வெள்ளி, 1 மே, 2026

நேற்று - இன்று - நாளை ---

நேற்று:-


வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாடுகின்ற மக்களுடைப் 

போக்கினிலே நல்வாழ்வுப் 

பூத்துவிடும் என்றேங்கி ! 

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்!


நாட்டொருமை பேசுகின்றார்

நம்வறுமை போக்கிடுவார் 

வீட்டருமை தானறிவார்

வென்றிடுவார் துன்பமென 

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்!


பாட்டாளி மக்களுடைப் 

பாதமதைத் தான்தாங்கும் 

தேட்டாளர் தாங்களென்றே 

செப்பியதால் அன்னவர்க்கே 

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்!


செந்தமிழைக் காப்பாற்ற 

செப்பரிய பாசறையாம் 

எந்தலைமை என்றுரைக்க 

ஏமாந்தே நான்மகிழ்ந்து

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்! 


மூட்டைப் பணக்குவியல் 

முதுகெலும்பைத் தானொடிக்கும் 

சாட்டை உடையோமெனச் 

சாற்றியதால் அன்னவர்க்கு 

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்! 


வாழ்ந்திருந்த பழம் புகழை 

வாயாரப்  பேசியே நாம் 

வீழ்ந்திருக்கும் நிலை மீண்டும் 

வென்றுவர அன்னவர்க்கே

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்! 


நாட்டினிலே சொற்களெலாம்

நம்வறுமை போக்கலென 

ஈட்டிமுனை போல்தொடுத்த 

எத்தரவர் முன்மயங்கி 

  வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்! 


தேர்தலிலே வென்றுவிட்டால் 

தேசமெலாம் நல்லாட்சி 

சீர்கலிக்கப் பொங்குமென 

செப்பியதால் அன்னவர்க்கே 

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்! 


நாடி நரம்புகளை

நம்நாட்டு ஏழைகளைத் 

தேடிக் கணக்கிட்டுத் 

தேசத்தின் முன்னுரைக்க

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்! 


நாட்டிற் குடிசைகளின் 

நலிவதனைத் தானெடுத்து 

வீட்டின் வறுமைதனை 

விரட்டுகிறோ மென்றுரைக்க 

வாக்களித்தேன்! வாக்களித்தேன்! 

வாழ்ந்துவிட வாக்களித்தேன்! 


இன்று:-

 

வீட்டுவழி முன்வந்து 

வேண்டியவர்; இன்றைக்கு 

நாட்டுவழி காண்பதனால் 

நான்காணச் சென்றாலும் 

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


விண்ணப்பம் தானெடுத்து

வீதிவழி சென்றுரைத்தால் 

''என்னப்பா! உங்கட்கே 

இவ்வேலையா? இங்கே

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!”


காற்றுமழை கூடியதும் 

கால்நடைபோல் வீதியிலே

மாற்றுடைக்கே ஏங்குகின்றோம் 

மந்திரியைக் கண்டழுதும்

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


எத்தனைபேர் வேண்டியவர் 

எத்தனைபேர் சுற்றத்தார் 

அத்தனைக்கும் திட்டமிட்டே 

ஆனபொருள் சேர்ப்பதற்கே! 

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


நாற்காலி கிட்டியதும் 

நற்பதவி தனைமாற்றார் 

தோற்காமல் தானிருக்கத் 

தோதுபல செய்வதற்கே 

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


மாற்றார்கள் தம்மிடத்தை 

மாற்றிவிடா தெத்தனையோ 

கூற்றுகளை மக்களிடம் 

கொண்டுரைத்துப் பேர்வாங்க 

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


ஆட்சியினில் வீற்றிருக்கும் 

அப்பொழுதே பொதுச்செலவில் 

மாட்சியெனச் சுற்றுதற்கும் 

மாநாடு கூட்டுதற்கே 

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


நன்மையெனில் தானேற்று 

நட்டமெனில் மாற்றாரைப் 

புன்மையுடன் பேசுதற்கும் 

போர்க்குரலைக் கூவுதற்கே

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


மக்களுடன் வந்தபசி 

வாட்டுகின்ற நேரத்திலும் 

சிக்கனத்தைப் பேசியவர் 

சிந்தையினை மாற்றுதற்கே

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


மொத்தத்தில் செல்வரெலாம் 

மொய்த்திருக்க ஏழைகளின் 

சித்தத்தில் வீற்றிருக்க 

செப்படிகள் செய்வதற்கே

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை! 


பாரெங்கும் சுற்றுதற்கும் 

பணவேட்டை யாடுதற்கும் 

பேரங்கள் பேசுதற்கும் 

பின்பாட்டுங் காப்பதற்கே! 

நேரமில்லை! நேரமில்லை! 

நிற்பதற்கும் நேரமில்லை!


நாளை:- 


எத்தனை நாளைக்கு வித்தைகள் செய்திடும் 

எத்தர்கள் தன்னை நம்பி 

இத்தரை மீதினில் அக்கறை இன்றியே 

நித்திரை கொண்டு நல்ல 

சித்திரப் பாவையாய் நித்தமும் வாழ்ந்திடப் 

புத்தியிற் கொண்டு விட்டீர்! 

குத்திடு வாளினை நத்தி வணங்கினாய் 

குத்தியே வென்று விட்டார் ! 

சோற்று நிலைக்கொரு மாற்று வழியினைச் 

சொந்தத்திற் கண்டு கொள்ள 

ஆற்று மணலிடை ஊற்றுப் பெருக்கென 

அணியணி யாக மக்கள் 

சீற்றம் மிகக்கொளக் கூற்றம் புறங்கொட 

சிந்தையில் ஆண்மை கொண்டே 

தோற்றம் அளித்திடின் மாற்றம் உரைப்பரோ? 

தோற்பதும் அவர்க ளன்றோ?

வாக்கினைப் பெற்றதும் போக்கினை மாற்றிடும் 

வஞ்சகர் உடல மெல்லாம் 

தூக்கினில் தொங்கிட ஆக்கிணை செய்திடத் 

துடித்துடன் பொங்கி நின்றே! 

தாக்கியே அன்னவர் நாக்கைப் பிளந்திடத் 

தானையைக் கொண்டு வந்தே 

காக்கைப் பருந்திற்கு யாக்கை விருந்தினைக் 

களத்தினிற் செய்து வைப்போம்!


- புலவர் வெ.இரா.துரைசாமி (கொல்லிக்கிழான்)