செவ்வாய், 24 டிசம்பர், 2024

நாமகிரிப்பேட்டை சில வரலாற்று குறிப்புகள்

 

நாமகிரிப்பேட்டை என்று நினைக்கும் போதே காதில் நாதஸ்வரத்தின் இனிய ஒலி கேட்கிறது. இந்திய துணை கண்டத்தையே தனது இசை வெள்ளத்தில் மிதக்க விட்ட பெருமைக்குரிய கிருஷ்ணன் பிறந்த ஊர். உலக அளவில் நாமகிரிப்பேட்டைக்கு முகவரி தந்தவர் அவர். மஞ்சள், மரவள்ளி கிழங்கு உற்பத்தி, சேகோ பேக்டரிகள், அப்பளம் உற்பத்தி என பல்வேறு முகங்களுடன் இன்றைய நாமகிரிப்பேட்டையை அனைவருக்கும் தெரியும்.

நாமகிரிப்பேட்டை பற்றிய பழமையாக தகவல்களை தெரிந்து கொள்ள வரலாற்று ஏடுகளை பார்ப்போம். ஏறக்குறைய கி.பி.17ம் நூற்றாண்டில் சேலம், நாமக்கல் பகுதிகளை மைசூர் உடையார் அரச மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது நாமகிரிப்பேட்டையும் 1673 முதல் 1704 வரை மைசூர் உடையார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அவ்வப்போது ஆட்சி மாறினாலும் நீண்ட காலம் மைசூர் ஆளுகையே இருந்தது. அந்தந்த அரசுகளின் அரசப்பிரதிநிதிகள் குன்றத்தூரில் (தற்போதைய சங்ககிரி) இருந்து கொங்கு நாட்டுப் பகுதிகளை கண்காணித்து வந்தனர். 


17ம் நூற்றாண்டில் கிழக்கு திசையில் இருந்து வீர சைவ ஜங்கமர் மரபைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது குழுக்களுடன் எருதுகளில் வணிக பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். கொல்லிமலைத் தொடரும், போதமலைத் தொடரும் இணையும் இடமான மெட்டாலா கணவாய் அப்போது ஆயில்பட்டி கணவாய் என அழைக்கப்பட்டது. கணவாய் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் இருப்பார்கள் என்ற பயத்தால், இறங்கும் முன்பு மேட்டில் உள்ள ஆலமரத்தில் (தற்போதைய மெட்டாலா) அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு கூட்டமாகத்தான் கணவாயை கடப்பார்கள். அப்படி ஜங்கமர் வணிகர்கள் கடந்து வந்து கொண்டிருந்தனர். கணவாய்க்கு கீழே அரசு சார்பில் சுங்க சாவடி அமைக் கப்பட்டிருந்தது. வணிக பொருட்களுக்கு சுங்க வரி வசூலிப்பது வழக்கம். சுங்க சாவடி காவலர்கள் அதிகமாக வரி கேட்டதால், வீர சைவ ஜங்கமர் குழு தலைவர் நாமக்கல்லில் இருந்த அதிகாரியிடம் முறையிட முடிவு செய்தார்.


குழுவில் இருந்த சிலருடன் நாமக்கல் புறப்பட்டார். அங்கு சென்ற போது, சுங்க வரி வசூல் தொடர்பான அதிகாரி குன்றத்தூரில் (சங்ககிரி) இருப்பது தெரிந்தது. அங்கிருந்து கிளம்பும் முன்பு நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் ஆகியோரை வழிபட்டனர். செல்லும் காரியம் வெற்றி பெற்றால் நாமகிரி தாயார் பெயரில் நிரந்தரமாக ஏதாவது செய்வது என உறுதி எடுத்துக் கொண்டனர்.


குன்றத்தூரில் இருந்த அதிகாரி, வீர சைவ ஜங்கமர் குழு தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுங்க வரி இல்லாமல் சுற்றுவட்டார பகுதியில் வணிகம் செய்து கொள்ளலாம் என்றும் அனுமதியளித்தார். அதற்கான உத்தரவையும் வழங்கினார். மகிழ்ச்சியுடன் வந்த தலைவர் தனது குழுக்களுடன் வரி கட்டாமல் இன்றைய நாமகிரிப்பேட்டை எல்லைக்குள் நுழைந்தார். வனப்பகுதியை ஒட்டி சில இடங்களில் மட்டுமே உழவு தொழில் இருந்தது. ஊரின் தெற்கு பகுதியில் நீரோடையும் மேட் டுப்பகுதியில் சில குடியிருப்புகளும் மட்டுமே இருந்தன. நீர்வள ஆதாரத்துடன் இருந்த அந்தப் பகுதியில் வீர சைவர் ஜங்கமர் மரபினர் தங்கிக் கொள்ள முடிவு செய்தனர்.


அரசாட்சி செய்யும் அதிகாரிகள் தங்கும் பகுதி கோட்டை என்றும், குடிமக்களுடன் வணிகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு பேட்டை என்றும் அழைப்பது அப்போதைய வழக்கம். வணிகர்கள் தங்கிய இந்த பகுதிக்கு நாமகிரி தாயார் நினைவாக நாமகிரிப்பேட்டை என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் 

சுங்கம் வசூல் செய்த பகுதியில் ஆஞ்சநேயருக்கு குடவரை கோயிலும் அமைத்தனர். வீர சைவ ஜங்கமர் மரபினர் நாமகிரிப்பேட்டை வழியாக செல்லும் போது தங்குவதற்கு ஈசானிய மடம் என்ற பெயரில் மடம் ஒன்றை ஏற்படுத்தினர், அதற்கு அருகிலேயே குருமார்களை அடக்கம் செய்யவும் இடம் ஒதுக்கப்பட்டது. விரைவில் தங்களது விருப்ப தெய்வமான வீரபத்திர சுவாமிக்கு கோயிலும் கட்டினர். சிவராத்திரியன்று வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது உண்டு. தென்னிந்தியாவிலேயே ஜங்கம சமுதாயத்தின் குல தெய்வமான வீரபத்திரர் சுவாமிக்கு நாமகிரிப்பேட்டையில்தான் கோயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


வீரபத்திர சுவாமி, மடம் ஆகியவற்றுக்கு இடம் வழங்கிய சீராப்பள்ளி ஜமீனை பார்க்க மரியாதை நிமித்தமாக வருடம் ஒரு முறை குருமார்கள் சீராப்பள்ளி செல்வார்கள். அங்கு ஜமீன் அவர்களுக்கு பாத பூஜை செய்து தேவையான உதவிகளை செய்வார். ஜமீன் முறை ஒழிக்கப்பட்ட போது, இந்த பழக்கமும் மறந்து போனது. 


வீர சைவ ஜங்கமர் மக்களின் தெய்வமாகிய வீரபத்திரர் மீது ஒரு சதகம் (100 பாடல்கள்) பாடப்பட்டுள்ளது. பாடலை வேப்பிலைப்பட்டி வையாபுரி அய்யர் மகன் உபாத்தியாயர் பாலுசாமி அய்யர் இயற்றியுள்ளார்.  இவர் வல்லான மகாராஜ என்ற நாடகத்தையும் இயற்றி, 1888ல் அரங்கேற்றமும் செய்துள்ளார். வீரபத்திரர் சதகத்தில் ஒவ்வொரு பாடலும் 'நாமகிரி வீர பத்திர மகா தேவ தேவனே!" என்று முடிவடையும், இதில் ஒரு பாடலில் நாமகிரிப்பேட்டை பற்றி சிறப்பையும் குறிப்பிட்டுள் ளனர். ஓலைச்சுவடியாக இருந்த இந்த பாடல்கள் பிறகுதான் அச்சு வடிவில் வந்தது. 


நாமகிரிப்பேட்டையில் தொடக்கத்தில் கடைவீதி, நடுவீதி ஆகியவை மட்டுமே இருந்துள்ளன, கடைவீதியில் வணிகமும், நடுவீதியில் குடியிருப்புகளும் இருந்தன. பிறகுதான் ஆத்தூர் மெயின் ரோடு உருவானது. வடக்கே கோரையாறு, தெற்கே பெரியாறு என்று இரண்டு ஆறுகளுக்கு இடையே நாமகிரிப்பேட்டை பகுதி மிகவும் செழிப்பாக இருந்துள்ளது.


1880ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட மேனுவல் புத்தகத்தில் இதற்கான குறிப்புகள் உள்ளன. கொல்லிமலையில் இருந்து வெட்டி எடுத்துவரப்பட்ட இரும்பு தாது மண், நாமகிரிப்பேட்டையில் தரம் பிரித்து காய்ச்சி பட்டறை மேடு என்ற பகுதியில் ஆயுதங்களாகவும், உழவு கருவிகளாகவும் தயாரிக்கப்பட்டது. அதனால்தான் நாமக்கல் ரோடு பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு வரை இரும்பு கழிவு மண் கொட்டப்பட்டிருந்தது. இதனை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் அறிவார்கள். அந்த காலத்திலேயே பஞ்சாயத்து, காவல் 

நிலையமும் வெள்ளிக்கிழமையில் வாரச்சந்தையும் இருந்துள்ளன. ஆரிய வைஸ்ய இன மக்கள் அதிகமாக வாழ்ந்துள்ளனர். ஒரு தொடக்கப்பள்ளி, 24 மாணவர்கள் ஒரு ஆசிரியருடன் இயங்கி வந்துள்ளது குறிப்பிடப்பட் டுள்ளது.


பின்னர், உழவு தொழில் செய்து வந்த பிள்ளை, சேர்வை இன மக்கள் நாமகிரிப்பேட்டை நகரில் நடுவீதியில் குடி புகுந்தனர். அதன் பிறகு கடைவீதியில் பிரசித்தி பெற்ற நடுவீதி மாரியம்மன் கோயில் கட்டப் பட்டது. கோயிலுக்கான நிலத்தை 1919ம் ஆண்டு பாவாடை பிள்ளை, சபாபதி சேர்வை, கோபால் பிள்ளை, அங்கமுத்து பிள்ளை, கோவிந்தம் பிள்ளை, சின்னசாமி பிள்ளை ஆகியோர் வாங்கியுள்ளனர். 1934ம் ஆண்டு தேர் செய்யப்பட்டு மாரியம்மன் திருவீதி வலம் வந்தது. 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று அனைத்து இன மக்களும் மாரியம்மன் கோயில் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதம் இறுதி வாரத்தில் தேர் திருவிழாவும் அக்னி குண்டம் இறங்கும் விழாவும் நடக்கும். இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 18 பட்டிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வர்.



- வெ.இரா.துரைசாமி, ஆசிரியர் ஓய்வு.


நாமகிரிப்பேட்டை சிறப்பு மலர்

தமிழ்முரசு நாளிதழுடன் இலவச இணைப்பு

6 சனவரி 2014, சேலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக