கொங்கு மண்டலத்தின் இருபத்துநான்கு நாடுகளுள் ஒன்று கீழ்க்கரைப் பூந்துறை நாடு. இதன் இணைநாடுகளுள் ஒன்று ஏழூர் நாடு. இவ்வூரைப்பற்றிய தொன்மைக்குச் சான்று பகர்வது தேவாரமாகும். கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் தம் தேவாரப்பதிகத்துள் வைப்புத்தலமாக ஏழூரைக் குறிப்பிடுகின்றார். அதனால் இன்றைக்கு 1300 ஆண்டுகட்கும் முன்பே தலப்பெருமை பெற்று விங்கியது எனலாம்.
இன்று ஏழூரில் முற்றிலும் அழிந்துப்பட்ட சிவன் கோயிலின் தூண்கள் மாரியம்மன் கோயிலருகில் உள்ளன. அதில் உள்ள கல்வெட்டுகள் அத்தூண்களைத் தானம் செய்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அவர்களின் பெயர்கள் வருமாறு:
1. வட கரையாற்றூர்ப்புல்லை வேட்டுவன கூத்தாடுந் தேவன் இருங்கோளநான் வலங்கை மீகாமன்.
2. பாராதாயன் நாராயணன் உமாசகிதனான திருவேங்கடத்து நம்பி.
இதில், திருவேங்கடத்து நம்பியைப்பற்றி நாமக்கல்லில் உள்ள மூன்றம் இராசராசன் கல்வெட்டில் குறிப்பிடப்படுவதால் இக்கோயில் கி. பி. 12 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
சிவபெருமானைத் தேசீசுரர் என்றும், திருமாலைத் தேசி நாராயணப் பெருமாள் என்றும் குறிப்பிடுவர். மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் இவ்வூர் 'நாடாழ்வார் நாட்டு ஏழூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு சுந்தரப்பாண்டியன் ஆட்சிக்காலத்தில் 'கொங்காள வீரசோழ மண்டலத்து நாடாழ்வார் நாட்டு ஏழூர்” என்றும், சுந்தரப்பாண்டியனின் பிற கல்வெட்டுகளில், 'வடகொங்கு ஏழூர் நாடு', என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாமக்கல் மலை மேல் உள்ள கோயில் கல்வெட்டு, அங்குள்ள எதிரிலிப்பெருமாளுக்கு ஏழூரில் நிலம் காணி கொடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. அதில் ஏழூர் சக்கரவர்த்தி என்ற அதிகாரியின் பெயர் உள்ளது.
ஏழூருக்கு மும்முடி சோழபுரம் என்ற பெயரும் வழங்கி வந்துள்ளளது. மும்முடி சோழன் என்பது முதல் இராசரசானுக்குள்ள பட்டப் பெயராகும். மூன்றாம் இராசேந்திரன் காலத்திய மேச்சேரியாம் பாளையம் (மல்லூர் அருகில்) கல்வெட்டும், நாமக்கல் பாறையில் உள்ள சுந்தரபாண்டியனின் கல்வெட்டும், சேலம் நெந்திமேடு கரிய பெருமாள் கரட்டின் வடக்கில் ஒரு தோட்டத்தில் உள்ள மூன்றாம் குலோத்துங்கள் காலத்திய கல்வெட்டும் இவ்வூரை மும்முடி சோழபுரம் எனக் குறிப்பிடுகின்றன.
இவ்வூரில் வணிகர்கள் சிறப்பாக இருந்துள்ளனர். வணிகக்குழுவைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டொன்றும் இவ்வூரில் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த வணிகர்கள் பல இடங்களில் கிணறு வெட்டியும், கோயில் எடுப்பித்தும் கோயில்களில் இறைவன் திருமேனியை எழுந்தருளுவித்தும் உள்ளனர். நாமக்கல் பாறைக் கல்வெட்டு, இவ்வூரில் இருந்த 'குலோத்துங்கசோழ சிலைய செட்டி' என்ற வணிகனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்காலத்தும் தமிழகத்தில் 'ஏழூர்ச் செட்டிகள்' என்ற பிரிவினர் உள்ளனர். இவர்கள் ஏழூரைச் சேர்ந்தவர்களோயவர் இதானல் ஏழூர் ஒரு காலத்தில் வணிகச் சிறப்புடைய இருப்பிடமாக விளங்கியதை அறியலாம்.
ஏழூரில் வாழ்ந்த கட்டிக் கவுண்டன் என்ற தலைவனைப் பற்றி ''கட்டி மகிபன் பள்ளு" என்ற சிற்றிலக்கியம் ஒன்றுள்ளது, ஏழூர், கல்யாணி, முதலிய ஊர்களைப்பற்றியும் இந்நூல் கூறுகிறது. இஃது இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டது எனலாம். ஏழூர் தேசி நாராயண பெருமாள் மீது கீரம்பூர் மதுரகவி அப்பாவு நாவலர் "தாய் மகள் ஏசல்" என்ற சிற்றிலக்கியத்தைப் படைத்துள்ளார். இப்புலவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவ்வூரில் உள்ள பேரேரியை கணிகையர் குலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் கட்டியதாகக் கூறுகிறது. கி. பி. 7ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி.19 ஆம் நூற்றாண்டுவரை சிறந்து விளங்கிய ஏழூர் இன்று ஒரு சிற்றூராகக் காட்சி தருகிறது.
“கன்னலுஞ் சென்னெல் முத்தங் கொழிக்கும்
காவில் தேன்மழை யாகத் துளிக்கும்
அன்னந் தாமரை வாவியுள் தங்கும்
அளிகள் கூடிக்கள் ளுண்டு மயங்கும்
பன்னு மந்தி பலாக்கனி தொட்டுப்
பறித்து மத்தள மென்றதைக் கொட்டும்
இன்னிலந் தன்னில் ஆதிக்கம் சேரும்
ஏழூர் வளநா டெங்கள் நாடே!”
- வெ.இரா.துரைசாமி
குறிப்பு: ஏழூர் நாடு வரலாறு முதலில் சுருக்கமாக 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த சேலம் மாவட்ட வரலாற்று ஆவண ஆய்வுக்குழுவின் செய்திமடலில் வெளியிடப்பட்டது. பின்னர் மேலும் சில செய்தி மற்றும் படங்களுடன் செப்டம்பர் 1, 1993 - இல் மாலைமுரசில் வெளிவந்தது. பின்னர் விரிவாக நூல் வடிவில் 2007 நவம்பர் 10 ஆம் நாள் "ஏழூர் நாடு வரலாறு மலர்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
J