வெள்ளக்கல்பட்டி மாரியம்மன் ஊஞ்சல் பாட்டு
சீதமிகு எழில்செறிந்த கொல்லிச் சாரல்
திகழ்கின்ற நற்பதியாம் பக்திப் பெருக்கால்
வேத ஒலிதான் முழங்கும் வெள்ளக்கல் பட்டி
வேளாண்மைக் குடிகளுடன் பல்தொழிலோர் நிறைந்த
நீதிமிகு மேன்மக்கள் சிறந்தே வாழ
நெறிபிறழா தருள் சுரக்கும் மாரியம்மா!
போதம்மிகு ஆலயத்தில் குடிகொண் டிங்குப்
பொன்னூஞ்சல் ஆடிடுவாய்!
தாலே தாலேலோ!
வானாரும் மாமலையாம் கொல்லி என்னும்
மலையதனை ஒருபக்கக் தூணாய் நாட்டித்
தேனாரும் சோலைகள்சூழ் போத மலையைத்
திடமாக ஒருதூணாய்த் தெரிய நாட்டிக்
கானாரும் பசிறிமலை விட்டம் ஆகக்
கற்பித்துப் பொற்பலகை தன்னைச் சேர்த்து
மீனாரும் நல்விழியாள் மாரி யம்மா!
மேவுகின்ற பொன்னூஞ்சல் ஆடிடுவாய்
தாலே தாலேலோ!
பச்சை மரகதங்கள் பன்னரிய முத்துக்கள்
பார்ப்பார் மனங்கவரப் பார்வைக்குக் கூசுகின்ற
இச்சைப் படும்படியாய் எழிலார்ந்த நவமணிகள்
எல்லாம் பதித்திட்ட எழிலான நல்வடங்கள்
பச்சைப் பசும்பொன்னால் பாரித்த இருக்கையிலே
பணிந்தோர்க்கு வரமளித்துப் பாவங்கள் போக்குகின்ற
விச்சை கலையரும் மேன்மையுடை மாரியம்மா!
விரும்பியே பொன்னுஞ்சல் மேவிடுவாய்
தாலே தாலேலோ!
தேவர் முனிவர் அட்ட திக்குப் பாலரும்
தேடியே வந்து திசைநோக்கிக் கைதொழுது
பூவுலகம் வாழ்ந்திடவே உன்னை வேண்டிப்
போற்றுகின்றார் பொன்னூஞ்சல் தன்னைப்பற்றி
யாவருமே தொட்டாட்ட மறைகள் ஓத
எழிலான வெள்ளக்கல் பட்டி தன்னில்
மேவுகின்ற மரியம்மா! உலகம் காக்கும்
வித்தகியே பொன்னுஞ்சல் ஆடிடுவாய்
தாலே தாலேலோ!
இந்திரனும் தேவியுடன் வடம்தொட் டாட்ட
இமவானும் உமையவளும் வடம்தொட் டாட்ட
சந்திரனும் சூரியனும் வடம்தொட் டாட்ட
செகம்காக்கும் திருமாலும் வடம்தொட் டாட்ட
பந்தமுடன் தர்மகர்த்தா ஊர்க் கவுண்டர் காணியாட்சி
பக்தியுடன் அடிதொழுது வடம்தொட் டாட்ட
சுந்தரம்சேர் வெள்ளக்கல் பட்டி மேவும்
துர்க்கையவள் மாரியம்மா! ஆடிடுவாய் பொன்னுஞ்சல்
தாலே தாலேலோ!