மாடுகட்டி ஏர்உழுது
பாடுபட்டு வாழவெண்ணும் நெஞ்சம் - பசி
பக்குவமாய்ச் சேர்ந்ததிங்கே தஞ்சம்!
தொண்டியற்றிக் காலமெல்லாம்
மண்டுபுகழ்த் தேடிடவே
கொண்டிருந்தேன் என்மனத்தில் எண்ணம் - ஆசை
கூடவந்ததால் விளைவும் பின்னம்!
மாற்றலரைப் போர்க்களத்தில்
தோற்கடிக்கச் செய்திடு நல்
ஆற்றலினைப் பெற்றிருக்கும் காளை - பயம்
அணைத்ததனால் வந்தபெயர் கோழை!
சாத்திரத்தைக் கற்றறிந்து
ஆத்திரத்தை வென்றடக்கும்
பாத்திரமாய் நான்விளங்க லாச்சு - ஊர்
பைத்தியமாம் என்றுரைக்கும் பேச்சு.
இல்லறமே மக்களுக்கு
நல்லறமாம் என்றுரைக்கும்
சொல்லறத்தை நம்பிவிட்டேன் பாவி - துயர்
தோன்றியதால் ஏற்றுவிட்டேன் காவி.
எடெடுத்துப் பாட்டெழுதி
நாடகத்தை நான் நடிக்க
ஓடவிட்டேன் தாளெழுது கோலை - அஃது
உருவெடுத்ததாம் மரண ஓலை.
- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)
“முல்லைச்சரம்” - கவிதை ஏட்டில் வெளிவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக