வியாழன், 24 டிசம்பர், 2020

கதிராநல்லூர் - நத்தமேடு - பராந்தக ஈச்வரம்

இருப்பிடம்

சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரத்திலிருந்து கிழக்கே 5 கீ.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் கதிராநல்லூர். கதிராநல்லூரை ஒட்டித்தெற்கில் உள்ளது நத்தமேடு.


ஒரு காலத்தில் சீரும் சிறப்புடன் ஊராக அல்லது கோட்டைப்பகுதியாக இருந்து அழிந்துபட்ட இடமே நத்தமேடு என்பது. "ஊர் நத்தம்" என்று வருவாய்த்துறையில் வழங்கப்படும் இச்சொல் குடியிருப்பு இருந்து அழிந்துபட்டது என்று பொருள்படுவதாகும். சாம்பல் மேடு, புகையிலைமேடு , கோட்டைமேடு, என்று பல பெயர்களில் இவ்விடங்கள் வழங்கப்படும்.


தொன்மை 

சங்க காலத்தில் நாமக்கல் பகுதி "கொல்லிக்கூற்றம்" என்று வழங்கப்பட்டது. கொல்லிக்கூற்றத்தில் ஆதிக்கப்போர்கள் நிகழ்ந்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் கொல்லிக்கூற்றம் "மழகொங்கம்" என்று வழங்கப்பட்டது. பிற்காலச்சோழர் காலத்தில் நாட்டின் பகுதிகள் மண்டலம், வளநாடு, கூற்றம், நாடு என்ற பெயர்களில் பிரிக்கப்பட்டிருந்தன.

முதல் இராசராசன் (கி.பி. 985 - 1014) காலத்தில் கதிராநல்லூர் நத்தமேடு பகுதி "வடகரை இராசாச்சிரய வளநாட்டு முனை வல்லவரையர் நாட்டு விக்கிரமகேசரிச் சதுர்வேதி மங்கலம்" என்று வழங்கப்பட்டது. இங்குள்ள சிவன்கோயில் "ஸ்ரீ பராந்தக ஈச்வரம்" என்று அழைக்கப்பட்டது.

சதுர்வேதி மங்கலம் என்பது நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்களுக்கு அரசனால் வழங்கப்பட்ட நிலம் ஆகும். சதுர்வேதி மங்கலம் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ வளமான ஏரிகளை ஒட்டியோ அமைந்திருக்கும் நிலமாகும். வரி செலுத்தாமல் அவர்களே ஆண்டனுபவித்துக் கொள்ளலாம். சதுர்வேதி மங்கலம் என்ற பெயரே நாளடைவில் திரிந்து கதிரா நல்லூர் ஆயிற்று. குடியிருப்புப் பகுதிகள் அழிந்து போனதால் நத்தமேடு என்று வழங்கப்பட்டது.

இப்பகுதி முதல் இராசராசன் ஆட்சி தொடங்கி (கி.பி. 985) மூன்றாம் இராசேந்திரன் காலம் வரை (கி.பி. 1279) சுமார் முந்நூறு ஆண்டுகாலம் சிறந்து விளங்கியது.

தொன்மைச்சிதைவுகள்

கதிராநல்லூர் ஊரை ஒட்டி மிகப்பெரிய ஏரி உள்ளது. கொல்லிமலை மற்றும் போதமலையின் நீர்வரத்தால் நிரம்பி வழியும் பேரேரி. ஏரிக்கழிங்கை ஒட்டித்தெற்கில் மேட்டுப்பகுதியில் நத்தமேடு உள்ளது.

கதிராநல்லூர் ஏரி

நத்தமேட்டின் ஒரு பக்கம் மேட்டுப்பாங்கான இடத்தில் அழிந்து போன பராந்தக ஈச்வரத்தின் சிதைவுகள் உள்ளன.


பராந்தக ஈச்வரம்

லிங்கம் அதைச் சுற்றிப்பலகைக் கற்களால் அமைக்கப்பட்ட கூடம், செங்கற்சிதைவுகள், சுற்றிலும் துண்டு துண்டுகளாய்க் கிடக்கும் கட்டடத்தின் குமுதப்படைக் கற்கள். அவைகளில் கல்வெட்டுகள் பளிச்சிடுகின்றன.

கோயில் அருகில் முற்றிலும் அழிந்து ஒரு சிங்கம், ஒரு ஜேஷ்டா ஒரு நந்தியுடன் பராந்தக ஈச்வரம் காணப்படுகிறது.

  
 

கருவறையைச் சுற்றிலும் கல்வெட்டுகள் உள்ளன. இடையிடையே கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன.
ஊரின் பல பகுதிகளிலும் துண்டுக்கற்கள் உள்ளன. முதல் இராசராசனின் மெய்க்கீர்த்திகளுடனும் முதல் இராசேந்திரனின் மெய்க்கீர்த்திகளுடனும் துண்டுக்கற்கள் ஆங்காங்கே கிடக்கின்றன.

துண்டுக் கல்வெட்டுகள்

மேலும் ஊரில் நடுநிலைப்பள்ளியின் அருகில் பிள்ளையார் கோவில் ஒன்றுள்ளது. அதன் வாயிற்படியில் உள்ள கற்களில் கல்வெட்டுகள் உள்ளன. அன்மையில் நடைபெற்ற பிள்ளையார் கோவில் திருப்பணியின் போது அக்கல்வெட்டுக்கற்கள் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டன. ஏரியின் ஓர் ஓரத்தில் கொங்கலம்மன் கோவில் உள்ளது. அங்கும் சில கல்வெட்டுத் துண்டுகள் இருந்து அவைகளும் திருப்பணியின் போது கடை காலில் மோடிக்கற்களாக வைத்துப் புதைக்கப்பட்டு விட்டன. ஏரிக்கழிங்கில் உள்ள வாய்க்கால் பகுதியின் இரு பக்கங்களிலும் கல்வெட்டுத் துண்டுகள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன. அண்மைக் கால ஏரி பராமரிப்பின் போது மேலே சிமென்ட் வைத்துப் பூசப்பட்டு விட்டது. ஏரியின் உள்ளே கரையை ஒட்டித்தூர் வாரும்பொழுது சில கல்வெட்டுத்துண்டுகள் பெயர்த்தெடுக்கப் பட்டன.

இக்கல்வெட்டுக்கள் அனைத்தும் சோழர் காலத்தவை. முதல் இராசராசனின் பத்து, பதின்மூன்றாம் ஆட்சி ஆண்டுகளையும் (கி.பி. 995, 998) முதல் இராசேந்திரனின் ஐந்தாம் ஆட்சிஆண்டையையும் (கி.பி. 1017) சேர்ந்தவையாகும். மூன்றாம் இராசேந்திரனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் (கி.பி.1251) கல்வெட்டொன்றும் அறிய முடிகின்றன. மேலும் இன்னும் மண்ணில் புதைந்தும், ஏரி மற்றும் கட்டடங்களில் மோடிக்கற்களாகப் பயன்பட்டவை மிகுதி எனலாம்.

கல்வெட்டுச் செய்திகள்

கதிராநல்லூர் - நத்தமேட்டில் இரண்டு கோயில்கள் இருந்து உள்ளன. ஒன்று சிவன் கோயில் மற்றொன்று திருமால் கோயில் ஆகும். சிவன் கோயில் ஸ்ரீ பராந்தக ஈச்வரம் என்றும் திருமால் கோயில் உலகளந்த விண்ணகரான ஸ்ரீ கிருஷ்ணப் பெருமாள் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஸ்ரீ பராந்தக ஈச்வரம் தற்போது முற்றிலும் அழிந்து போய் விட்டது. திருமால் கோயில் எங்கே இருந்தது என்று தெரியவில்லை.

"வடரை இராசாச்சிரய வளநாட்டு முனை

வல்லவரையர் நாட்டு

விக்கிரம கேசரிச் சதுர்வேதி மங்கலத்து

ஸ்ரீ பராந்தக ஈச்வரம் "

என்று சிவன் கோயிலும், 

வடகரை இராசாச்சிரய வளநாட்டு முந்சை

வல்லரையர் நாட்டுபிரமதேயம்

ஸ்ரீ விக்கிரம கேசரிச் சதுர்வேதி மங்கலத்து

மகா மகாசபையோம்

எங்களூர் உலகளந்த விண்ணகர்

ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள்” 

என்று திருமால் கோயிலும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஏரிக்குள் கல்தூண் ஒன்று உள்ளது. அது மூன்றாம் இராசேந்திரனின் 5-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. (கி.பி. 1251) அதில் அதில் வடகரை இராசாச்சிரய வளநாடு மாறி "வீரசோழ மண்டலத்து வல்லவரையர் நாடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தூண் கல்வெட்டு மற்றும் சில துண்டுக் கல்வெட்டுகளும் சேலம் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன.

கல்வெட்டுகள் தொடர்ச்சியாக இல்லாததால் முழுமையாகச் செய்திகளை அறிந்து கொள்ள முடியவில்லை. பராந்தக ஈச்வரத்தில் ஒன்பது நாட்கள் விழா நடைபெற்றதையும் அக்காலத்தில் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையும் அதற்கு முதலீடாக பொன் கொடுக்கப்பட்டதையும் அறிந்துகொள்ள முடிகின்றது. திருமஞ்சன அமுதுபடிக்கு நாலுபதக்கு அரிசி வழங்க இறையிலி நிலம்கொடுக்கப்பட்டு அந்நிலத்தின் எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதல் இராசேந்திரனின் கல்வெட்டு, கிருஷ்ணப்பெருமாள் கோயிலில் சதுர்வேதி மங்கலத்துச் சபையோர் கூடி இருந்து, பணிபணியால் பணித்து இறையிலியாக நிலம் கொடுத்ததுடன் அறு கழஞ்சு பொன்னும் கொடுத்ததைக் கூறுகின்றது. இவை கோயில் பூசனை, திருவிழா முதவியவற்றுக்காகக் கொடுக்கப்பட்டன. எட்டுக்கழஞ்சு பொன் கொடுத்து நாள்தோறும் எண்ணெய் ஆழாக்கால் விளக்கெரிக்கப்பட்டதையும் ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இத்திருமல் கோயில் எங்கே இருந்தது என்பதை அறிய இயலவில்லை. இன்றும் நந்தவனத்தோட்டம் என்று பெயரளவில் ஓர் இடம் உள்ளது. அக்காலத்தில் கோயிலுக்குரிய நந்தவனமாக அவ்விடம் மணம் பரப்பியிருந்தது எனலாம். 

மேலும், ஆதிகேசவப் பெருமாள் கோயில்,  திருவாரைக்கால் (நாமக்கல்) எம்பெருமான் கோயில், திருச்செங்கோட்டுப் பிள்ளையார் (செங்கோட்டு வேலவர்) கோயில் ஆகியன குறிப்பிடப்பட்டு அவைகளுக்கு இறையிலி நிலம் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

தஞ்சாவூரும் பராந்தக ஈச்வரமும்

முதல் இராசராசன் தஞ்சையில் எடுப்பித்த மிகப்பெரும் வரலாற்றுச்சின்னம் பெரிய கோயில். பிரகதீச்வரர் கோயில் என்று இன்று வழங்கப்படுகிறது. ஆனால் இராசராசன் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் தாம் எடுப்பித்த இராசராசேச்வரம் என்று தன்பெயரில் பெரிய சிவாலயம் எடுத்துள்ளான்.

பாண்டியரையும் சேரரையும் வென்று கொண்ட பொருட்களால் தம் கோயிலை அலங்கரித்துள்ளான். மேலும் கோயிலில் பல்வேறு விதமாக நிவந்தங்கள் மற்றும் சிறப்புகளைச் செய்துள்ளான்.

தளிச்சேரிப் பெண்டுகள்

முதல் இராசராசன் பெரிய கோயிலில் நிகழும் ஆடல்பாடல்களுக்கு உரிய பெண்களைத் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து வரவழைத்தான். அவர்கட்குத் தளிச்சேரிப் பெண்டுகள் எனப் பெயரிட்டான். நக்கன் என்னும் சிவபெருமான் திருப்பெயரையே அடைமொழியாகக் கொண்டு மணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அவர்கள் கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவர். அவர்கள் மொத்தம் நானூறு பெண்கள். அவர்களுக்குத் தனியாக தெருக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பக்கங்கள் உண்டு, அவை சிறகுகள் என்று வழங்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டிற்கும் கதவு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கட்கு ஊதியமாக ஆண்டொன்றுக்கு இராசகேசரி என்னும் அரசாங்க முகத்தில் அளவைக்கு நிகரான ஆடவல்லான் என்னும் மரக்காலால் நூறுகலம் நெல் வழங்கப்பட்டது.

பராந்தக ஈச்வரம்

இம்முறையில் பராந்தக ஈச்வரத்திலிருந்து ஐந்து பெண்கள் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்றுள்ளனர். இதுபற்றியச் செய்தி தஞ்சைப் பெரிய கோயிலில் கல்வெட்டிலேயே உள்ளன. இந்த ஐந்து பேரின் பெயர்களும் அவர்கள் இருந்த தெருவின் சிறகு மற்றும் வீட்டுக் கதவு எண் ஆகியவை குறிக்கப் பட்டுள்ளன.

வடக்கில் தளிச்சேரி தென்சிறகு

    1. பதினெட்டாம் வீடு பராந்தகஈச்வரத்து நக்கன் திருவானைக்காவிக்குப் பங்கு ஒன்றும்.

    2. முப்பத்து மூன்றாம் வீடு பராந்தகஈச்வரத்து நக்கன் சோமகோனுக்குப் பங்கு ஒன்றும்.

    3. தொண்ணூற்றொன்றாம் வீடு பராந்தகஈச்வரத்து நக்கன் சிறிய உமைக்குப் பங்கு ஒன்றும்.

வடக்கில் தளிச்சேரி வடசிறகு

    4. முப்பத்தொன்பதாம் வீடு பராந்தகஈச்வரத்து நக்கன் திரிபுவனமாதேவிக்குப் பங்கு ஒன்றும்.  

    5. தொண்ணூற்றொன்றாம் வீடு பராந்தகஈச்வரத்து நக்கன் பராந்தெருமானுக்குப் பங்கு ஒன்றும்.

என்று இப்பெண்களின் பெயர்கள் பெரிய கோயில் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் பராந்தக ஈச்வரத்தில் அக்காலத்தில் தளிச்சேரி இருந்துள்ளது என்பதும் அப்பெண்கள் கோயிலுக்குச் சேவை செய்து வந்தனர் என்றும் அறியலாம். இங்கிருந்து ஐவர் சென்றனர் என்பதால் இங்குப் பலர் இருந்திருக்கக்கூடும். தஞ்சை சென்றவர் போக எஞ்சியவர் இங்கேயே கோயில் பணிசெய்தனர் எனவும் கருதலாம்.

இவ்வளவு சீரும் சிறப்பும் பெற்ற விக்கிரமகேசரி சதுர்வேதி மங்கலமும், பராந்தக ஈச்வரமும் பேணுவாரின்றி பொலிவிழந்து வரலாற்றுச் சுவடுகளை இழந்து இன்று ஒரு சிற்றூராய்க் காட்சி அளிக்கிறது.

பராந்தக ஈச்வரமும் உலகளந்த விண்ணகரும் அழிந்த பின் சுமார் நூற்றைம்பது ஆண்டு கால அளவில் கதிராநல்லூரில் விசாலாட்சி - காசிவிசுவநாதர் கோயில் கட்டப்பட்டு ஓரளவு வழிபாட்டில் இருந்து வருகின்றது. கால வெள்ளத்தில் கரைந்து போன விக்கிரமகேசரி சதுர்வேதி மங்கலம், பராந்தகஈச்வரம், உலகளந்த விண்ணகர், தளிச்சேரி முதலியவை பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போயிற்று.

கூடுதல் செய்தி

நத்தமேட்டின் ஊரின் தெற்கில் கண்ணூர்ப்பட்டி ஏரிக்கரை அருகே வயற்காட்டில் ஒரு நடுகல் ஒன்றும் காணப்படுகின்றது.



பின் குறிப்பு: இக்கட்டுரை புலவர் வெ.இரா.துரைசாமி அவர்களால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டது. நிழற்படங்கள் 2016-இல் எடுக்கப்பட்டவை.


3 கருத்துகள்:

  1. அருள்மொழிச்செல்வி27 ஆகஸ்ட், 2022 அன்று AM 1:30

    மிகவும் மகிழ்ச்சி. நமது முன்னோர்களது சிறப்பு மிக்க வரலாற்றை நமது வருங்கால சந்ததியினரும் அறிந்து மகிழும் வகையில் சிறந்ததொரு தொண்டினை ஆற்றியுள்ளீர்கள். எனது வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருள்மொழிச்செல்வி27 ஆகஸ்ட், 2022 அன்று AM 1:32

    அருமை. நமது முன்னோர்களது சிறப்பு மிக்க வரலாற்றை நமது வருங்கால சந்ததியினரும் அறிந்து மகிழும் வகையில் சிறந்ததொரு தொண்டினை ஆற்றியுள்ளீர்கள். எனது வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்கள் சிறந்த முறை ஆய்ந்து வெளியயிடப்பட்டுள்ளன. எந்த சூழ்நிலையில் பராந்தகனீச்சரம் தோன்றியது. .ஏன் இப்பெயர் பெற்றது ..இன்னும் பல தகவல் கிடைப்பின். மகிழ்ச்சி ஐயா.......

      .......

      நீக்கு