ஞாயிறு, 24 டிசம்பர், 2023

தீரன் சின்னமலை கும்மி நூல் வெளியீடு

கலியுகம் 5124 ஸ்ரீ சோபகிருது வருடம் புரட்டாசி 27 (அக்டோபர் 14, 2023) அன்று, வையப்பமலை தீரன் சின்னமலை வள்ளிக்கும்மியின் முதன் நிகழ்ச்சியை முன்னிட்டு தீரன் சின்னமலை கும்மி என்ற சிறுநூல் வெளியிடப்பட்டது.

பாலமேடு திரு ம.இராஜா மற்றும் திரு து.சீனிவாசன் அவர்கள் இணைந்து வெவ்வேறு நூல்களில் இருந்து கும்மிப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

நூலின் முன்னுரை:

வணக்கம். தீரன் சின்னமலை கும்மி என்ற இந்த சிறு நூல் பத்து சிறு பாடல்கள் கொண்ட தொகுப்பு. சின்னமலை கும்மி புலவர் குழந்தை மற்றும் கா. அரங்கசாமி தொகுத்தது. மரபாளன் உற்பத்திக்கும்மி புலவர் இராசு அவர்கள் வெளியிட்டது. இது வேளாளர் புராணத்தின் சிறு சுருக்கம். அர்த்தநாரீசுரர் கும்மி திருச்செங்கோடு அர்த்தநாரீசுரர் மீது பாடப்பட்டது. குமரமங்கலம் பாண்டீசர் மீது பாடப்பட்டது பாண்டீசர்கும்மி. கம்பர் வாழி கொங்கு வேளாளர் திருமணங்களிலே புலவரால் பாடப்படும். குலம் சம்பந்தப்பட்ட பாடல்கள், 96 கீர்த்தி தனி ஓலைச்சுவடியில் இருந்து எடுக்கப்பட்டது. மற்றது, கொடுமணல் இலக்கியம் மற்றும் அழகுமலை குறவஞ்சி இலக்கியத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. கொங்கு வேளாளர் திருமணங்களில் சீர் கேட்டல் என்ற நிகழ்ச்சியின் கேட்கப்படும் சீர்களின் தொகுப்பாக ஒரு பாடல், கொங்கு நாட்டு தாலாட்டு பாடல் ஆகியவைகளின் தொகுப்பாக இந்த சிறு நூல் அமைந்துள்ளது. வைப்பமலை தீரன் சின்னமலை வள்ளிக்கும்மியின் முதன் நிகழ்ச்சியின் நினைவாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. அமரர் புலவர்இராசு அவர்களுக்கும் அமரர் நாமகிரிபேட்டை துரைசாமி அவர்களுக்கும். PeeVee கிராபிக்ஸ்க்கும் நன்றி. 


அன்புடன் 

ம.ராஜா 

து.சீனிவாசன்






காவிரிப் புனல்...

காவிரிப் புனலே! காவிரிப் புனலே!
    மேவிடும் பெருக்கில் தாவிடத் துள்ளிக்
குடவரை மருங்கிற் குறுமுனி யருளால் 
    தடவரைப் பிளந்து ததும்பிடு நன்னீர்க்
காவிரிப் புனலே! காவிரிப் புனலே!

வரைபடு நற்பொருள் வாரிச் சுமந்தும்
    தரைப்பட எண்ணித் திரைபடர்ந் தோடித்
தடைப்படு பொருளை உடைப்பினிற் சாடி
    மடைப்புறம் நீங்கிக் கடைப்புறங் காட்டி 
உறுபுனற் பெருக்கின் ஓதை விளத்துத்
    துறுகற் றழுவித் தொடுமணற் சுரந்தும் 
கருங்கற் பாறை மருங்கிற் சாடி
    அருங்கலைப் பளிங்காய் ஆக்கிக் கன்னியர்
நெடும்புனற் றிளைக்கும் நீணறுந் துறையொடு
    மடுவிற் புகுந்து மஞ்சள் குழைத்தும்
இகுகரை மருங்கை உகும்படிச் செய்தும்
    வெகுவிரை வோடு வியன்மரக் காவில்
திரைநீர்க் கரத்தால் விரைமலர்க் கொய்தும்
    நரைசால் விளங்கும் நுரைசால் கொண்டு
வந்தனை யன்றோ? வந்தனை யன்றோ? 
    வெந்துயர் நீக்கிட வந்தனை யன்றோ?

சான்றோர் மனம்போற் சலனம் இன்றி
    ஆன்றவுன் பெருக்கை அடக்கியும் செல்குவை!
கல்லாப் புல்லர் கற்றன மென்று 
    சொல்லா லொலித்துச் சுகம் பெறல் போலக்
கல்மிசை இவர்ந்துப் புல்மிசைத் தாவி
    ஒல்லென் றொலித்தே ஓடினும் ஓடுவை!

அன்றியும்; 

        ஏருழவர் போரடித்துப் 
        பார்புரக்கச் சீர்செய்தல் 
        ஞாலத்தில் நீயருளும் 
        சீலத்தா லன்றோகாண்!

அதனால்; 

        உயிரூட்டும் இறையென்கோ?
        பயிரோம்பும் தாயென்கோ? 
        வானவரின் அமுதென்கோ?
        கானவரின் தருவென்கோ?
        அயராமல் நீநடந்தும் 
        துயரின்றிக் கீட்டிசையில்
        கடற்காதல்நனி விழைந்து 
        இடர்ப்பாடு பல்கொண்டும்

ஓடுவை! ஓடுவை! உன்னருங் கொண்கன் 
    வாடுவ னென்று வையகம் முழுதும் 
ஆர்த்துச் செல்லும் அழகைப் 
    பார்த்துத் திளைத்தேன் பைங்கூழ்ப் பரப்பிலே" 


“காவிரிக்கும் காவிரியே! கன்னடத்தார் நாட்டினின்று
    தாவிக் குதித்துவரும் தாயேநீ! - நாவினிக்க
பாடும் புகழ்பெற்றாய்! பைந்தமிழர் வாழ்வோங்க 
    காடும் மலைகடந்தாய் காண்!”


“பொங்கும் புனலாலே பொன்கொழிக்கும் அற்புதத்தை 
    எங்கும் புவியகத்தே யான்காணேன் - நங்கலிதீர்! 
நீர்ப்பாய்ச்சி நல்லுழவர் நீளுலகில் வெம்பசியை
    ஏர்ப்பாய்ச்சிச் சாடிடுவா ரீங்கு!”


“நல்லார் பெறும்பொருளை நாட்டுக்குத் தந்துபிறர்
    எல்லோரும் போற்ற இருப்பதுபோல் - தொல்லுலகில்
கொங்கலருஞ் சோலைக் குடகிற் பெறுநீரை
    எங்கட்குத் தந்துயர்ந்தா யின்று!”

- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


திங்கள், 1 மே, 2023

உழவைப் பாடுவீர்…

மேதினி போற்றும் மே தின வாழ்த்துகள்!

ஏடெடுத்துக் கவிபாடிப் புகழைச் சேர்க்கும்

    இனியதமிழ்ப் பாவலரே! பெரியீர்! இந்த

நாடிருக்கும் நிலையறிந்து வறுமை போக்கி 

    நன்மைபல செய்திடவும், ஆக்கம் சேர்ந்து 

வீடங்கும் செல்வமணம் கமழ்ந்தே நிற்க 

    வீதியெங்கும் பொற்குவியல் மண்டிப் போகப்

பீடெடுத்துப் பாடிடுவீர்! உழைப்பை மக்கள்

    பேணிடவே பாடிடுவீர்! அதுதான் வேண்டும்.


பொங்கிவரும் பெருநிலவைத் தென்றல் தன்னைப் 

    பூவையரை, வானத்தை முகில்கள் தன்னை 

மங்காத பழம்பெருமை காதல் வாழ்வை 

    மலையெழிலைப் பூந்தளிரை அருவி மற்றும் 

இங்குள்ள பல்பொருளை இயற்கை தன்னை 

    எத்தனயோ விதமாகச் சுவையாய் நீங்கள் 

தங்கநிகர்த் தமிழாலே பாடி விட்டீர்! 

    சற்றேதான் உழவினையும் பாடு வீரே! 


வள்ளுவனும் உழவுக்குச் சிறப்புத் தந்தே 

    வையகத்தின் அச்சாணி என்றான் மற்றும் 

உள்ளுதொறும் சுவையூட்டும் சங்க நூல்கள் 

    உரைத்தனவே ஏருழவைப் புகழ்ந்தே பின்னைத் 

தெள்ளுதமிழ்ப் புலவனவன் கம்பன் தோன்றிச் 

    செம்மையுறும் ஏரெழுப தியற்றித் தந்தான்

உள்ளீரோ? அதற்குப்பின் உழவைப் பற்றி

    உரைத்தவர்யார்? சிறப்பாக இல்ல அன்றோ?.


“நிலமென்னும் நல்லாளைக் கலப்பை கொண்டு 

    நித்தமும் நாம் உழுதிடுதல் பாவம்” என்றே 

குலநீதி பேசுகின்ற வேத வாக்கிற் 

    குளிர்காய்ந்து வாழ்ந்திருந்தோம். உண்மை கண்டே 

பலனறிந்து ஏர்த்தொழிலைப் போற்றினோமா? 

    பயிர்த்தொழிலைப் பொங்கலன்று புகழ்ந்தே பேசிச் 

சலனமின்றிப் பிறநாளில் இருந்தே விட்டோம். 

    சாத்திரத்தின் மோகத்தில் ஆழ்ந்தே போனோம்.


ஆலயங்கள் ஒவ்வொன்றின் சிறப்பைப் பற்றி 

    ஆயிரத்தின் மேலாகப் பாக்கள் செய்து

கோலமுறும் தமிழாலே தலபு ராணங்கள் 

    குவித்து விட்டோம். ஆனாலும் கடவுள் தந்த

சீலமிகு நல்லுழவன் தன்னைப் பாடிச்

    சேவித்துக் கொண்டோமா? இறைவன் தன்னை

ஆலயத்தில் காண்பதற்குத் துடிக்கின்றோமே 

    அவ்வுருவை வயல்வெளியில் உழைக்கக் காணீர்!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நாமக்கல் கூலிப்பட்டி சோழர்கால வீர நடுகற்கள்

 நாமக்கல் அருகே வீர கற்கள் கண்டுபிடிப்பு

தினமலர் (22-நவம்பர்-1982)

தஞ்சை, நவ. 22 - ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு மிக முக்கியமான சோழர்கால நடுகற்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத் துறையினர் முதல்முறையாகப் படி எடுத்து வந்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிப் புலவர் வெ.ரா.துரைசாமி அளித்த தகவலின்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்நடுகற்கள் இரண்டும் படிஎடுக்கப்பட்டன. 

கி.பி. 907ம் ஆண்டில் சோழநாட்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மதுரைகொண்ட முதல் பராந்தகன் காலத்தைச் சேர்ந்ததாக முதல் நடுகல் கருதப்படுகிறது.


கொடுக்கமங்கலத்து ஊராழ்வான் சடையமரையனுடைய கால்நடைகளைக் கவர்ந்து கொள்ள, தந்தை சடையமரையன் மகனைக் காப்பாற்றும் பொருட்டு கொடுக்கமங்கலத்தூராழ்வானுடன் போர் செய்து மரணம் அடைகிறான். பின்னர் தந்தை சடையமரையனுக்கு மகன் ஆரையன் ஆயிரவன் நடுகல் எடுத்தான். ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்களத்தரையன் என்று பட்டம் பெற்று கொடுக்கமங்கலத்தில் வாழ்கின்றான். 


ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 964) பகைவர்கள் கொடுக்கமங்கலத்து ஊர்க் கால்நடைகளைக் கவர்ந்து கொண்டுசெல்ல வந்தபோது ஏற்பட்ட போரில் இளஞ்சிங்களத்தரையனான ஆரையன் ஆயிரவன் மரணம் அடைகிறான் ஏகவீரமுத்தரையன் என்பவன் ஆரையன் ஆயிரவனுக்கு நடுகல் எடுத்து முன்பு நடப்பட்டி ருந்த தந்தையாரின் நடுகல் அருகிலேயே நட ஏற்பாடு செய்து நட்டகல் இரண்டாம் நடுகல் ஆகும். 


இன்றும் நாமக்கல் அருகே கூலிபட்டிப் பெருமாள் கோயிலின் தெற்கே தந்தை, மகன் ஆகியோருக்கு எடுத்த நடுகற்கள் இரண்டும் அருகருகே இருப்பது காண்போருக்கு வியப்புக்குரியதாக விளங்குகிறது.

 

10ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இடைப்பகுதியிலும் நாமக்கல் பகுதி பேரரசுச்சோழர்கட்கு உட்பட்டிருந்ததும் தெரிகிறது. இக்கல்வெட்டு அக்கால மொழிநடையை ஆராய மிகவும் பயன்படும். “தந்தை மகனைச் சேமஞ் செய்து எதிரேய் குடந்து சென்று பட்டான்" என்ற தொடரும், "கற்பொறிப்பிச்சான்" என்ற தொடரும் "வீரபாண்டிகன்", “கலிகாலச்சோழன்" "வீரமுச்சரையன் கல்லு நாட்டுவிச்சான்" என்ற தொடர்களும் மொழியியல் ஆய்வுக்கு மிகவும் உதவும் தொடர்களாகும். கால்நடைகளைக் குறிக்க ”காலி” என்ற சொல் குறிக்கப் பெற்றுள்ளன. "ஆரை" என்பது நாமக்கல்லின் பழைய பெயராகும். 


சிற்பத்தில் வில், அம்பு, வாள் இவைகளைப் பெற்ற வீரர்களின் ஆடை, அணிகலன்கள், தலையலங்காரம் ஆகியவை 10ம் நூற்றாண்டின் கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வுக்கு மிகவும் உதவுபவை. இவை குறித்துத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. 


பத்தாம் நூற்றாண்டில் நாமக்கல்லில் மகனுக்காகப் போரிட்டு வீரமரணம் எய்திய தந்தை சடையமரையன் பழங்கால ஆயுதங்களுடன்.


- 22-நவம்பர்-1982 தினமலரில் வெளிவந்த செய்தி


கல்வெட்டுப் பாடங்கள்


தெற்கில் உள்ள நடுகல்:

“ மதிரை  கொண்ட கோப்பரகேசரிக்கு

…………………

கொடுக்க

  மங்கலத்

தூராழ்வன்

சடையமரைய

ன்  காலி கொ

ள்ள மகனை

ச் சேமஞ்

     செய்து

    எதிரே

    ய் குட

    ந்து

    சே

 ரப்பட்டா

  ன் ச

  டைய

   மரை

   யன் மக

ன் ஆரை

யன் ஆயி

  ரவன்

  கற் பொ

    றிப்

      பிச்

  சான் தந்

தை யா

ரைச்

சாத்தி ”


வடக்கில் உள்ள நடுகல்:

“  வீரபாண்

 டிகனை எறிஞ்

சு தலை கொ

   ண்ட கலி

கால சோழ

  ற்குச் செல்லா

    நின்ற யா

    ண்டு நாலா

   விது கொ

        டுக்க

         மங்

         கல

   த்தா

       ர்க்கும் ஆரைய

 ன்      ஆயிர

     வனான

        இளஞ்

   ங்கமு

         த் தரை

       யன் த

       ன் னூ

       ர்க் கா

         லி……

   ………….

   ………….

   ………….

   ………….

 விருன …… க

 வீர முச்சரை

யன் கல்லு

நாட்டு விச்சா

       ன் "



- வெ.இரா.துரைசாமி