வியாழன், 14 ஜனவரி, 2021

குவலயம் காக்கும் இறைவன்...!

நானோர் உழவன்! ஞால மருங்கில்

நற்பயிர் விளைத்திடும் உழைப்பாளி!

வானோ பிழையும் கார்முகில் கொண்டு

வாணிபம் செய்யும் வியாபாரி!

கானோ? வெளியோ? அதனைப் பற்றிக்

கவலைப் படுவதுங் கிடையாது!

ஊனோ? உயிரோ? மனிதர்க் குள்ளது

உழைப்பை நம்பி வாழ்கின்றேன்.


பள்ளி மிதித்து நூலைக் கற்றுப்

பாடங் கேட்டது கிடையாது!

துள்ளித் திரியும் இளமைப் போதில்

சோர்வைப் போக்கி ஏரென்னும்

வெள்ளிக் கோலில் நிலமாம் சுவடியில்

விளங்கக் கற்று மாந்தர்க்(கு)

அள்ளித் தந்திட உணவுப் பொருளை

அறிந்தது ஒன்றே போதாதா?


மாடி வாழ்வும் பஞ்சணை இன்பமும்

மனதிற் கொண்டது கிடையாது!

கோடிக் கணக்காய்ப் பசியாம் பிணியிற்

குமுறும் ஏழை நலங்காணத்

தேடிக் கொடுப்பேன் தக்க மருந்து!

சிந்தை மகிழ அதைவுண்டே

வாடிக் கிடப்போர் மகிழ்வைக் கண்டு

வையம் உழுதிடும் உழவன்நான்!


செல்வம் செருக்கு என்ற இவற்றைச்

சேர்ந்த இரண்டு மாடாக்கி

வல்ல உழைப்பை மேழியாம் என்று

வைத்தே உடலை நுகமாக்கிக்

கல்லும் மண்ணும் கலந்த இந்தக்

காசினி தன்னை அறிவென்னும்

நல்ல சாட்டைக் கொண்டே உழவை

நடத்திச் செல்லும் உழவன்நான்!


இரண்டு கையும் நெஞ்சத் துணிவும்

இருக்கும்போது சிலர் போலச்

சுரண்டி வாழும் எண்ணம் இல்லை

சோம்பல் என்பது துளியில்லை!

முரண்டு செய்யும் கயவரை ஏரில்

முடித்து மாடாய் ஓட்டிடவே

திரண்டு வாரீர்! வாரீர்! இந்தத்

திருநா டோங்க வழிஇதுவே!


தெய்வக் கோயிலும் கலையின் வாழ்வும்

தேசப் பண்பும் நான்சிந்தும்

மெய்யின் வியர்வை தன்னிற் புனிதம்

விளங்கக் காணீர்! நானோட்டும்

செய்யின் படைசால் தன்னிற் புரளும்

செல்வப் பெருக்கே மக்களெலாம்

உய்யும் வழிக்குத் திரண்டே வந்திடும்

உலகிற் செங்கோல் உழவன்நான்!


போரை நம்பிக் களப்பலி தந்து

புவியை ஆண்ட வேந்தருமென்

ஏரை நம்பிக் களப்பொலி கொண்டே

இருந்தா ரென்றே நானந்தச்

சீரைப் பாடி முன்னோர் சென்ற

திசையைத் தொழுது வானமெனும்

கூரைக் கடியில் வாழ்க்கை நடத்திக்

குவலயம் காக்கும் இறைவன்நான்!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

"ஏர் உழவன்" ஆண்டுமலரில் வெளிவந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக