சேலம் மாவட்டம் கொல்லிமலை, சித்தூர்நாட்டு முன்னாள் ஊர்த்தலைவர் வெள்ளைய கவுண்டர் மகன் வெங்கடாசலம் என்பவரிடம் இச்செப்பேடு உள்ளது. இவர் தற்போது சேலம் மத்திய தந்தி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். தங்கள் குடும்பத்தின் சொத்தாக இதைக் கருதுகிறார். இரண்டு ஏடுகளில் இரு பக்கத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏட்டின் மேல் இடது மூலையிலும் சிறிய துளை உள்ளது. செப்பேட்டைக் கோர்த்து வைக்க வாகாக இத்துளைகள் உள்ளன. செப்பேட்டுச் செய்திகள் முழுமை பெறவில்லை. அதனால் இவ்விரண்டேடுகளைத் தவிர மீதம் ஒன்றோ இரண்டோ ஏடுகள் இருத்தல் வேண்டும். இச்செப்பேடு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பொன்மாடத்தாண்ட மணிமுடி மகாராஜர் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் எழுதப்பட்டது.
முதல் ஏடு-முதல்பக்கம்
1. ஸ்வஸ்தி ஸ்ரீ பொன்மாடத்தாண்ட மணி முடிமாஹாராஜர் ஆட்
2. சிக்குச் செல்லா நின்ற யாண்டு ஏழாவது கொல்லிம
3. லை மேல் குச்சக நாட்டுக் கருங்கயத்து நகரத்துக்
4. குப்புலவெல்லை தெரித்த பரிசாவது திருவற
5. ப்பள்ளி தேவர் நிலத்தோடு கருங்கயத்தார் நில
6. த்தோடெல்லையாவது கட்டியந் சாத்தந் ஆறெய்
7. பிடித்துக் குவளைக் கழந்நிக்கேய் வன்து நட்ட
8. புதலேய் புதாலாக மீகரைக் கருங்கயத்து நகரத்தாரது கு
9. வளை கழந்னித்தலைக் கழந்னியூற்றுக்கேய் சென்று
முதல் ஏடு - இரண்டாம் பக்கம்
10. கிழக்கு நோக்கி இற்றியொடு கல்லுக்கேய் சென்று கிழ
11. க்கு நோக்கி சென்று திடுதிடுக்கை அறைக்கேய் சென்று கிழக்கு
12. நோக்கி சென்று வடவூர் ஏரியேய் சென்று பூதப் பருதைய்க்
13. கேய் செந்று சேற்றாம்பலொடுடறெக்கேய் செந்று கல்
14. லுரலுக்கேய் சென்று ஆற்றுக் கேய் செந்றற்றது. தேவர் நிலத்தி
15. ல் எல்லை கருங்கயத்து நகரத்துக்கு வலப்பெருகோடு எல்
16. லையாவது வடக்கு நோக்கி செந்று ஆறாறெய் வுற்றது கருங்
17. கயத்து நகரத்தார்க்கும் பெருங்கறைக்குமே யெல்லை
18. யாவது வடக்கு நோக்கி ஆறாறெய் செந்றறருவிக்கே அற்ற
19. து பெருங்கறைய் கோட்டை எல்லை கருங்கயத்து
இரண்டாம் ஏடு - முதல்பக்கம்
20. நகரத்தாரொடு அருவியூரொடு மெல்லையாவது அருவி பு
21. னைத்துறையில் நின்றேறிக் கள்ளாரந் பள்ளி குந்று
22. க்கேய் வந்து இந்நிரபாடெல்லாம் நகரத்தாரது அந்நி
23. டாடு அருவியூரது கடுகுகால் குந்றுக்கேய் வந்து ஆற்று
24. க்கேய் வந்து ஆற்றி நின்று மயிலாடிப் பருதைக்கேய் வ
25. ந்து கற்கடைக்கேய் வந்து கற்க்கடை மேலை இற்றி
26. கல்லுக்கேய் வந்து ஊமையந் வாரை தலை செட்டுக்
27. கேய் வந்து நுணர்க்கற்றைக் கறாய்க்கேய் வந்து கடறு
28. கேய் வந்து வெள்ளைக்கல்லுக்கேய் வந்து நெட்டறை ஆடி
29. க்கேய் வந்து விழுத்தியலூற்றுக்கேய் வந்து பெரிய
30. வாறைக்கேய் வந்து எருவம்புல்லொடறைக்கேய்
இரண்டாம் ஏடு - இரண்டாம் பக்கம்
31. வந்து வடக்கு நோக்கி கீழருக்கறைக்கேய் வந்து ந
