வியாழன், 24 டிசம்பர், 2020

புலவர் வெ.இரா.துரைசாமி - முதலாமாண்டு நினைவஞ்சலி - 24 டிசம்பர், 2020

 24 டிசம்பர், 2020


இன்று கல்வெட்டு ஆய்வாளர், தமிழாசிரியர், நாமகிரிப்பேட்டை புலவர் வெ.இரா.துரைசாமி அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து ஓராண்டு ஆகிறது. அவர்களின் தமிழ், இலக்கிய, வரலாற்று, மற்றும் கல்வெட்டுப் பணிகள் மிகவும் போற்றுதலுக்குரியது.

பதினோரு ஆண்டுகளுக்கு முன் அய்யாவின் கட்டுரைகளையும், கவிதைகளையும் பதிவு செய்திட இந்த வலைத்தளம் தொடங்கப்பட்டது. பல்வேறு  காரணங்களால் அவற்றைத் தொடர்ந்து வெளியிட இயலவில்லை. அவருடைய ஓராண்டு நினைவு தினத்தன்று, மீண்டும் அவருடைய படைப்புகளைப் பதிவிட்டு அன்னாருக்குப் புகழஞ்சலி செலுத்துகின்றோம்.


இப்பதிவில் அய்யா அவர்களைப் பற்றிய சிறு வாழ்க்கைக் குறிப்பும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் நினைவஞ்சலி செய்திகளையும் காணலாம்.


மேலும் அவருடைய கட்டுரைகள், கவிதைகளை தொடர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்கள் இவ்வலைத்தளத்தில் இணைந்திருக்க வேண்டுகிறோம்.


நன்றி!

புலவர் வெ.இரா.துரைசாமி வாழ்க்கைக் குறிப்பு

தற்போதைய நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் வெள்ளக்கல்பட்டி என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மே 1, 1942-இல் திரு. இராமசாமி மற்றும் இராசாயி அம்மாள் இணையருக்கு இளைய மகனாக வெ.இரா.துரைசாமி பிறந்தார். அவருடன் பிறந்தது  ஒரு அண்ணன் மற்றும் இரண்டு அக்காள்கள்.

அவரது தந்தையின் ஏற்பாட்டில் அவர்களது வீட்டிலேயே நடந்த ஒரு திண்ணைப்பள்ளிக்கூடத்தில் தம் கல்வியைத் தொடங்கிப் பின் நாமகிரிப்பேட்டை அரசுப் பள்ளியில் உயர்நிலை முடித்தார். பின் 1963-ஆம் ஆண்டு கும்பகோணம் வட்டம், திருப்பனந்தாள் காசிமடம் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து 4 ஆண்டுகள் படித்து தமிழ் வித்வான் புலவர் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு ஓராண்டு குமாரபாளையம் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.

 புலவர் பயிற்சி முடிந்ததும், 1968-இல் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தமிழாசிரியராக தம் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். அதன்பின் வளசையூர், சிங்களாந்தபுரம், மற்றும் நாமகிரிப்பேட்டை அரசுப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பணியாற்றும் போதே சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெற்றார். கடந்த 2000-ஆம் ஆண்டு நாமகிரிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

 புலவர் வெ.இரா.துரைசாமி கல்லூரி படிக்கும் போதிலிருந்தே தமிழ் இலக்கியம், கவிதை, வரலாறு, கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறையில் மிகுந்த ஆர்வம் உடையவர். 1972 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆய்வாளர் திரு. நாகசாமி ஐயா தலைமையில் நடந்த கல்வெட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டார். திரு. கொடுமுடி சண்முகம் ஐயா அவர்கள் இவரை கல்வெட்டுத் துறையில் ஊக்குவித்து வந்துள்ளார்.

 45 ஆண்டுகளுக்கு மேலாக சேலம், நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகளை படியெடுத்தும், கொல்லிமலை, போதமலை, கல்ராயன் மலை, அறுநூற்று மலை ஆகிய இடங்களில் கள ஆய்வு செய்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இவரால் கண்டறியப்பட்டுள்ளன. கல்வராயன் மலைப்பகுதியிலும் செக்கு கல்வெட்டு மற்றும் நடுகற்களைக் கண்டறிந்துள்ளார். பேருந்து அதிகம் இல்லாத அந்த காலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு நடந்தே சென்று கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார். மேலும் பல செப்பேடுகள், ஓலைச்சுவடிகளைப் படித்து உள்ளூர் வரலாற்றை அறிந்து ஆய்விற்கு பயன்படுத்தியுள்ளார்.

புலவர் வெ.இரா.துரைசாமி தஞ்சையில் நடைபெற்ற கல்வெட்டு நூற்றாண்டு விழாவில் “சேலம் மாவட்ட கல்வெட்டுகள் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் ஓர் கட்டுரை வாசித்தார். தமிழ்ப்பல்கலைக்கழகம், இந்திய கல்வெட்டுத் துறை, தொல்லியல் துறை, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை ஆகியவற்றின் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து சமர்ப்பித்துள்ளார். அத்துடன் ஏராளமான தமிழ் இலக்கிய, வரலாற்று பட்ட, பட்டய ஆராய்ச்சிமாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.   2009-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது தமது அருமை மாணவர் திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கல்வெட்டுகள், தொல்லியல் பற்றி உரை நிகழ்த்தினார்கள். 

புலவர் அவர்கள் மிகச்சிறப்பாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, எண்சீர் விருத்தம் ஆகிய மரபுக் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். 1972-இல் நாமகிரிப்பேட்டை தமிழ் இலக்கியமன்ற பொங்கல்விழாவில் கவிஞர் திரு. மேத்தா அவர்கள் தலைமையில் நடந்த பாட்டரங்கத்தில் கலந்துகொண்டு கொல்லிக்கிழான் என்றப் புனைப்பெயரில் கவிதை வாசித்தார்கள். மேலும் அவருடைய பல கவிதைகள் ஏர் உழவன் போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன. கோயில் குடமுழுக்கு, சீரமைப்பு ஆகியவற்றுக்கும் கடவுள் பெயரில் பாடல்கள் இயற்றியுள்ளார்கள்.


கல்வெட்டுகள் மட்டுமல்லாமல்,  செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகளை, சிற்றிலக்கியங்களைக் கொண்டு கோயில், ஊர், ஆறு,ஏரி போன்ற நில அமைப்பு ஆகியவற்றை விளக்கி உள்ளூர் வரலாற்றைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழ் இலக்கண, இலக்கியம், வரலாறு, தொல்லியல் தொடர்பான நூல்கள், பல அரிய, பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதும், படிப்பதும் அவருடைய பொழுதுபோக்கு. 


புலவர் வெ.இரா.துரைசாமி அவர்கள் ஈரோடு முனைவர் புலவர் செ.இராசு மற்றும் ஆசிரியர் தி.செ.பழனிவேல் அவர்களுடன் இணைந்து எழுதிய “கொங்கு நாட்டு வேளாளர் வரலாறு” என்ற நூல் 2003-இல் வெளியானது. மேலும் 2007-இல்  “ஏழூர் நாடு வரலாறு” என்ற நூலையும் எழுதியுள்ளார்கள். 


புலவர் வெ.இரா.துரைசாமி அய்யாவின் சாதனைகளைப் பாராட்டி சேலம் வரலாற்று ஆய்வு மையம் 2018-இல் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதினை அளித்தது.


இவ்வாறு தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும், கல்வெட்டு, தொல்லியலுக்காகவும் ஓய்வின்றி உழைத்த புலவர் வெ.இரா.துரைசாமி அய்யாவின் இதயம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் நாள் தனது துடிப்பை நிறுத்திக் கொண்டது. ஆனால் அவர் விட்டுச் சென்ற செய்திகள், செய்து வந்த பணிகள் அவரின் நினைவுகளை, பெருமைகளை, புகழை சந்திராதித்தவல் என்ற கல்வெட்டு வரிகள் போன்று சந்திர சூரியர் உள்ளவரை என்றும் உலகிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்.


இதோ அவரைப் பற்றிய ஒரு காணொலி: https://youtu.be/E4_weAy93GM



நினைவஞ்சலிச் செய்தி

இடைப்பாடி அமுதன் (எழுத்தாளர், நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர்)

நாமகிரிப்பேட்டை புலவர் வெ.இரா. துரைசாமி அவர்களுடான தொடர்பு எனக்கு எதேச்சையாக ஏற்பட்டது. அது, புலவர் செ. இராசு அவர்களின் இல்லத்தில் 2008 இல் ஏற்பட்டது.


‘எழுகரை 'சூரியகாங்கேயன்' புதினத்தை எழுதிய நேரம் அது... அதன் நீட்சி  பத்தாண்டுகளுக்கு மேல், அவரது மறைவு வரை தொடர்ந்தது.  கல்வெட்டுகளைத் தேடி அவர் அலைந்து, திரிந்து முடிந்த காலம் அது. சேலம் மாவட்டத்தில் மலை, மடுவு என்று தூரப் பிரதேசங்களிலும் கால் கடுக்க, நா வறண்டு போக, வயிற்றுப் பசி கிள்ள கல்வெட்டுகளைத் தேடியவர்.


அரிய நூல்கள் உள்ளிட்ட பல்வகை நூல்களை வீட்டில் அடுக்கி வைத்தது மட்டுமல்லாது, அவற்றைப் படித்து, பிறரைப் பார்க்கச் செய்தும், அவற்றிலிருந்து தயக்கமின்றி விளக்கம் சொல்லும் இயல்பும் கொண்டவர் அவர். நானும் அவரும் தனியே கொல்லிமலை, ஆறகழூர், மோரூர், எங்கள் வீடு உள்ளிட்ட இடைப்பாடிப் பகுதிகள்  என்று சுற்றியதும் உண்டு. பல சமயங்களில் அவரைத்தொடர்பு கொண்டு சேலம் மாவட்ட வரலாற்றில் சில கூரிய விவரங்களைக் கேட்டு அறிந்திருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் கலந்து கொண்டு மகிழ்வித்துள்ளார்.


அவரது எதிர்பாராத மறைவு சேலம் மாவட்ட கல்வெட்டு, வரலாற்று ஆர்வலர்களுக்கு பெரும் இழப்பாகும். நான் எழுதவிருக்கும் 'இடைப்பாடி- ஒரு வரலாற்றுக் களஞ்சியம்'  நூலை அவர் முதல் வாசகராகப் படிக்க வேண்டும் என நினைத்தருந்தேன்; அவரிடம் சொல்லியும் இருந்தேன். அது நிறைவேறாதது எனக்குத் தனிப்பட்ட இழப்பு....


 - இடைப்பாடி அமுதன் (எழுத்தாளர், நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர்)


வெ.இரா.துரைசாமி. #இவர் சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டு அகராதி

ம.ராஜா, பாலமேடு

இவர் வீட்டில் இரண்டு நூலகம் உண்டு ஒன்று அடுக்கி வைக்க பட்ட நூலகம். மற்றொன்று இவர்.


இவரின் மறைவு நாமக்கல் மாவட்ட வரலாறு அனாதையானது. 20 வருடம் எனக்கு கல்வெட்டு பற்றி ஆர்வம் ஏற்படுத்திய என்னுடைய ஆசான்.


- ம.ராஜா, பாலமேடு


புலவர் துரைசாமி ஐயாவிற்கு புகழஞ்சலி

பேராசிரியர் முனைவர் பொன் கதிரேசன்

நாமக்கல் மையமிட்ட மலைகளெல்லாம் தன் அறிவின் கலைகள் வழியாக அடையாளம் கண்ட கல்வெட்டு அறிஞரே!

மாணவர்கள் ஒன்றுகூடி எங்கள் மனதில் குடியிருக்கும் குருநாதர் உங்களுக்கு புகழ் நினைவு அஞ்சலி செலுத்துகின்றோம்!


நாமக்கல்லில் பிறப்பிடத்து ராசிபுரத்தில் ராசியான கட்டுரை தமிழ் சிந்தனையாளரே!

நாமகிரிப்பேட்டையில் நானிலம் போற்றுகின்ற நல்ல மாமனிதரே

இனிமேல் எங்கள் குருநாதர் உங்களை எங்கே காண்பது?


எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எங்களை நேரடியாக பார்க்கும் போதெல்லாம் அறிவு நலம் விசாரிப்பீர்! அன்பு நலம் பேசுவீர், பண்பு நலம் பகிர்வீர்!

நின்ற இடம் நகராமல் உங்களின் ஆளுமை சொல்லுக்கு அடிபணிந்து நிற்போம்.

இனி அந்த இனிய தமிழ் பேச்சை எங்கே நாங்கள் கேட்பது?


1998 ஆம் ஆண்டிலே மேல்நிலை வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் எங்களுக்கு தாங்கள் கூறிய ஒவ்வொரு சொல்லும் சொல் வெட்டாக எங்கள் மனதை 20 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறது. எம் போன்ற லட்சக்கணக்கான மாணவர்களின் லட்சியமாக திகழ்ந்த இலட்சிய தமிழறிஞரே!


வெள்ளக்கல்பட்டி வெள்ளை உள்ளம் படைத்த வள்ளலே!

இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து எங்களின் வாழ்க்கையை வலிமைப்படுத்துவீர் என்று எண்ணியிருந்த வேளையிலே தாங்கள் விண்புகழ் அடைந்த செய்தி கேட்டு நாங்கள் விரைந்து வந்தோம், கண்ணீர் மழையில் நனைந்தோம்.


இன்று ஓர் ஆண்டு நினைவஞ்சலி.


இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றில் நிலைத்து விட்ட உங்களுடைய பெயரும் புகழும் என்றும் மறையாது. புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் எல்லாம் நீங்கள் ஓடோடி சென்று வாங்கிய நூல்களின் வரிசையில் இன்று தாங்கள் ஆசையாய் கட்டிய வீட்டில் நூலகமாக காட்சி அளிக்கிறது.

நூலகத்தின் நூல்களின் வரிசையில் உங்களை காண்கின்றோம், நூல்கள் இங்கே இருக்கின்றது, 

ஆனால் நீங்கள் எங்கே ஐயா எங்கே?


பெற்றெடுத்த பிள்ளையாய் எங்களை தத்தெடுத்து நித்தம் நித்தம் அறிவு ஊட்டி பாசத்தை ஊட்டி 

நேசத்தை ஊட்டி வளர்த்த  நினைவில் வாழும் தெய்வமே!


உங்களின் பார்வை தான் எங்களுக்கு நேர் கொண்ட பார்வையாக இருக்கின்றது.

உங்களின் அறிவு தான் மாணவர்களாகிய எங்களுக்கு இன்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

ஆசிரியர்களாக பேராசிரியர்களாக நாங்கள் வளர்ந்து இருந்த போதிலும் உங்களின் அறிவு தான் எங்களின் பன்முக அறிவாக வளர்கின்றது. ஆனால் இன்றோ தாங்கள் இந்த மண்ணுலகில் இல்லை என்று எண்ணுகின்ற போது உடலும் உள்ளமும் தளர்கின்றது,


எங்களின் சிந்தைக்கு இனிய தந்தைக்கு ஏற்ற இனியதாய் பொன்னம்மாள் வளர்த்த வள்ளலே

தாயை விட்டு பிரிய தந்தை உமக்கு எப்படி மனம் வந்தது?

அமெரிக்கா அயல்நாடு சென்ற அருமை மகனை விட்டு விட்டு எங்கே சென்று உள்ளீர்?

திரும்பி வாருங்கள் நாங்கள் திசையெல்லாம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அன்பின் மகளை கண்மணியாய் வளர்த்து தலைமையாசிரியர் வரை தரம் உயர்த்தி அழகு பார்த்து விட்டு இப்பொழுது எங்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு இங்கே சென்று உள்ளீர் ஐயா.


தோரணம் கட்டி பேரப் பிள்ளைகளுக்கு திருமண திருவிழா காணும் காலம் வரை கூடவே இருந்து எங்களுக்கு குறிக்கோள் அமைத்து தருவீர் என்று எண்ணியிருந்த வேளையிலே,

எங்கே சென்றீர் ஐயா மாணவர்கள் நாங்கள் உங்கள் நினைவுகளை சுமந்து மன்றாடுகிறோம்

நீங்கள் இல்லாமல் இத்தினத்தில் மனம் வாடுகின்றோம்.


உலகப்புகழ் தமிழ் அறிஞர்களுக்கு தாங்கள் வழங்கிய நூல் ஆராய்ச்சி அரிய குறிப்புகள் தான் அவர்களுக்கு இன்று வரை மதிப்பும் மரியாதையும் மாலைகளாக தோளில் வலம் வருகின்றது.

தன்னை நாடி வரும் புலவருக்கு புகழ் பெருமை சேர்த்த புலவரே! வாரி வாரி வழங்கிய புரவலரே!


இருபதாண்டுகளுக்கு முன்பு நீங்கள் வகுப்பறையில் தமிழாசிரியர் உங்களின் சிரித்த முகத்தோடு மாணவர்களின் சிரித்த முகத்தோடு அன்புத் தமிழ் இதழ் விழிப்போடு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தந்த ஞான பெருக்கின் அறிவொளியே! புகழை விரும்பாத புகழுக்கு உரிய புலவரே!


இந்தப் பொன் கதிரேசனை பொன்னான மகனாக வளர்த்த இனிய தந்தையே

உங்களை எங்கே இனி காண்பது?

நன்றி மறவாமல் நாங்கள் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்துகின்றோம்.

சுய நினைவுகளை இழந்து துன்பத்தைத் தாங்கி தலை வணங்கி நிற்கின்றோம்!

என்னை பெற்றெடுத்த தந்தையோ சிறிய வயதிலேயே பிரிந்துவிட்டார்.

எனக்கு கற்றுக்கொடுத்த தந்தை தாங்களோ உரிய வயதிலேயே பிரிந்துவிட்டீர்!

புரிந்து படியுங்கள் புரிந்து படியுங்கள் என்று கூறுவீர்களே.

இப்பொழுது நீங்கள் பிரிந்து படியுங்கள் பிரிந்து படியுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்று விட்டீரோ?


உங்கள் உயிர் இந்த மண்ணுலகில் உள்ள வரை நாங்கள் உங்கள் சொல் மாறவில்லை.

நீங்கள் கற்றுக் கொடுத்த பாடம் மாறவில்லை. நீங்கள் உதவிய கொடை குணத்தை நாங்கள் மாறவில்லை.

நீங்கள் நேர்மையான பாதையில் கற்றுத்தந்த வீரநடையை நாங்கள் மாறவில்லை,

புத்தகத்தை தேடும் புத்தியை கற்றுத் தந்தீர் புத்தகம் வாங்கும் பழக்கத்தை நாங்கள் மாறவில்லை

புலமைக் காய்ச்சல் உண்டு என்று அறிவாற்றலின் வளர்ச்சி போட்டி உலகில் மெய்ஞானம் மலர் நீட்டி வாழ்க என்று வாழ்த்திய மரபை நாங்கள் மாறவில்லை. என்றும் நீங்கள் காட்டிய பாதையை நாங்கள் மாற மாட்டோம் ஏனென்றால் நாங்கள் உங்கள் மாணவர்கள்!


எல்லோரும் நலமுடன் வாழவேண்டும் என்று எங்களுக்கு வழிகாட்டி எங்களின் இதயத்துடிப்பு போல இருந்து எங்களை இயக்கிய  தமிழ் இயக்கமே!

மனனம் செய்யும் மாணவர்களை மாண்புமிகு மாணவர்களாக மாற்றிய தமிழறிஞர் தமிழாசிரியர்! 

தரணி போற்றும் தன்மானத் தமிழர் உங்களின் இனிய மாணவர்கள் எங்களின் இதயம்  துடித்துக் கொண்டிருக்கின்றது.


இந்த பூமி போற்றும் புலவர் எங்களின் குருநாதர் துரைசாமி ஐயாவின் புகழஞ்சலி நினைவுகளை சுமந்து....! 😭😭😭😭 🙏🏽


- பேராசிரியர் முனைவர் பொன் கதிரேசன்

உதவிப்பேராசிரியர், ஆய்வு நெறியாளர் (தமிழாய்வுத்துறை)

கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி

புதுக்கோட்டை மாவட்டம்.

தமிழாசானுக்கு அஞ்சலி

வாசிங்டன் டி.சி.யிலிருந்து கொழந்தவேல் இராமசாமி

எனது தமிழாசான் புலவர் வெ.இரா.துரைசாமி அய்யா அவர்கள் ஒரு மாபெரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தமிழ் கவிதைகள் எழுதுவதிலும் தமிழ் இலக்கியங்களைப் படித்து அவற்றைக் கற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வமுடையவர்கள்.


அய்யா அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து ஒரு ஆண்டு ஓடியிருந்தாலும் கூட அய்யாவைப் பற்றி நான் பலமுறை நினைப்பதுண்டு. அய்யாவின் எண்ணங்கள், அவரோடு நான் பழகிய நாட்கள் அனைத்தும் பசுமரத்தாணி போல் உள்ளன. 1972-ஆம் ஆண்டு சிங்களாந்தபுரம் பள்ளிக்கு அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து அய்யாவுடைய இறுதி மூச்சு வரை நான் பழகி வந்தேன்.


அவர்கள் வேண்டியது எல்லாம், பதிப்பிற்கு வராத நூல்கள் பலவற்றை பதிப்பிற்குக் கொண்டுவர வேண்டும்,புதுப்பிக்க வேண்டும் என்றும், தஞ்சை சரசுவதி மகாலிலும், சென்னை உ.வே.சா நூலகத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் ஓலைகள், அவைகளை எடுத்து நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்றும் ஆசைப்படுவார். 


ஆகவே இந்த தருணத்தில் அய்யாவுடைய நினைவை ஏந்தியிருக்கும் அனைவரும் அவர்கள் நினைத்ததை நடைமுறைப் படுத்துவதற்காக என்றும் அய்யாவின் உயிர் இறைநிழலில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.


- கொழந்தவேல் இராமசாமி


2 கருத்துகள்:

  1. கடந்த 2018-ம் பண்ணை குல வரலாற்றை ஆவண படமாக்கிய போது பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, கல்யாணி, மல்லூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரிடையாக எங்களுடன் பயணித்து பண்ணைக் குலத்தின் வரலாற்றை உலக அறிய செய்த அறிஞரின் சேவை காலத்தால் அழியாதது. அண்ணாருக்கு பண்ணை குலத்தார் என்றும் நன்றி கடன் பட்டுள்ளோம். அண்ணார் மறைந்தாலும் அவரது புகழ் என்றும் இவ்வுலகில் இருந்து மறையாது.

    அவருடைய பெயரே எனது பெயராக இருப்பதும் கூடுதல் மகிச்சியே

    ஊடக பணியில் துரைசாமி

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா! தங்களின் ஆவணப்படத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல். தங்களின் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சலைப் பகிர இயலுமா?

    பதிலளிநீக்கு