புதன், 1 மே, 2024

நன்மனைவி!

எனக்காக நன்மனைவி வந்து சேர்வாள்
என்னிதயத் தினைப்புரிந்து வாழ்க்கை வாழத்
தனக்காக என்வழியைப் புரிந்தே கொண்டுத்
தன்னிதயந் தனையெனக்குப் பரிசாய் ஈவாள்!
மனக்கோட்ட மில்லாமல் என்னைச் சுற்றி
மங்கையவ ளகங்குளிர, முறுவல் சிந்தி
இணக்கமுடன் செவ்வாயில் மொழிகள் பேசி
ஏற்றிடுவாள் எந்தனையும் கணவன் என்றே!

எத்தனையோ விதங்களினால் துன்பம் சூழ்ந்தே
இருந்திட்ட போதிலுமென் உள்ளம் தன்னில்
கொத்துமலர் நாற்றமென இன்பம் கூட்டிக்
கொடுத்திடுவாள்! வாழ்க்கையிலே துணையே யாவாள்!
வித்தகனாம் நான்தவறும் சமயத் தெல்லாம்
விலக்கிடுவாள் பிழைகளையே! நன்மை சேர்ப்பாள்!
இத்தரையில் விருந்தோம்பும் பண்புக் கென்றும்
என்மனைவி மேலாவாள்! தாயைப் போல்வாள்!

கற்றாரைத் தான்மதித்துப் பணிவாய் என்றும்
கற்றிடுவாள் நல்லறங்கள்! அறிவின் மிக்க
உற்றாரைப் போற்றிடுவாள்! ஒழுக்கம் பொங்க
உலகெங்கும் புகழுரைக்கும் கற்பின் நிற்பாள்!
சற்றேனும் முகஞ்சுளித்துக் காண்பேன் இல்லை
தையலவள் எந்தனையே குழந்தை ஆக்கிப்
பெற்றவளைப் போலமிகப் பரிவாய் என்றும்
பேணிடுவாள் பாசமுடன் துயரம் தீர்ப்பாள்!

இல்லத்தின் திருமகளாய்! இதயக் கோவில்
ஏற்றுகின்ற பேரொளியாய்! மணியாய்! முத்தாய்!
சொல்லத்தான் முடியாத உயர்வாய்! என்னைச்
சுகங்காணச் செய்திடுவாள்! மற்றும்! ஆ! ஆ!
மெல்லத்தான் என்நாக்குச் சுவையைக் கண்டே
மேவுபல உண்டிகளைச் செய்தே வைத்து
நல்லத்தான் என்றிசைப்பாள்! இன்பம் சேர்ப்பாள்!
நற்றமிழால் நான்பரவும் தெய்வம் ஆவாள்!

குலமகளாய்த் தமிழகத்துப் பெண்ணின் பண்பைக்
குற்றமறக் கற்றவளாய்! பொறுமைக் கென்றும்
நிலமகளாய், வானுறையும் மதியின் தண்மை
நிலைத்திருக்கும் பெண்மகளாய்! அறிவில் பூத்தக்
கலைமகளாய் என்வளத்தின் மாசை முற்றும்
களைமகளாய் விளங்கிடுவாய்! அவளே பண்பின்
நலமகளாம் என்மனைவி உயிரிற் கூடி
நான்வாழ வழிசெய்யும் அமைச்சன் ஆமே!

மஞ்சளினைத் தான்பூசித் திலகம் மின்ன
மங்கையவள் நல்லாடை இனிதின் பூண்டு
செஞ்சாந்துச் சீரடியில் அழகே செய்ய
செவ்விதழில் தேனூற கண்கள் தாமும்
துஞ்சாது எனைக்காக்க! புருவ வில்லில்
துரிதமுடன் விழிக்கணையை ஏற்றிக் கொண்டு
பஞ்சணையில் தழுவிடவே! வருவாள் எந்தன்
பண்பான மனைவியவள்! தெய்வம் தானே!

- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி )

(திருமணத்திற்கு முன்னர் தனக்கு வரப்போகும் மனைவி எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்று எழுதிய கவிதை)


திங்கள், 1 ஜனவரி, 2024

புத்தாண்டே வருக!

எங்கும் பசுமை! இதழ்களில் பனித்துளி!

    பொங்கும் குளிரால் பொழுது புலர்ந்திட

ஈரா யிரத்துப் பதினான் காண்டே!

    சீராய் வந்தனை திருவடி வணக்கம்!

உலகம் உவப்ப உந்தன் அருளே

    நிலவுக! யாண்டும் நீணிலம் மீதில்

அன்பும் வளமும் அமைதியும் மக்கள்

    இன்புற் றிருக்க ஏற்றம் தருவாய்!

வறுமையும் பிணியும் வன்முறைக் கொடுமையும்

    சிறுமைப் படுத்தும் சாதி மதங்களின்

பிணக்கு ஒழிந்து பேருலகம் எல்லாம்

    இணக்கம் வளர இனிதாய் வருவாய்!

புத்தாண் டென்னும் பொன்மகளே!

    இத்தரை உன்னால் ஏற்றம் பெறுகவே!


- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி )

(2014 புத்தாண்டிற்காக எழுதப்பட்டது)