ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பொங்கல் விழா - பாட்டரங்கம் - 17 சனவரி 1972

தமிழ் இலக்கிய மன்றம் - நாமகிரிப்பேட்டை

பொங்கல் விழா - பாட்டரங்கம் - 17 சனவரி 1972 

பொருள்: பானை - புலவர்.கொல்லிக்கிழான்.


தமிழ் வணக்கம்

“முத்தமிழே! தேன்சாறே! மூவேந்தர் தன்வளர்ப்பே!
இத்தரையின் மாமணியே! என்றென்றும் கொத்தாகப் 
பூக்கும் மலர்க்காடே! போற்றுகின்றேன் உன்னடிநான்
ஆக்கும் கவிதைக் கருள்.'' 

அவைத் தலைவர்

பாண்டிப் பழம்பதியில் பைந்தமிழுக் கென்றேதான் 

பூண்ட விரதப் பொலிவுடையாய்! ஈண்டெங்கள்

கொங்கில் உலவும் குளிர்நிலவே! பாட்டரங்கம் 

எங்கும் விளங்கும் இயற்றமிழே! மங்காதக் 

கோவை நகர்வாழும் கொஞ்சுதமிழ் மேத்தாஉன்

பாவைப் பணிந்திங்குப் பானைநான் போற்றுகின்றேன்.


அவையடக்கம்

மன்றில் நிறைந்திருக்கும் மாக்கவிஞர் சான்றோர்க்கும்
என்றன் வணக்கத்தை ஏற்கவென நான்பணிந்துப்

பழந்தமிழின் நற்றுணையால் பாட்டாரங்கம் ஏறுகின்றேன். 


குழந்தை பிறப்பதிலே கோளாறு உண்டானால் 

செவிலியரும் தாமறுவைச் சிகிச்சையினைச் செய்வரிங்குக்

கவிதை பிறப்பதிலே கஷ்டங்கள் உண்டானால்

அறுவை எனக்கல்ல! ஐயையோ! நீங்கள்தான்

பெறுவீரிங் கென்கவிதைப் பிரவசத்தில் முதற்குழந்தை! 

தப்பிப் பிழைத்தாலும் தாயார்க்குக் கண்டமதை 

ஒப்பியே வந்துள்ளேன். உங்கள்முன் பேசுகின்றேன்.


வெள்ளிப்பொன் பித்தளையும் வெண்கலமும் வீறாப்பாய்த்

துள்ளி எழுந்தெங்கும் தோற்றமிடும் காலத்தில் 

சூத்திரங்கள் ஏதுமின்றிச் சொற்சிலம்பமின்றி வெறும்

பாத்திரமாம் வேட்கோவன் பானைதனைப் பாடுகின்றேன்.


பானை பேசுகின்றது

வட்டத் திகிரி வாகனத்தில் நான்பிறந்து 
சுட்டப் பொருள்நான். தொழிலாளி கைப்பாவை!
சோற்றுத்தேன்
தான்சுவைக்கச் சூழ்ந்தேழை மக்களெனைப்
போற்றுகின்ற தேன்கிண்ணம். பூவுலகக் காமதேனு.

மனித இனப்பயிர்தான் வையகத்தில் வேரூன்றப்
புனித நீர்ப்பாய்ச்சும் பூவுலகக் கங்கையும்நான்.
உழைக்கும் கரங்கள்! உதிரநீர்க் கண்களுடன்
பிழைக்கும் ஆத்மாக்கள்! பேச்சில்லா வாய்ப்பூச்சி!
மோழை எனப்பிறர்தான் முடிவெடுத்த மறச்சாது!
ஏழைக்குத் தோழன்நான். ஏனென்றால் நானவர்போல்
திரண்ட பொருள்படைத்த செல்வரெலாந் தான்கொழுக்க
சுரண்டப் படுபொருள்நான். தொழிலாளி கைப்பாவை

பட்டாள வீரன் பனிவரையின் உச்சியிலே 
கட்டோடு போராடக் காத்திடுமோர் மெய்க்கவசம்!
போர்முனையில் வாலாட்டும் பொல்லாத வெம்பகையை
ஊர்முனைக்குள் வாராமல் ஓட்டுகின்ற ஆற்றலினைத்
தேடிக் கொடுக்கின்ற தீரர்களின் தம்வயிறு
வாடிக் கிடக்காமல் வள்ளன்மை செய்கின்ற
வீரம் பெருக்கும் வெடிக்காத பீரங்கி!
பாரம் சுமக்கின்ற பாட்டாளி தான்பசியால் 
கும்பி எரியக் குடல்காய்ந்தே காலமெல்லாம்
வெம்பியே சாக்காட்டில் வீழாமற் காப்பவன்நான்!

