர் என்பதால் இம்மலையில் யானைகள் மிகுந்திருந்தன என அறியலாம்.

 

ஓரியைப் போலவே கடையெழு வள்ளல்களில் ஒருவனும் திருக்கோவலூரை அடுத்த முள்ளூர் மலையின் தலைவனுமான மலையமான் திருமுடிக்காரி கொல்லிமலையின் மீது படையெடுத்து ஓரியைக் கொன்று இயற்கை வளம்மிக்கக் கொல்லிமலையைச் சேர மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கொடுத்தான். காரியின் குதிரையின் பெயரும் காரி என்பதே.

 

                  “                                     செவ்வேல்

                    முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி

                    செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்

                    ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த

                    செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி''

 

என அகநானூறு 209-ஆம் பாடலில் கல்லாடனார், காரி, ஒரியைக் கொன்று சேரனுக்குக் கொடுத்ததையும், கொல்லிப் பலாவின் சிறப்பையும், அங்குள்ள கொல்லிப் பாவையையும் ஒரு சேரக் கூறியுள்ளார்.

 

வாய்மொழிக் கபிலன், என்றும் இன்னும் பலவாறாகச் சங்கப்புலவர்களால் விதந்தோதப் பெற்ற கபிலர்,

 

                   ஓரிக்கொன்ற ஒரு பெருந் தெருவில்

                     காரி புக்க நேரார் புலம்போல்''

 

என்று நற்றிணை 320-ஆம் பாடலில் கூறியுள்ளார். ஓரியைப் போரில் கொன்று விட்டு அவனுடைய நகரின் பெரும் தெருவில் காரியும் படைவீரர்களும் நுழைந்தபொழுது, அச்சத்தால் அங்குள்ள மக்கள் ஆரவாரித்தனர் என அப்பாடல் கூறுகின்றது. ஓரியைக் கொன்ற காரி, கொல்லிமலையைச் சேர மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கொடுத்தான். பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. அவனைப் பாடிய புலவர் அரிசில்கிழார்,

 

            கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்

              கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய!''

 

எனக் கொல்லிமலையைச் சேரனுக்குரியதாகக் கூறுகின்றார். பெருஞ்சேரலின் தம்பி இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர் கிழாரும், “சுரும்பார்சோலைப் பெரும் பெயல் கொல்லி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

கொல்லிமலை உரிமை பெற்ற பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிப்பொறை'' என்ற காசினை வெளியிட்டுப் பெருமை கொண்டான். அக்காலத்தில் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகள் கொல்லிக்கூற்றம்'' என வழங்கப்பட்டது. இக்கொல்லிக் கூற்றத்தில் பல போர்கள் நடைபெற்றதைப் பதிற்றுப்பத்துக் கூறுகின்றது.

 

சேரர் ஆதிக்கத்திற்குப் பிறகு மழவர்களின் ஆட்சிக்கீழ்க் கொல்லிக்கூற்றம் வந்தது. பின் மழகொங்கம் என்ற பெயர் பெற்றது. ''கொல்லிமழநாடு'', ''கொல்லிமலை நாடு'' என்றெல்லாம் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மழகொங்கத்தைப் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் அடிப்படுத்தினான். அக்காலங்களில் தகடூர் அதிகமான் மரபினர் இப்பகுதியை ஆட்சி செய்தனர்.  கி.பி.7ஆம் நூற்றாண்டில் சம்பந்தரும், அப்பரும், 16ஆம் நூற்றாண்டில் அருணகிரி நாதரும் 18ஆம் நூற்றாண்டில் அம்பலவாணக்கவிராயரும் பாடியுள்ளனர்.

 

கொல்லிமலையைப் பற்றிய மேலும் செய்திகளுக்கு கொல்லியும்-அறப்பள்ளியும் என்ற முந்தைய இடுகையைக் காண்க.


வெருனூர் (வீரகனூர்பட்டி)

 

தற்போது வீரகனூர்பட்டி என்று அழைக்கப்படுகின்ற வெருனூர் கொல்லிமலையில் உள்ள பதினான்கு நாடுகளுள் ஒன்றான சேலூர் நாட்டில் உள்ளது. சேலூர் நாடு பத்தொன்பது சிற்றூர்களைக் கொண்டது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஊராட்சி ஆகும். மலையில் 251 ஊர்களும் 14 ஊராட்சிகளும் உள்ளன. கொல்லிமலை அனைத்தும் சேர்ந்தது. கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், ஒன்றியத்தின் தலைமையிடம் செம்மேடு. கொல்லிமலையின் தென்கோடியில் மேற்குச் சரிவில் வீரகனூர்பட்டி உள்ளது. வெருனூர், வெருகனூர், வீரகனூர், வீரகனூர்பட்டி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.


கி.பி.10-ஆம் நூற்றாண்டளவிலேயே கல்வெட்டுகள் வீரகனூர்பட்டியைக் குறிப்பிடுகின்றன. உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் உத்தமசோழனின் தாயாரும் கண்டராதித்தசோழரின் மனைவியுமான செம்பியன் மாதேவியார் அறப்பள்ளி ஈச்வரர் கோயிலுக்கு நூறு கழஞ்சு பொன் கொடுத்துள்ளார். அந்த நூறு கழஞ்சின் வட்டியைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் சங்கராந்தியன்று இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நூறு கழஞ்சு பொன்னையும் கொல்லிமலையில் உள்ள பன்னிரண்டு ஊர் மக்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஊரவர் பொறுப்பேற்றுப் பூசனை செய்வர். அந்தப்பன்னிரண்டு ஊர்களும் இன்றும் கொல்லிமலையில் உள்ளன. அவை 1) உரலத்தூர் 2) பரவூர் 3) புன்னத்தூர் 4) முத்தூர் 5) வெருனூர் 6) வாயலூர் 7) மங்கலம் 8) கரையங்காடு 9) நெடுவலம் 10) காமூர் 11) கருங்கயம் 12) ஊரலம் ஆகியவாகும்.  இவற்றுள் சேலூர் நாட்டு வெருனூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வீரகனூர்பட்டி என்று வழங்கப்படுகிறது.

 

வீரகனூர்பட்டி தொன்மையானது. சமண சமயச் சிறப்புக் கொண்டது. மலைச்சரிவில் சமண தீர்த்தங்கரர் உருவம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது.

 

சமண தீர்த்தங்கரர் உருவம்


மூத்தவளாகிய ஜேஷ்டாவின் சிற்பமும், ஐயனார் சிற்பமும் தனித்தனியாக உள்ளன. தொடக்கப்பள்ளியை ஒட்டிப் பழங்காலச் செக்கு ஒன்றுள்ளது. அச்செக்கில் பத்தாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட கல்வெட்டொன்றுள்ளது. அழிஞ்சிலன் முனிவரர் மகன் சேட்டையாற்கு விளக்கு வைத்’’ ததைப் பற்றிக் கூறுகிறது.  ஜேஸ்டாவைத் தான் சேட்டை என்று குறிப்பிட்டுள்ளனர்.  சேட்டை வழிபாடு மிகச் சிறப்பாக அக்காலத்தில் இருந்துள்ளது, தெரிகின்றது.


தொடக்கப்பள்ளியின் கீழ் உள்ள வரப்பு வழியில் பெரிய சிற்பமொன்று கவிழ்ந்து கிடக்கின்றது. அதை யாரும் புரட்டிப் பார்க்கக் கூடாதென்றும்சிற்பம் வெளியே வந்தால் அனைவரும் கல்லாகச் சபிக்கப்பட்டு விடுவார்களென்று மக்கள் கூறுகின்றனர். ஒரு ஆள் புரட்டக்கூடியதாக இல்லை. நம்முடைய சொந்தப் பொறுப்பில் புரட்டிப்பார்க்கவும் ஊரவர் விடுவதில்லை. கீழே குனிந்து பார்த்தால் கை மட்டும் தான் தெரிகின்றது. பலமுறை முயன்றும், மக்களின் மூட நம்பிக்கையால் அச்சிற்பத்தைப் புரட்ட முடியாமல் நம் மனம் தான் கல்லானது.


ஊரின் மேல் பக்கம் சரிவில் ஒரு பெண் சிற்பம் தனித்து நிற்கின்றது. அதை ஊர்க்கொளுத்திசாமி என்று கூறுகின்றனர்.  ஏதாவது தவறு செய்தால், அச்சிலை ஊரைக்கொளுத்திவிடும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் அதைத் தனித்து வைத்து விட்டதாகக் கூறுகின்றனர். அச்சிற்பம் சமண சமயத்தீர்த்தங்கரர் ஆதிநாதரின் இயக்கியாகிய சக்கரேஸ்வரியாகும். தர்மத்தைப் போதித்த ஆதிநாதரின் இயக்கி ஊர்க்கொளுத்தும் சாமியாக ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியதாகும்.

 

வெருனூரும், வணிகர்களும்

 

கொல்லிமலையில் விளையும் மலைபடுபொருள்களைக் கீழே கொண்டு சென்றும், மலைமக்களுக்குத் தேவையான பொருள்களைக் கீழேயிருந்து மேலே கொண்டு வருவதற்கும் வணிகக்குழுக்கள் கொல்லிமலையில் இருந்து வந்தனர். நாட்டின் நாலா திசைகட்கும் சென்று வணிகம் செய்து வந்தனர். இவர்கள் நானாதேசிகள், ஐந்நூற்றுவர் என வழங்கப்பட்டனர். அறப்பள்ளி ஈச்வரர் கேயில் கல்வெட்டுகளில் இவ்வணிகர்கள் பலர் குறிப்பிடப்படுகின்றனர். அறப்பள்ளி ஈச்வரர் கோயிலுக்குப் பல இடங்களில் தேவதானம் கொடுத்துள்ளனர். வெருனூர் அறப்பள்ளியுடையான் வீராணச் செட்டி’’ என்றும்வெருனூரில் பள்ளவழியில் குந்தளவரம்பனான திசைமாணிக்கச் செட்டி’’ எனவும் பல வணிகர்கள் வெருனூரில் வாழ்ந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அறப்பள்ளி ஈச்வரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு, “கொல்லிமலை நாட்டு ஐந்நூற்றுவர் ரக்ஷை'' என்று குறிப்பிடுகின்றது.

 

மலைபடுபொருள்களை வாங்கி விற்கும் வணிகக்குழுக்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்கள் வெருனூரில் வாழ்ந்து வந்தமைக்குக் காரணம், கொல்லிமலையின் தென்பகுதி என்பது மட்டுமல்லாமல் கீழே இறங்கினால் தூசியூர் முதலிய வணிக நகரங்களை எளிதில் அடையலாம் என்பதேயாம்.

 

கொல்லிமலைச் சரிவில் கீழே உள்ள நகரம் தூசியூர் இன்று தூசூர் என்று வழங்கப்படுகின்றது. இத்தூசியூரில் வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். தூசியூர் நகரத்தார் என்றே இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். சுந்தரசோழன் ஆட்சிக் காலத்தில், “கொல்லிமழவன், ஒற்றியூரன் பிரதிகண்டன் சுந்தரசோழன்’’ என்ற தலைவன் தூசியூரில் திருக்கற்றளி எடுப்பித்தான். தன் தந்தை பராந்தகன் சிறியவேளான் ஈழத்துப்போரில் இறந்து பட்டமைக்காக தூசியூரில் கிணறு வெட்டிக் கொடுத்ததைத் திருச்செங்கோட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இங்குள்ள வணிகர்கள் நாட்டின் பல பகுதிகட்கும் சென்று வணிகம் செய்துள்ளனர். தூசியூரை அடுத்து மேற்கில் ஏழூர், கரூர் முதலிய இடங்களும், கிழக்கில் காருகுடி முதலிய இடங்களும் வணிகர்களின் இருப்பிடங்களாக இருந்துள்ளன. கொல்லிமலை வணிகர்களும் இவர்களுடன் கலந்து நாலாதிசைகளிலும் சென்று வணிகத்தில் ஈடுபட்டனர்.

 

வெருனூரில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் செட்டிகளும் வேளாளர்களுமே ஆவார். மலையில் உள்ள மலைவாழ் மக்கட்கும் இவர்கட்கும் யாதொரு தொடர்பும் இல்லை. காலப்போக்கில் கொல்லிமலையில் உள்ள மற்ற மலையாளர்களுடன் வெருனூர் மக்கள் மணவினை முதலிய தொடர்புகளை வைத்துக் கொண்டுள்ளனர்.

 

கொங்கலாய்

 

கொங்கலாய் பற்றிக் கூறப்படும் சில செய்திகளின் பின்னணியாக வெருனூர்-வணிகர்கள் பற்றி விளக்கப்பட்டது. வெருனூர் வணிகர்கள் குழுவாக மலைபடுபொருள்களான பழ வகைகள், மணப் பொருட்கள், தானிய வகைகள் முதலியவைகளைக் கீழே கொண்டு செல்வது வழக்கம். தலைச்சுமையாகவும், பொதிமாடுகளின் உதவியுடனும் பொருள்களை எடுத்துச் செல்வர். கூட்டமாகச் செல்வதால் வணிகச் சாத்துகள் என அழைக்கப்பட்டனர்.

 

கீழே உள்ள தூசியூர் நகர வணிகர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்கும் சென்று வணிகம் செய்வர். இவர்கள் தங்கள் வணிகப் பொருள்களுக்குப் பாதுகாப்பாகப் படை வைத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். அக்குழுக்கள் எறி வீரபட்டணத்தார் என வழங்கப்படுவர். தத்தம் பொருள்களைப் பண்டமாற்றியும், விலை கொடுத்து வாங்கிக் கொண்டும் திரும்புவர். வழிச் செலவுக்காக மலையில் விளைந்த கருநெல் அரிசியால் கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வர். அத்துடன் கருவாழைப்பழம், செண்பகப்பூ முதலியவைகளையும் கொண்டு செல்வர்.

 

அவ்வாறு ஒருமுறை இவ்வணிகர்கள் காவிரியைக் கடந்து ஈரோட்டில் தம் பொருள்களை விற்றும் வாங்கியும் மீண்டும் மலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். காவிரியைக் கடந்து நீண்ட தூரம் வந்த பொழுது தங்கள் குழுவுடன் அழகிய இளமையுடன் கூடிய பெண் பின் தொடர்ந்து வருவதை அறிந்தனர். வியப்பு மேலிட அச்சிறு பெண்ணை நோக்கிக் குழந்தாய் நீ எந்த ஊர்எங்களுடன் ஏன் வருகின்றாய்உன்னைக் காணாது பெற்றவர்கள் வேதனைப்படுவார்களே! ’’ என்று கேட்டனர். 


அதற்கு அப்பெண் பெரியோர்களே, நானும் உங்களைப்போன்ற  வணிகக்குலத்தில் தோன்றிய செட்டிப் பெண்ணே. என் பெயர் கொங்கலாய், எனக்குத் தாய் தந்தையர் இல்லை. வணிகத்தின் பொருட்டு நீங்கள் வரும் பொழுது, கொண்டு வரும் வழிச் செலவு கருநெல்லரிசி கட்டுச்சோற்றுக்கும், பூவுக்கும் ஆசைப்பட்டு மலைக்கு உங்களுடன் வருகின்றேன்'' என்றாள்.

 

அதைக் கேட்ட வணிகர்கள், "பெண்ணே, கொல்லிமலை மிக உயரமானது. போகும் வழியும் கரடு முரடான ஒற்றையடிப் பாதை. செங்குத்தானது. உன்னால் நடக்க முடியாது.  உன்னைச் சார்ந்தவர்கள் வருந்துவர். திரும்பிச் செல்வதே நல்லது'' என்று பலவாறாக எடுத்துக் கூறினர். எவ்வளவு கூறியும் கேளாமல் அப்பெண் தொடர்ந்து வரலானாள்.


வணிகக்குழுவினர் ஓரிடத்தில் அமர்ந்து கட்டுச்சோற்றை உண்பதற்காக அவிழ்த்தனர். உடன் வந்த பெண்ணை மறந்து தாங்கள் மட்டும் உண்ணத் தொடங்கினர். கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்த அளவில் அனைவருடைய உணவும் புழுக்களாய் நெளிந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர்.  இஃதென்ன தெய்வ குற்றம்ஐயகோ இறைவா?” என்று அலறினர். அப்போது  இளம்பெண் கொங்கலாயை நினைத்துத் தேடினர். இளம்பெண்ணை மறந்து விட்டு நாம் மட்டும் உண்ண எண்ணி விட்டோமே, அப்பெண் தெய்வத் தன்மை பொருந்தியவளாக இருக்க வேண்டும் என நினைத்தனர்.


அப்பெண்ணிடம் சென்று,  “பெண்ணே, உன் பெருமையை அறியாது உணவுண்ணக் கூப்பிடாமல் நாங்கள் மட்டும் உண்ண நினைத்தோம். தாயே கொங்கலாய், எங்களைப் பொறுத்தருள வேண்டும்'' எனப் பலபடியாக வேண்டி உருகினர். இளம்பெண்ணாகிய கொங்கலாய், “பெரியோர்களே வருந்த வேண்டாம், எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். நீங்கள் உங்கள் உணவை உண்ணுங்கள்'' என்று கூறிப்புன்முறுவல் செய்தாள்.  வணிகர்களும் மீண்டும் தங்கள் கட்டுச்சோற்றைத் திறந்த பொழுது உணவைச் சமைத்து இலையில் பரிமாறியதைப் போன்று ஆவி பறக்க, மணக்க, மணக்கக் காட்சியளித்தது.  கொங்கலாயின் தவப்பெருமையை எண்ணி வணங்கினர். உணவு கொடுத்தும் உண்ண மறுத்து, “உங்கள் வயிறும் மனமும் நிறைந்தாலே எனக்கு மனமும், வயிறும் நிறைந்தது போல'' எனக் கூறினாள்.

 

வணிகக்குழுவினர், பயமும் பக்தியும் கலந்த மனத்தினராய்க் கொங்கலாயுடன் மலைக்குச் சென்றனர். கொல்லிமலை அடிவாரத்தை அடைந்தனர். மேலே செல்லச் செல்ல வானம் இருண்டது. கடுமையான இடி மின்னலுடன் பெருமழை பெய்யத் தொடங்கியது. செங்குத்தான ஒற்றையடிப் பாதைகளில் பெரும் நீர்ப்பெருக்கால் வழி மறைந்து போனது. வரும் வழியில் இடைப்பட்ட காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 

வணிகர்கள் நனைந்த உடையுடன் நடுங்கிய மேனியராய்க் கொங்கலாயின் முகத்தை ஏறிட்டு நோக்கினர். இளம்பெண் கொங்கலாய் வானத்தை ஏறிட்டு நோக்கித் தொழுதாள்.  அவ்வளவில் காட்டாற்று வெள்ளம் இரு பிரிவாகப் பிரிந்து இடையில் வழி விட்டு விலகியது. அனைவரும் காட்டாற்றைக் கடந்து சென்றனர்.

 

நீண்ட பயணத்துக்குப் பிறகு வெருனூரின் மேற்குச் சரிவில் மரங்களடர்ந்த சோலைக்குள் வந்து சேர்ந்தனர். கொங்கலாய் வணிகர்களை அவரவர் இடங்கட்கு அனுப்பி விட்டு, அச்சோலையை விரும்பி அங்குள்ள குடிசைக்குள் தங்கியிருக்க விரும்பினாள். கொங்கலாய் குடிசைக் கதவைத் தட்டினாள். கதவு திறக்கப்படவில்லை. ஆனால் குடிசைக்குள் இருந்து குரல் மட்டும் வந்தது. “நான் தான் பிடாரி இருக்கின்றேன். என் குழந்தைகட்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்அதனால் கதவைத் திறக்க முடியாது'' என்றது பிடாரியின் குரல். கடும் சினம் கொண்ட கொங்கலாய் தன் தவ வலிமையால் சூலத்தை வரவழைத்துக் கதவை ஓங்கி அடித்தாள். கதவு இரண்டாகப் பிளந்தது. பிடாரியைத் தன் சூலத்தால் தாக்கிப் பிடாரியின் தோளில் அமர்ந்தாள். பிடாரியும் பணிந்து கொங்கலாயுடன் நேசம் கொண்டது. இந்நிகழ்ச்சிகளை அறிந்த வணிகர்கள் மற்றும் ஊர் மக்கள் கொங்கலாயைத் தெய்வமாக்கி வழிபட்டனர்.

 

பிடாரியும், கொங்கலாயும்

 

மலைமேல் வடக்கு நோக்கிக் கொங்கலாய் கோயில் உள்ளது. பிடாரியின் தோளில் கொங்கலாய் சூலத்துடன் அமர்ந்திருப்பதும் பிடாரியின் குழந்தைகள் அருகில் இருப்பதுமான சிற்பங்கள் உள்ளன.

 

கொங்கலாய் அம்மன்

ஓர் ஆண்டு இடையிட்டுச் சித்திரை முழுமதியன்று கொங்கலாய் திருவிழா நடைபெற்று வருகின்றது. திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும் திங்களன்று ஊர்ச்சாற்றிக் காப்புக் கட்டுவர். அடுத்த செவ்வாயன்று திருவிழா முடிவுறும். சேலூர் நாட்டுப்பட்டக்காரரை மேள தாளத்துடன் அழைத்து வந்து பட்டம் கட்டி மரியாதை செய்வர், ஊர்க்கவுண்டர், கரைகாரர், தானத்தார் கூடி விழாவை நடத்துவர்.

 

தானத்தான் பூசாரிதான் கோயில் வேலைகளை முன்னின்று செய்வார். ஊருக்குள் சாமி வீடு என்று ஒன்றுள்ளது. அதில் கோவில் பூசைக்குரிய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.  திருவிழாவன்று தீட்டுடைய பெண்கள் ஊரை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். சாமி வீடு பூசி மெழுகித்தூய்மை செய்யப்படும். கொங்கலாய் கோவிலுக்குப் பெண்கள் செல்லக் கூடாது. இரவு சாமி வீட்டிலிருந்த குதிரை மீது சாமியை ஆரோகனம் செய்து தானத்தான் பக்திப்பரவசத்துடன் பாடல்களைப் பாடிச் செல்வார். மேள தாளங்கள், வாணவேடிக்கைகள் மிகச் சிறப்பாக இருக்கும். மேளம் வாசிப்போர் பின்நோக்கியே செல்வர். கரடுமுரடான மேட்டுப்பகுதியில் குதிரையுடன் பெருந்திரளான மக்கள் தீப்பந்தங்கள், காந்த விளக்குகளுடன் விடியற்காலை நேரத்தில் கோவிலைச் சென்றடைவர். கூட்டத்தில் வருபவர்கள் யாரேனும் தீட்டுத் தொடர்புடையவர்களாகவோ, தூய்மை கெட்டிருந்தாலோ குதிரை மேலே செல்லாமல் நின்றுவிடும்.

 

பூசாரி தீட்டுத் தொடக்கு உள்ளவர்கள் போய் விடுங்கள் என்று எச்சரிப்பார். பின் தீட்டுத் தொடர்புடையவர்கள் விலகிய பின் பூசாரி பாட்டுப்பாடி கற்பூரம் காட்டிப் பூசை செய்ய, குதிரை மேலே செல்லும். திருவிழாவின் போது கொங்கலாயிக்குப் பூசை செய்ய கீழே இருந்து சிவாச்சாரியாரை அழைத்து வருவர். அவர் தான் பூசை செய்வார்.

 

மேலே மக்கள் வரிசையாகப் பொங்கல், மாவிளக்கெடுக்க வழிபாட்டுடன் விழா முடிவு பெறும். விழா முடிந்தவுடன் ஊரார் ஆடு, கோழி வெட்டி உறவினர்கட்குப் படைப்பர்.

கொங்கலாய் அம்மன் கோயில்

கொங்கலாய் திருவிழாவின் போது மலையின் அனைத்து நாட்டுப்பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கூடுவர். மலையில் வாழும் மக்களன்றிக் கீழே இருந்தும் ஏராளமானவர்கள் வருவர். கடைகள் முதலியவை சிறப்பாக இருக்கும். சித்திரை மதியமாதலால் போக, வர நன்றாக இருக்கும். குளிர் இல்லாமல் மக்கள் மகிழ்வுடன் வருவர்.

 

கொல்லிமலையில் கொங்கலாயைத் தவிர கரையங்காட்டுக்காளி, மாசி பெரிய சாமி, சேலூரு பழனியம்மாள், பரியூர் காளியம்மன், பின்னத்துக்காளி, விழாரம் இளைய நாச்சி, எனச் சிறு தெய்வங்கள் பல உள்ளன.

 

பிடாரி, செங்கைப் பிடாரி, அறங்கத்தப்பன், நாச்சாயி எனப் பல தெய்வங்கள் உண்டு. இவையனைத்தும் சமண தீர்த்தங்கர்களின் இயக்கிகளே ஆவர். வெருனூர்ப் பிடாரியும் குழந்தைகளைக் கொண்டிருப்பதால் சமண சமய அம்பிகா இயக்கியே ஆகும்.

 

கொங்கலாய்-பிடாரிப் போராட்டம் சைவ கொங்கலாயிக்கும் சமண இயக்கிக்குமான நிகழ்வே ஆகும். உயிர்க்கொலை விரும்பாத, சமய தெய்வங்கள் இன்று, பிடாரி என்றும், நாச்சாயி என்றும், காளி என்றும் உயிர்ப்பலிகளைப் பெற்றுக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொல்லிமலையில் வெருனூர், மேல்கலிங்கம், கரையங்காடு, வாசலூர், நெடுவலம், வளப்பூர் முதலிய இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன.  “சாத்திரமெல்லாம் கற்ற சமணாண்டிப்பாட்டன்'' என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.

 

கொங்கலாய் பற்றிப் பல்வேறு மாறுபட்டக் கதைகள் வழக்கில் உள்ளன. ஏழு கன்னிமார்கள் உடன் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரவர் தம் மனம் போன போக்கில் கதை சொல்கின்றனர். கதையைச் சொன்னால் சித்தம் கலங்கி விடும் என்று கூறியவர்களும் உண்டு. கொங்கலாய் கோயிலை ஒட்டிப் பாறையில் நீண்ட தூரம் பெரிய பிளவு ஒன்று காணப்படுகின்றது.  கொங்கலாயின் சூலத்தால் குத்தப்பட்டு உண்டான பிளவு என்கின்றனர். நில நடுக்கம் முதலியவைகளால் ஏற்பட்ட பிளவாகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

 

         கொல்லிமலை சாமியே வந்தவுடனே

         கோடிசனம் சாமியே கையெடுக்கும்

         கருநெல்லுதான் சாமியே சோத்துக்குமே

         கருவாழைதான் சாமியே பழத்துக்குமே-அங்க

         ஆசைப்பட்டு வந்ததடா சாமியே

         வெருகனூரு சாமியே கொங்கலாயிதான்!''

 

என்று கொங்கலாயை மலைவாழ் மக்கள் பாடி வழிபடுகின்றனர். கொல்லிமலையில் உள்ள சிறுதெய்வங்களில் கொங்கலாய் புகழ்பெற்றதாகும்.


- புலவர் வெ.இரா.துரைசாமி


குறிப்புகள்:

படங்கள் உதவி: கொல்லிமலை – வீரகனூர்பட்டி சமணர் கோவில் பதிவு. படங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த திரு.பிரபாகரன் அவர்களுக்கு நன்றி! 


கூகிள் வரைபடத்தில் இருப்பிடங்கள்:

கொல்லிமலை