32. ன் நலப்பருதைக்கேய் செந்று தியாவகையார் எல்லை
33. க்கேய் சென்றறது. அருவியூரார் எல்லை கருங்கயத்து நக
34. ரத்தாரொடு தியாவகையாரொடெல்லையாவது பால்லுண்
35. டந் பருதைக்கேய் செந்று பூண்டியது கல்லுக்கேய்
36. சென்று கல்லுருட்டி ஆறே செந்று பெகறங்ககேய்
37. செந்று ஆறாறாறெய் செந்று இழிந்துப் பள்ளத்துக்
38. கேய் செந்றறது தியாவகையார் கோட்டை எல்லைய்
39. பூண்டியர்கொடு கருங்கயத்து நகரத்தாரொடெல்
40. லையாவது ஆற்று நின்றுத் தெற்க்கு நோக்கி
விளக்கக்குறிப்பு:
கொல்லிமலை குச்சகநாட்டுக் கருங்கயம் என்ற ஊரின் எல்லையும், திருவறப்பள்ளி தேவர் நிலத்து எல்லையும் இதில் குறிப்பிடப்பட்டு அறுதி செய்யப்படுகின்றன. நிலத்தின் எல்லை, அருவி, பாறை, ஆறு, குன்று, ஏரி, கழனி, பருதை, கிராய் முதலியவற்றைக் கொண்டு விளக்கப்படுகிறது. மலைப்பகுதியில் இவ்விடங்களே இருத்தல் முடியும். பருதை, கிறாய் என்பன மலைப்பகுதியில் உள்ள சமவெளியையும், பயிர் செய்யப்படும் நிலத்தையும் குறிக்கும். கட்டியன் சாத்தன் என்ற பெயரும் உள்ளது. பெருங்கிறாய்க் கோட்டை, தியாவகையார்க்கோட்டை என்ற கோட்டைகளும் இதில் குறிப்பிடப்படுகின்றன.
கருங்கயம்:
தற்போது குச்சகநாடு என்ற பிரிவு வழக்கில் இல்லை. கொல்லிமலையில் உள்ள பதினான்கு நாடுகளில் அரியூர் நாட்டைச் சேர்ந்த மேல் கலிங்கம் என்ற ஊரே இங்குக் குறிப்பிடப்படும் கருங்கயம் ஆகும். கருங்கயம் அறப்பள்ளி ஈசுவரர் கோயிலிலிருந்து வடமேற்கில் மூன்று கல் தொலைவில் உள்ளது. "மேல் கலிங்கம் கருங்கயத்து நகரத்து" என்னும் தொடரால், இவ்வூர் அக்காலத்தில் வணிகர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது எனலாம்.
மேலும் 'கருங்கயத்து நகரத்துப் பல குடிகளாய்க் கடவ பொன்' என்றும் அறப்பள்ளி ஈச்வரர் கோயில் கல்வெட்டும் இக்கலிங்கத்தில், வணிகர்களேயன்றிப் பல்வேறு குடிகளும் இருந்துள்ளனர் என்பதைத் தெரிவிக்கின்றது. ‘வெருனூர் அறப்பள்ளி செட்டி' என்றும், 'கொல்லிமலை நாட்டு ஐந்நூற்றுவர் ரக்ஷை’, என்றும் அறப்பள்ளி ஈச்வரர் கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுவதால், கொல்லி மலையில் வணிகர் குழுக்கள் இருந்தமை உறுதி செய்யப்படுகின்றது.
வரலாற்றில் புதியதாக பொன்முடி மாடத்தாண்ட மணிமுடி மஹாராஜன் என்ற தலைவன் பெயர் காணப்படுகிறது. ஆட்சியாண்டு கொடுத்துச் செப்பேடு வெளியிடும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றவனாக இருந்துள்ளான். அறப்பள்ளி ஈச்வரர் கோயில் கல்வெட்டில் 'பொன்னேரி வர்மன்' என்ற பெயர் வருகிறது. அப்பொன்னேரிவர்மனும் இப்பொன்மாடத்தாண்ட மணிமுடி மகாராஜரும் ஒருவராக இருத்தல் வேண்டும். மற்றபடி இப்பெயரில் மலையிலும் கீழேயும் தொடர்புடைய செய்திகள் கிடைக்கவில்லை. கொல்லிமலையின் தெற்கில் எருமைப் பட்டியை ஒட்டிப் பொன்னேரி என்ற சிற்றூர் உள்ளது. ஒருவேளை இவ்வூர் இத்தலைவன் பெயரில் ஏற்பட்டதாக இருத்தல் வேண்டும்.
மேல் கலிங்கத்தில் சோழமுடையான் கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது. இது சேலமுடையான் என்றும் வழங்கப் படுகிறது. பழமையான இக்கோயில் அண்மைக்காலத் திருப்பணியினால் முற்றிலும் மாறுபட்ட, சாதாரணக் கட்டடமாக உள்ளது. இக்கற்களின் சுண்ணாம்புப் பூச்சுக்குள் சில கல்வெட்டுத் தொடர்கள் தொடர்பின்றி உள்ளன. “தூணிப்பதக்கு", “கருங்கயத்து நகரத்து", என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவை கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இக்கோயில் சோழ அரசன் ஒருவனாலோ அல்லது அவன் பெயரிலோ கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அண்மையில் உள்ள அறப்பள்ளி ஈச்வரர் கோயிலில் உத்தம சோழன் தொடங்கிப் பல சோழ அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. செம்பியன் மாதேவியார் நூறு கழஞ்சு பொன்னைக் கொல்லிமலையில் உள்ள பன்னிரண்டு ஊரவரிடம் கொடுத்து, அதன் வட்டியைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளன்று வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ததைப் பற்றி உத்தமசோழன் கல்வெட்டுக் கூறுகிறது. அப்பன்னிரண்டு ஊர்களில் கருங்கயமும் ஒன்று. சோழமுடையான் கோவிலின் அருகில் கல்செக்கு ஒன்றுள்ளது. அதில், "ஸ்வஸ்திஸ்ரீ இச்செக்கு உள்ளூர் மாதேவர்க்கு குடுத்தேந் அறப்பள்ளி சாத்தநேந்” என்ற கல்வெட்டுள்ளது. அறப்பள்ளி என்ற இறைவன் பெயருடன் தம் குலப்பெயரையும் குறித்துள்ளான். செப்பேட்டிலும் கட்டியன் சாத்தன் என்ற பெயர் வந்துள்ளது. வாசலூர்ப்பட்டியில் செக்கில் உள்ள மற்றொரு கல்வெட்டில், பன்றி சாத்தன் என்ற பெயர் உள்ளது. இன்றும் மலைவாழ் மக்களிடையே வழங்கும் குலப்பிரிவுகளில் 'சாத்தன்' என்பதும் ஒன்றாகும்.
சோழமுடையான் கோவிலின் சற்று மேற்கில் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. சமணாண்டிப்பாட்டன் என்று தற்போது மக்கள் வழங்குகின்றனர். கோவில் இருந்து அழிந்து போன சுவடுகள் ஆங்குள்ளன. சமண தீர்த்தங்கரர் சிலையிலிருந்து சற்று வடக்கே சோலையில் அழகிய துர்க்கையின் சிலை உள்ளது. ஏறக்குறைய நான்கடி உயரமுள்ள இச்சிலை அழகிய வேலைப்பாடு கொண்டது. இச்சிலையைத் தற்கால மக்கள் கொல்லிப்பாவை என்று கூறுகின்றனர். கொல்லிப்பாவைக்கும் இத்துர்க்கை சிலைக்கும் தொடர்பில்லை. இத்துர்க்கை சிலைக்குப் போகும் வழியில் ஐயனாரின் சிற்பம் உள்ளது. இதுவும் புதரடைந்து கிடக்கின்றது.
மேற்கண்ட செய்திகளைக் கொண்டு பார்க்குமிடத்துக் கருங்கயம் என்ற ஊர் வணிக இருப்பிடமாகவும், பல்வகைச் சமயங்களின் நிலைக்களனாகவும் சிறப்புப் பெற்றிருந்தது எனலாம்.
- வெ.இரா. துரைசாமி, நாமகிரிப்பேட்டை.
சூலை 1997-இல் வெளியிட்ட ஆவணம் இதழ் 8-இல் வெளிவந்தது.
இணைப்பு: https://www.tamilheritage.org/Aavanam/Aavanam08.pdf