கூரைக் குடில்களிலே கூத்தாடும் பிஞ்சுளமென்
பேரைச் செவிமடுத்துப் பிஞ்சுகரம் நீட்டிஎன்னுள்
சோற்றுப் பருக்கையின்றித் துன்பத்தால் என்னுடலைத்
தூற்றி உருடுட்டிடுவார். சோர்வின்றி அச்சிறுவர்
உள்ளம் குளிர்ந்திடவே ஓரொருநாள் கஞ்சிதனை
அள்ளிப் பருக அளித்திடுமோர் வள்ளல்நான்!

என்னை வறிதாக்கி எத்தனையோ பேர்வயிறு
தன்னை நிரப்புகின்ற தாராளப் பேர்வழிநான்!.
சொந்தமும் பாசமெலாம் சுற்றமும் நண்பர்களும்
எந்தன் வயிறுநிறைந் திருந்தால்தான். இவ்வுலகில்
தொண்டின் பெயரால் துரைத்தனங்கள் செய்பவர்க்கும்
உண்டு கொழுத்தே ஊர்மிரட்டி வாழ்பவர்க்கும் 
மாடங்கள் ஏழடுக்கும் வண்ணப்பூச் சித்திரநற்
கூடங்கள் கட்டிக் குடியிருக்கும் பேர்களுக்கும் 

கண்ணீரைச் சிந்திக் காலமெல்லாம் தம்வயிற்றைத்
தண்ணீரால் ஆக்கித் தமதுயிரைக் காப்பவர்க்கும்
காலப் பெருவெளியில் காசிழந்து தான்பிச்சைக் 

கோலம் அணிந்தவர்க்கும், குற்றங்கள் செய்பவர்க்கும்

ஞானப் பெருங்கடலில் நாளெல்லாம் நீந்துதற்கு

மோனத் தவமியற்றி முத்தியினை ஏற்பார்க்கும்

ஊறு வாராமல் உண்டியென நாளும்நற்

சோறு வழங்குகின்ற சோஷலிசப் பானைநான்!


தொப்பை பெருக்கிச் சுகங்காணும் மானிடர்கள்

தொப்பை சுருங்குவதும் தோற் கூடாய் மாறுவதும்

எந்தன் விளயாட்டே. எல்லோரும் என்னிடத்துச்

சொந்தம் கொண்டாடிடுவார். சோற்றுக்கே ஏங்கிடுவார்.

பானை வயிறென்றே பாரோர் பகர்வதெந்தன்

பானை நிறைந்தால்தான்! பார்த்தீரா என்மகிமை?


பொங்கலன்று என்வயிறு பொங்குவதால் மக்களெலாம்

தங்கள் மனத்துயரைத் தான்மறந்தே வாழவைக்கும்

சொர்க்கப்பதிநான். சுகங்காணும் பூங்காற்று!

வர்க்கப் போராட்டங்கள் வையகத்தில் தோன்றுவதற்குக்

காரணமும் நானேதான். கட்டுரைப்பேன் செல்வரெலாம்

பூரணமாய் ஏழைப் பொருள்பறித்துத் தம்வயிற்றுப்

பானை நிரப்புவதால் பாட்டாளி மக்களுடைப் 

பானை நிரம்பாமல் பட்டினியால் வாடுகின்றார்.


வேலை நிறுத்தங்கள்! வீரப்போ ராட்டங்கள்!

ஆலைத் தொழிலாளர் ஆக்குகின்றார். ஆனால்நான் 

வேலை நிறுத்தத்தை மேற்கொண்டால் மாந்தருடல்

ஆலை இயங்கிடுமா? ஆவிதான் நிலைத்திடுமா


ஊர்வாயை மூட உலைமூடி இல்லென்றே

யாரெங்கும் பேசுகின்றார். என்னவோர் அறியாமை!

நான்வாயை மூடிவிட்டால் யார்வாய்தான் பேசிவிடும்?

ஊன்பாயா திவ்வுடல்தான் உதிர்ந்துவிடுஞ் சருகாகும்


மண்ணில் உருவாகி மண்ணாகிப் போகும்நான்

எண்ணில் மனிதர்க் கிரக்கத்தால் சொல்கின்றேன்! 

உங்கள்கதை  நெருப்பில் ஓய்ந்துவிடும். ஆனால்நான்

பொங்கும் நெருப்பில் புகுந்துவந்த பத்தினிநான்!

உங்கள் முடிவுரையில் உண்டாகும் முன்னுரைநான்!

உங்கள் தொடர்கதையை ஓட்டுகின்ற பத்திரிக்கை


இன்றைக்குப் புத்தரிசி ஏற்கின்றேன். மீண்டும்நான்

என்றைக்கு நல்லரிசி எற்றிடுவேன் என்பதனை

விண்டுரைப்பார் இல்லை. விதியை வலிதென்றே

கொண்டிருப்பேன் எண்ணம். குடிசைமகன் தான்பசியால்

எத்தித் திருடிடுவான். என்பானைக் கூழ்குடிக்கக் 

கத்திதனைப் பாய்ச்சிக் கடுங்கொலைகள் செய்திடுவான்

சட்டந்தான் என்செய்யும்? சாட்சியங்கள் தேடிமிகத்

திட்டமுடன் தண்டனைகள் தீட்டிவிடும். அவ்வளவே! 


என்வயிற்றைத் தான்காட்டி எத்தனையோ தேர்தலிலே 

தன்வயிற்றைக் காத்தோர் சரித்திரத்தை நானறிவேன்

பட்டினியைத் தீர்த்துப் பசிப்பிணியைப் போக்கிடவே

திட்டங்கள் ஏராளம் திட்டுகின்றார். ஆனால்என்

பானை நிறையவில்லை. பட்டினியும் தீராதுப்

பூனை அடுப்புறங்கும் பூத்திருக்கும் காளான்கள்


பஞ்சத்தின் சின்னம் பசிக்கொடுமைத் தூதுவனாம்

நெஞ்சத்தில் நிற்கும் நெடுங்கணக்கு வாய்பாடு.

என்னய்யா மண்பானைக் கித்தனையா வீண்பெருமை?

என்றே முனகுகின்றீர். என்காதில் கேட்கிறது.


நெருப்புக்குப் பிள்ளைநான்! நெல்முதலாம் பண்டங்களின்

இருப்புக்கும் காவல்நான்!. ஏழைக் குடிசைகளில்

வேலையே இல்லை. விடுமுறைகள் ஏராளம்!

மூலையே என்னிருக்கை! மூண்ட கரிப்புகைதான்

ஆடையாம் எந்தனக்(கு) அடைப்பான்தான் முக்காடு!

கூடைக் குறுணைகளே! கொள்முதலாம் வாய்க்கரிசி!


வீடாளு கின்றவள்நான்! வெறும்பானை யாகிவிட்டால் 

நாடாளும் மன்றம் நடந்திடுமா? சட்டசபைக்

கூட்டந்தான் கூடிடுமா? கோட்டைவெளி யிலார்ப்

பாட்டங்கள் செய்திடுவார் பட்டினிக்குத் தேர்தலிலே

முத்திரைகள் மாறிவிடும்!. மூட்டைப் பதுக்கலெலாம்

இத்தரையில் சந்தியினில் ஏற்றிடுவர். ஆளுகின்ற

ஆட்சிதனை மாற்றி அரசியலைத்தான் கலக்கி 

நீட்சிபெறவே புரட்சி நீட்டிடுவார். சாண்வயிற்றுப்

பட்டினிப் பட்டாளம் படைநடத்தி வந்துவிட்டால்

சட்டந்தான் என்னாகும்? தனியுடைமைத் தூளாகும்.


வான்கடல்தான் பொங்கிவிட்டால் வையகம்தான் என்னாகும்

ஊனழிந்து பல்லுயிரும் ஊருலகும் பாழாகும்.

கார்மேகம் தான்பொங்கக் காசினிதான் நீர்பெருக்கால்

சீரழியும். சோழகுலச் செல்வியவள் கண்ணகியும்

பொங்கியதால் வெஞ்சினத்தால் பூவுலகில் மாமதுரைக்

துங்கமுடைப் பாண்டியனார் தொல்லுலகில் தம்முயிரை

ந்துப் புகழ்பெற்றார். என்பானை பொங்குமெனில்

மாந்தர் மகிழ்ந்திடுவார். வாட்டங்கள் தீர்ந்திடுவார்


நல்லவற்றைக் கற்பானை! நானிலத்தைக் காப்பானை!

அல்லவற்றைத் தீய்ப்பானை! அல்லல்களை விப்பானை!

நாட்டுக் குழைப்பானை! நற்றமிழைக் கற்றுநல்ல

பாட்டுப் படிப்பானைப் பாவங்கள் தீர்ப்பானை!

ஏரைப் பிடிப்பானை! இல்லறத்தில் நிற்பானை!

சீரை விளைப்பானை! தெய்வந் துதிப்பானை! 


இன்னுமிந்தப் பூவுலகில் எத்தனையோ பானைகளை

பின்னின் றியக்குகின்ற பேர்பெற்ற பானைநான்!

சல்லிக் கட்டுக்காளை சாடியே வருவதனால்

தள்ளி விலகுகின்றேன் தான்.


பாட்டரங்கத் தலைவர்:

திரு.மு.மேத்தா. B.A. அவர்கள்.

தமிழ்த்துறை. அரசுகலைக்கல்லூரி. கோவை 


முன்னிலை:

பொன்.சுப்பையன். M.A. அவர்கள்.

தமிழ்ப்பேராசிரியர். திருவள்ளுவர் அரசுகலைக்கல்லூரி

இராசீபுரம். 


பாட்டரங்கத்தின் பொருள்கள்:

1. நெல் - இறைதாசன்.

2. கரும்பு - செயக்குமார்

3. மஞ்சள் - தமிழேந்தி

4 . பானை - கொல்லிக்கிழான்

5. சல்லிக்கட்டு - செந்தமிழ் மாறன்.

6. ஏர் - தமிழ்ச் சாத்தன்.


- புலவர். கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


1 கருத்து: