புதன், 16 நவம்பர், 2022

கொல்லிமலை மரியாதை

வெ. இரா. துரைசாமி

சங்க காலத்தில் கொல்லிமலைப் பகுதி 'கொல்லி கூற்றம்' என்றும், இடைக் காலத்தில் ‘மழகொங்கம்' என்றும் வழங்கியது. சோழர் காலத்தில் கொங்கு வீர சோழ மண்டலத்துக் கொல்லிமலை நாட்டுக் கொல்லி மலை என்ற பிரிவிலும் அடங்கியிருந்தது. தற்காலத்தில் பதினான்கு நாடுகளைத் தன்னகத்துக் கொண்டதாக விளங்குகிறது. தற்போதைய ஒவ்வொரு நாடும் பல சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டதேயாகும். தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்கள் பலவும் கல்வெட்டுகளில் சிறு, சிறு மாற்றங்களுடன் உள்ளன. இக்காலத்தில் மேல் கலிங்கம், என்றும் பிலாந்தூர் என்றும் வழங்கப்படும் ஊர்கள் கி. பி. 11ஆம் நூற்றாண்டில், குற்றக நாடு; குச்சக நாடு என்ற பிரிவில் இருந்தன என்று கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

கொல்லிமலையில் வாழும் மக்கள், தாங்கள் காஞ்சிபுரத்திலிருந்து வந்ததாகவும், தங்களை மலையாளிகள் என்றும் கூறிக்கொள்கின்றனர். அறப்பள்ளி ஈச்வரர் கோயில் கல்வெட்டுகளில்

"கொல்லிமலை குற்றக நாடு மலையாள நாட்டோம்”
என்றும் 
“கொல்லிமலை நாட்டு மலையாளரோம்'


என்றும் இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இக்கல்வெட்டுகள் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அதனால் இம்மக்கள்  கொல்லிமலைக்கு குடியேறிய காலம் 11ஆம் நூற்றாண்டிற்கும் முன்பே எனலாம். சமண சமயம் காஞ்சிபுரத்தில் முதல் மகேந்திர வர்மனால் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் நலிவுற்ற காலத்தில் இவர்கள் இங்கு வந்து குடியேறியிருக்கலாம். கொல்லிமலையில் காணப்படும் சமண சமயத் தீர்த்தங்கரர்களின் சிலைகளைக் கொண்டும் இதை ஒருவாறு அறியலாம். 

காலப்போக்கில் கொல்லிமலை மக்களின் ஒரு பகுதியினர் கொல்லி மலையை விட்டு அண்மையிலுள்ள மலைகட்குக் குடி பெயர்ந்துள்ளனர். பரந்துபட்ட வளமான கொல்லி மலையில் வாழ வழியின்றி இம் மக்கள் வேறிடம் சென்றிருப்பர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. வேறு சமூக, அரசியல் காரணங்களினாலேயே இவர்களின் இடப்பெயர்ச்சி அமைந்திருத்தல் வேண்டும். 

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், சிங்களாந்தபுரம், அமரேந்திர ஈச்வரமுடையார் கோயிலில் உள்ள முதல் இராசேந்திர சோழனின் பத்தாம் ஆட்சியாண்டு (கி.பி 1022) கல்வெட்டு கொல்லிமலை மக்களின் இடப்பெயர்ச்சிக் கான காரணத்தை ஓரளவு விளக்க உதவுகிறது. 

கொல்லிமலை மேல், பிலாண்டூர் என்னும் ஊரைச் சேர்ந்த மக்களைக் கீழே சமவெளியில் உள்ள குறும்பரும், வன்னியரும், நலிந்து சிறைபிடித்துச் சென்றனர். சிறையினின்று மீட்சி பெற அம்மக்கள் தங்களின் ஊரான பிலாண்டூரில் தங்கட்குரிய நிலத்தை விற்று அத்தொகையைச் சிங்களாந்தபுரம் அமரேந்திர ஈச்வரர் கோயில் பண்டாரத்தில் சேர்ப்பித்தனர்.

"கொங்கு வீர சோழ மண்டலத்துக் கொல்லிமலை நாட்டுக் கொல்லி மலை மேல் குற்றக நாட்டு பிலாந்தூர் ஊரோம், எங்களைக் குறும்பரும், வன்னியரும் நலிந்து சிறை பிடித்துக் கொண்டு போகயில் சிறையினுக்கு இரட்க்ஷை வேண்டுமென்று கரிகால கணநாத வளநாட்டு வள்ளுவப்பாடி சிங்களாந்தபுரத்து அமரேந்திர ஈச்வரமுடைய மஹாதேவர்க்கு விற்றுக் கொடுத்து ஸ்ரீபண்டாரத்துக் கொண்ட பொன்" என்று அக்கல்வெட்டுக் கூறுகிறது.


சமவெளிப்பகுதியில் உள்ள வலிமைவாய்ந்த இனத்தினர் அடிக்கடி மக்களைத் துன்புறுத்தியதன் காரணமாக, கொல்லி மலை மக்கள் தொலைவில் உள்ள வேறிடங்கட்குக் குடி பெயர்ந்தனர் எனக் கொள்ளலாம்.


கொல்லிமலை மக்கள் தங்கள் நலனையும் பாதுகாப்பை யும் முன்னிட்டுக் குடியேறிய இடம் போதமலையாகும். இம்மலை கொல்லிமலைத் தொடரை ட்டிக் கொல்லி மலையிலிருந்து ஏறத்தாழ இருபது கல் தொலைவிலும், இராசீபுரத்தின் வடக்கும், சேலத்தின் தெற்குமாகக் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. போதமலை கொல்லிமலை அளவிற்கு உயரமும் வளமும் இல்லாதது. இருப்பினும் மக்கள் வாழ்தற்கேற்ற போதுமான நீர்வளமும் பள்ளத்தாக்கும் உடையது. இம்மலையில் கீழூர், மேலூர், குறிஞ்சியூர், கடமலை, சம்பூத்து ஆகிய ஊர்கள் உள்ளன. இம்மக்களும் தங்களை மலையாளிகள் என்றும், தாங்கள் கொல்லிமலையிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர், கொல்லிமலை மக்களைப் போலவே பழக்க வழக்கங்களும், மரபுகளும் உடையவர்கள். தங்கட்குள் உண்டாகும் சமூக நியாயங்களைத் தங்களின் பூர்வீகம்ப் பகுதியான கொல்லிமலை நாட்டுப் பட்டக்காரர்களைக் கொண்டே தீர்த்துக் கொள்வர். அங்ஙனம் சமக நியாயம் பேசவரும் கொல்லிமலைப் பட்டக்காரரும், கரைகாரர்களும் மாநாட்டினர் எனப்படுவர்

"ஸ்வஸ்தஸ்ரீ கோவிராசகேசரிபந்மரான திரு 

புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டியதேவற்கு 

யாண்டு 14-வது இராசீபுரப்பற்று சபையோ 

மும் நாட்டோமும் நகரத்தோமும் கருங்கா 

லிமலையில் சுக்கன்பூண்டி ஊர்க்கடமை பா

ற்கும் - ஓடிப் போகையில் இன்னாள் முதல் 

‘கொல்லிமலை மரியாதை' ஆண்டொன்றுக் 

கு குடிக்கொரு பணம் கொள்வதாகக் கல் 

வெட்டிக் குடுத்தோம். சபையோமு 

ம் நாட்டோமும் நகரத்தோமும்'


கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குப் பாண்டியன் இராசகேசரி வீரபாண்டியனின் பதினான்காம் ஆட்சியாண்டைச் (கி.பி. 1279) சேர்ந்தது இக்கல்வெட்டு. போதமலைக் கீழூரில் அண்மையில் கண்டறியப்பட்ட இந்தக் கல்வெட்டு இவ்விரு மலைவாழ் மக்கட்கும் உரிய தொடர்பை விளக்குகின்றது

அக்காலத்தில் போதமலை கருங்காலி மலை என்று வழங்கப்பட்டது. ஊர் சுக்கன் பூட்டி என்பது. கருங்காலி மலை சுக்கன் பூண்டியில் ஊர்க்கடமை பார்த்து வந்த ஆள் யாது காரணத்தாலோ ஓடிப்போய் விட்டான். அதனால் இராசீபுரம் பற்றுச் சபையாரும், நாட்டாரும், நகரத்தாரும் “இன்னாள் முதல் கொல்லி மலை மரியாதை ஆண்டொன்றுக்கு குடிக்கொருபணம் கொள்வதாக" என்று ஆணையிட்டுக் கல்வெட்டிக் கொடுத்தனர். கொல்லிமலை மக்கள் எவ்வாறு ஆண்டொன்றுக்குக் குடிக்கு ஒரு பணம் ஊர்க் கடமையாக வசூலித்துக் கொடுக்கின்றார்களோ அதே போல், கருங்காலிமலை மக்களும் தாங்களாகவே ஆண்டொன்றுக்குக் குடிக்கு ஒரு பணம் ஊர்க் கடமை வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்பது இதன் பொருள்

‘கொல்லிமலை மரியாதை’ என்பதற்கு: அதைப்போல, அதைப் பின்பற்றி, அந்த முறையில், என்ற பொருள் அமைந்துள்ளது. 

ஆய்குல மன்னர்களில் ஒருவனான,கோக்கருநந் தடக்கனின் பாத்திவ சேகரபுரத்துச் செப்பேடும்,

 

"காந்தளூர் மரியாதையால் தொண்ணூற்று ஐவர் 

சட்டர்க்குச் சாலையுஞ் செய்தான்" 


என்று கூறுகிறது. 


"காந்தளூரில் விளங்கிய சாலையை முன்மாதிரியாகக் கொண்டு பாத்திவ சேகரபுரத்திலும் ஒரு சாலையை அமைத்தான்'' என்பது பொருள். இங்குச் சாலை என்பது உணவுச்சாலை. 
கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்டவர்மனின் திருச்செங்கோட்டுச் செப்பேட்டிலும் இத்தகைய வாசகத்தைக் காணலாம். இக்குறுநிலமன்னன் சுந்தர சோழன், இராசராசன் ஆட்சிக் காலங்களில் கொல்லிமலைப் பகுதியில் ஆண்டு வந்தவன். இவன் நாமக்கல் வட்டம் தூசியூர்த் திருக்கற்றளியுடைய மஹாதேவர்க்குக் கொடுத்த நிவந்தத்தைப் பற்றி இச்செப்பேடு கூறுகிறது. அதில், 

        “தண்டங்குற்றமுள்ளது நந்திபுரமற்சாதி 
        கொள்வதாகவும்'' 
என்று வருகிறது.

“குற்றங்கட்கும், அபராதமாக விதிக்கப் பட வேண்டியவைகளுக்கும் நந்திபுரத்தில் செய்வது போலச் செய்யவும்” என்பது இதன் பொருள். நந்திபுரம் என்பது பழையாறையின் ஒரு பகுதி. “மேதகு நந்திபுர மன்னர் சுந்தர சோழர்" என்று வரும் வீரசோழிய மேற்கோள் செய்யுளால் சுந்தர சோழன் ஆட்சிக்காலத்தில் நந்திபுரம் தலைநகரமாக இருந்தது என்பதும், அங்கு நடைமுறையில் உள்ளவாறு தூசியூரிலும் கொள்க'' என்ற பொருளில் செப்பேட்டில் 'நந்திபுரமற்சாதி கொள்வதாகவும்' என்ற தொடர் வழங்கியுள்ளது. மற்சாதி, மரிசாதி, மருசாதி, மரியாதை என்பன ஒரே பொருளைத் தரும் வேறுபட்ட சொல் வடிவங்கள் ஆகும்.

ஆகவே, போதமலை மக்கள் தங்கள் முன்னோர்கள் கொல்லி மலையில் இருக்கும் பொழுது எவ்வாறு ஊர்க்கடமை செலுத்தினரோ அதைப்போலவே கருங்காலி மலையிலும் (கி.பி. 1279) செலுத்த வேண்டும் என்ற கருத்தில் இக்கல்வெட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் போதமலை மக்கள், கொல்லிமலையிலிருந்து கி.பி. 11ஆம் நூற்றாண்டின் பின்னும் கி.பி. 1279க்கும் முன்பும் போதமலையில் குடியேறினர் என்பதும், இவ்விரு மலை மக்கட்கும் உள்ள தொடர்பும் நன்கு விளங்கும்.
 
கி.பி. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்பேடு அண்மையில் போதமலையில் கிடைத்தது அதில், கொல்லி மலையைச் சேர்ந்த பைல் நாட்டுப் பட்டக்காரரும் பதினெட்டுக் கூரைகாரர்களும் போதமலைக் கீழூரில் உள்ள மசய காத்தாக்கவுண்டன் நியாயத்தைத் தீர்ப்பதற்காக வந்ததையும், மாநாட்டில், மசய காத்தாக் கவுண்டன் "உங்கள் பஞ்சாயம் எனக்குத் தேவையில்லை'' என்று கூறி மாநாட்டையும் மேலூர், சிரக்காளி அண்ணாமலைக் கவுண்டனையும் அவமானஞ் செய்ததையும், அதன் பின் மாநாட்டார், மசயக் காத்தாக்கவுண்டன், அவனைச் சேர்ந்த மூன்று வீட்டாருடைய விருதுகளையும், உரிமைகளையும் பறித்துவிட்டதையும் பற்றிக் கூறுகிறது


ஆதார நூற்கள் 

  1. திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை. 
  2. திருநாவுக்கரசர் தேவாரம்.
  3. தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி 3, பாகம் 4, எண் 212. 19, எண் 409. 
  4. கல்வெட்டு ஆண்டறிக்கை 1929-30 எண் : 499, 5001943-44 எண். 221
  5. கோவை . நா. தொல்பொருள் துறைப் பதிவு அலுவலர் திரு இரா. பூங்குன்றன் அவர்கள் கொடுத்த கல்வெட்டு பிரதி
  6. தென்னிந்திய கோயிற் சாசனங்கள் தொகுதி 3, பாகம் 2. 
  7. பாண்டியர் செப்பேடுகள் பத்து . 11, பாத்திவ சேகரபுரத்துச் செப்பேடு.


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

1 கருத்து: