மேதினி போற்றும் மே தின வாழ்த்துகள்!
ஏடெடுத்துக் கவிபாடிப் புகழைச் சேர்க்கும்
இனியதமிழ்ப் பாவலரே! பெரியீர்! இந்த
நாடிருக்கும் நிலையறிந்து வறுமை போக்கி
நன்மைபல செய்திடவும், ஆக்கம் சேர்ந்து
வீடங்கும் செல்வமணம் கமழ்ந்தே நிற்க
வீதியெங்கும் பொற்குவியல் மண்டிப் போகப்
பீடெடுத்துப் பாடிடுவீர்! உழைப்பை மக்கள்
பேணிடவே பாடிடுவீர்! அதுதான் வேண்டும்.
பொங்கிவரும் பெருநிலவைத் தென்றல் தன்னைப்
பூவையரை, வானத்தை முகில்கள் தன்னை
மங்காத பழம்பெருமை காதல் வாழ்வை
மலையெழிலைப் பூந்தளிரை அருவி மற்றும்
இங்குள்ள பல்பொருளை இயற்கை தன்னை
எத்தனயோ விதமாகச் சுவையாய் நீங்கள்
தங்கநிகர்த் தமிழாலே பாடி விட்டீர்!
சற்றேதான் உழவினையும் பாடு வீரே!
வள்ளுவனும் உழவுக்குச் சிறப்புத் தந்தே
வையகத்தின் அச்சாணி என்றான் மற்றும்
உள்ளுதொறும் சுவையூட்டும் சங்க நூல்கள்
உரைத்தனவே ஏருழவைப் புகழ்ந்தே பின்னைத்
தெள்ளுதமிழ்ப் புலவனவன் கம்பன் தோன்றிச்
செம்மையுறும் ஏரெழுப தியற்றித் தந்தான்
உள்ளீரோ? அதற்குப்பின் உழவைப் பற்றி
உரைத்தவர்யார்? சிறப்பாக இல்ல அன்றோ?.
“நிலமென்னும் நல்லாளைக் கலப்பை கொண்டு
நித்தமும் நாம் உழுதிடுதல் பாவம்” என்றே
குலநீதி பேசுகின்ற வேத வாக்கிற்
குளிர்காய்ந்து வாழ்ந்திருந்தோம். உண்மை கண்டே
பலனறிந்து ஏர்த்தொழிலைப் போற்றினோமா?
பயிர்த்தொழிலைப் பொங்கலன்று புகழ்ந்தே பேசிச்
சலனமின்றிப் பிறநாளில் இருந்தே விட்டோம்.
சாத்திரத்தின் மோகத்தில் ஆழ்ந்தே போனோம்.
ஆலயங்கள் ஒவ்வொன்றின் சிறப்பைப் பற்றி
ஆயிரத்தின் மேலாகப் பாக்கள் செய்து
கோலமுறும் தமிழாலே தலபு ராணங்கள்
குவித்து விட்டோம். ஆனாலும் கடவுள் தந்த
சீலமிகு நல்லுழவன் தன்னைப் பாடிச்
சேவித்துக் கொண்டோமா? இறைவன் தன்னை
ஆலயத்தில் காண்பதற்குத் துடிக்கின்றோமே
அவ்வுருவை வயல்வெளியில் உழைக்கக் காணீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக