விடியலிலே எண்ணையிட்டு
நடுநடுங்கக் குளித்துவிட்டு
நல்லநல்ல புத்தாடை
நாமணிந்து குடும்பத்துடன்
நடத்துகின்ற திருநாளாம்!
மாமன்மச்சான் புடைசூழ
மகிழ்வுடனே சேர்ந்துவந்து
பூமிதனைக் காத்திடவே
பொல்லாத அசுரர்களின்
தீமைதனை வேரறுத்த
திருமாலின் அடிவணங்கிக்
கொண்டாடும் நன்னாளாம்
குழந்தைகட்குப் பரவசமாம்!
பண்டிகையாம் ஊரெங்கும்
பரபரக்கும் தீபாவளி!
வண்ணவண்ணப் பூச்சரமாய்
வானமெங்கும் மத்தாப்பு!
கண்பறிக்கச் சிந்துகின்ற
களிப்பூட்டும் பண்டிகையாம்!
நகரமெங்கும் இடியெனவே
நாலுதிக்கும் தானதிர
சிகரமெல்லாம் எதிரொலிக்கச்
சீறிவரும் வெடிவகைகள்!
மத்தாப்பு, ஆனைவெடி
வானயுரும் ராக்கெட்டும்
சித்தத்தைக் கலக்கிடுமே
சீறுகின்ற சக்கரம்தான்!
வீடுகளில் நெய்மணக்க
விதவிதமாய் இனிப்புகளாம்
சீடைவகை அதிரசமும்
தித்திக்கும் தேன்குழலும்
வாசமெங்கும் கமகமக்க
வகைவகையாய்ப் பட்சணங்கள்
நேசமுடன் குடும்பத்துடனே
நிறைந்திடுமே தீபஒளி!
அன்புடன்,
- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)
very nicely written periappa. Happy Diwali to all of you.
பதிலளிநீக்கு