ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நாமக்கல் கூலிப்பட்டி சோழர்கால வீர நடுகற்கள்

 நாமக்கல் அருகே வீர கற்கள் கண்டுபிடிப்பு

தினமலர் (22-நவம்பர்-1982)

தஞ்சை, நவ. 22 - ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு மிக முக்கியமான சோழர்கால நடுகற்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத் துறையினர் முதல்முறையாகப் படி எடுத்து வந்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிப் புலவர் வெ.ரா.துரைசாமி அளித்த தகவலின்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்நடுகற்கள் இரண்டும் படிஎடுக்கப்பட்டன. 

கி.பி. 907ம் ஆண்டில் சோழநாட்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மதுரைகொண்ட முதல் பராந்தகன் காலத்தைச் சேர்ந்ததாக முதல் நடுகல் கருதப்படுகிறது.


கொடுக்கமங்கலத்து ஊராழ்வான் சடையமரையனுடைய கால்நடைகளைக் கவர்ந்து கொள்ள, தந்தை சடையமரையன் மகனைக் காப்பாற்றும் பொருட்டு கொடுக்கமங்கலத்தூராழ்வானுடன் போர் செய்து மரணம் அடைகிறான். பின்னர் தந்தை சடையமரையனுக்கு மகன் ஆரையன் ஆயிரவன் நடுகல் எடுத்தான். ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்களத்தரையன் என்று பட்டம் பெற்று கொடுக்கமங்கலத்தில் வாழ்கின்றான். 


ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 964) பகைவர்கள் கொடுக்கமங்கலத்து ஊர்க் கால்நடைகளைக் கவர்ந்து கொண்டுசெல்ல வந்தபோது ஏற்பட்ட போரில் இளஞ்சிங்களத்தரையனான ஆரையன் ஆயிரவன் மரணம் அடைகிறான் ஏகவீரமுத்தரையன் என்பவன் ஆரையன் ஆயிரவனுக்கு நடுகல் எடுத்து முன்பு நடப்பட்டி ருந்த தந்தையாரின் நடுகல் அருகிலேயே நட ஏற்பாடு செய்து நட்டகல் இரண்டாம் நடுகல் ஆகும். 


இன்றும் நாமக்கல் அருகே கூலிபட்டிப் பெருமாள் கோயிலின் தெற்கே தந்தை, மகன் ஆகியோருக்கு எடுத்த நடுகற்கள் இரண்டும் அருகருகே இருப்பது காண்போருக்கு வியப்புக்குரியதாக விளங்குகிறது.

 

10ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இடைப்பகுதியிலும் நாமக்கல் பகுதி பேரரசுச்சோழர்கட்கு உட்பட்டிருந்ததும் தெரிகிறது. இக்கல்வெட்டு அக்கால மொழிநடையை ஆராய மிகவும் பயன்படும். “தந்தை மகனைச் சேமஞ் செய்து எதிரேய் குடந்து சென்று பட்டான்" என்ற தொடரும், "கற்பொறிப்பிச்சான்" என்ற தொடரும் "வீரபாண்டிகன்", “கலிகாலச்சோழன்" "வீரமுச்சரையன் கல்லு நாட்டுவிச்சான்" என்ற தொடர்களும் மொழியியல் ஆய்வுக்கு மிகவும் உதவும் தொடர்களாகும். கால்நடைகளைக் குறிக்க ”காலி” என்ற சொல் குறிக்கப் பெற்றுள்ளன. "ஆரை" என்பது நாமக்கல்லின் பழைய பெயராகும். 


சிற்பத்தில் வில், அம்பு, வாள் இவைகளைப் பெற்ற வீரர்களின் ஆடை, அணிகலன்கள், தலையலங்காரம் ஆகியவை 10ம் நூற்றாண்டின் கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வுக்கு மிகவும் உதவுபவை. இவை குறித்துத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. 


பத்தாம் நூற்றாண்டில் நாமக்கல்லில் மகனுக்காகப் போரிட்டு வீரமரணம் எய்திய தந்தை சடையமரையன் பழங்கால ஆயுதங்களுடன்.


- 22-நவம்பர்-1982 தினமலரில் வெளிவந்த செய்தி


கல்வெட்டுப் பாடங்கள்


தெற்கில் உள்ள நடுகல்:

“ மதிரை  கொண்ட கோப்பரகேசரிக்கு

…………………

கொடுக்க

  மங்கலத்

தூராழ்வன்

சடையமரைய

ன்  காலி கொ

ள்ள மகனை

ச் சேமஞ்

     செய்து

    எதிரே

    ய் குட

    ந்து

    சே

 ரப்பட்டா

  ன் ச

  டைய

   மரை

   யன் மக

ன் ஆரை

யன் ஆயி

  ரவன்

  கற் பொ

    றிப்

      பிச்

  சான் தந்

தை யா

ரைச்

சாத்தி ”


வடக்கில் உள்ள நடுகல்:

“  வீரபாண்

 டிகனை எறிஞ்

சு தலை கொ

   ண்ட கலி

கால சோழ

  ற்குச் செல்லா

    நின்ற யா

    ண்டு நாலா

   விது கொ

        டுக்க

         மங்

         கல

   த்தா

       ர்க்கும் ஆரைய

 ன்      ஆயிர

     வனான

        இளஞ்

   ங்கமு

         த் தரை

       யன் த

       ன் னூ

       ர்க் கா

         லி……

   ………….

   ………….

   ………….

   ………….

 விருன …… க

 வீர முச்சரை

யன் கல்லு

நாட்டு விச்சா

       ன் "



- வெ.இரா.துரைசாமி