ஞாயிறு, 24 டிசம்பர், 2023

காவிரிப் புனல்...

காவிரிப் புனலே! காவிரிப் புனலே!
    மேவிடும் பெருக்கில் தாவிடத் துள்ளிக்
குடவரை மருங்கிற் குறுமுனி யருளால் 
    தடவரைப் பிளந்து ததும்பிடு நன்னீர்க்
காவிரிப் புனலே! காவிரிப் புனலே!

வரைபடு நற்பொருள் வாரிச் சுமந்தும்
    தரைப்பட எண்ணித் திரைபடர்ந் தோடித்
தடைப்படு பொருளை உடைப்பினிற் சாடி
    மடைப்புறம் நீங்கிக் கடைப்புறங் காட்டி 
உறுபுனற் பெருக்கின் ஓதை விளத்துத்
    துறுகற் றழுவித் தொடுமணற் சுரந்தும் 
கருங்கற் பாறை மருங்கிற் சாடி
    அருங்கலைப் பளிங்காய் ஆக்கிக் கன்னியர்
நெடும்புனற் றிளைக்கும் நீணறுந் துறையொடு
    மடுவிற் புகுந்து மஞ்சள் குழைத்தும்
இகுகரை மருங்கை உகும்படிச் செய்தும்
    வெகுவிரை வோடு வியன்மரக் காவில்
திரைநீர்க் கரத்தால் விரைமலர்க் கொய்தும்
    நரைசால் விளங்கும் நுரைசால் கொண்டு
வந்தனை யன்றோ? வந்தனை யன்றோ? 
    வெந்துயர் நீக்கிட வந்தனை யன்றோ?

சான்றோர் மனம்போற் சலனம் இன்றி
    ஆன்றவுன் பெருக்கை அடக்கியும் செல்குவை!
கல்லாப் புல்லர் கற்றன மென்று 
    சொல்லா லொலித்துச் சுகம் பெறல் போலக்
கல்மிசை இவர்ந்துப் புல்மிசைத் தாவி
    ஒல்லென் றொலித்தே ஓடினும் ஓடுவை!

அன்றியும்; 

        ஏருழவர் போரடித்துப் 
        பார்புரக்கச் சீர்செய்தல் 
        ஞாலத்தில் நீயருளும் 
        சீலத்தா லன்றோகாண்!

அதனால்; 

        உயிரூட்டும் இறையென்கோ?
        பயிரோம்பும் தாயென்கோ? 
        வானவரின் அமுதென்கோ?
        கானவரின் தருவென்கோ?
        அயராமல் நீநடந்தும் 
        துயரின்றிக் கீட்டிசையில்
        கடற்காதல்நனி விழைந்து 
        இடர்ப்பாடு பல்கொண்டும்

ஓடுவை! ஓடுவை! உன்னருங் கொண்கன் 
    வாடுவ னென்று வையகம் முழுதும் 
ஆர்த்துச் செல்லும் அழகைப் 
    பார்த்துத் திளைத்தேன் பைங்கூழ்ப் பரப்பிலே" 


“காவிரிக்கும் காவிரியே! கன்னடத்தார் நாட்டினின்று
    தாவிக் குதித்துவரும் தாயேநீ! - நாவினிக்க
பாடும் புகழ்பெற்றாய்! பைந்தமிழர் வாழ்வோங்க 
    காடும் மலைகடந்தாய் காண்!”


“பொங்கும் புனலாலே பொன்கொழிக்கும் அற்புதத்தை 
    எங்கும் புவியகத்தே யான்காணேன் - நங்கலிதீர்! 
நீர்ப்பாய்ச்சி நல்லுழவர் நீளுலகில் வெம்பசியை
    ஏர்ப்பாய்ச்சிச் சாடிடுவா ரீங்கு!”


“நல்லார் பெறும்பொருளை நாட்டுக்குத் தந்துபிறர்
    எல்லோரும் போற்ற இருப்பதுபோல் - தொல்லுலகில்
கொங்கலருஞ் சோலைக் குடகிற் பெறுநீரை
    எங்கட்குத் தந்துயர்ந்தா யின்று!”

- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக