புதன், 24 டிசம்பர், 2025

கொல்லிமலைச்‌ செப்பேடு

ஆவணம் இதழ் 8, 1997

சேலம் மாவட்டம் கொல்லிமலை, சித்தூர்நாட்டு முன்னாள் ஊர்த்தலைவர் வெள்ளைய கவுண்டர் மகன் வெங்கடாசலம் என்பவரிடம் இச்செப்பேடு உள்ளது. இவர் தற்போது சேலம் மத்திய தந்தி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். தங்கள் குடும்பத்தின் சொத்தாக இதைக் கருதுகிறார். இரண்டு ஏடுகளில் இரு பக்கத்திலும் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏட்டின் மேல் இடது மூலையிலும் சிறிய துளை உள்ளது. செப்பேட்டைக் கோர்த்து வைக்க வாகாக இத்துளைகள் உள்ளன. செப்பேட்டுச் செய்திகள் முழுமை பெறவில்லை. அதனால் இவ்விரண்டேடுகளைத் தவிர மீதம் ஒன்றோ இரண்டோ ஏடுகள் இருத்தல் வேண்டும். இச்செப்பேடு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பொன்மாடத்தாண்ட மணிமுடி மகாராஜர் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் எழுதப்பட்டது. 

முதல் ஏடு-முதல்பக்கம் 

1. ஸ்வஸ்தி ஸ்ரீ பொன்மாடத்தாண்ட மணி முடிமாஹாராஜர் ஆட் 

2. சிக்குச் செல்லா நின்ற யாண்டு ஏழாவது கொல்லிம 

3. லை மேல் குச்சக நாட்டுக் கருங்கயத்து நகரத்துக் 

4. குப்புலவெல்லை தெரித்த பரிசாவது திருவற 

5. ப்பள்ளி தேவர் நிலத்தோடு கருங்கயத்தார் நில 

6. த்தோடெல்லையாவது கட்டியந் சாத்தந் ஆறெய் 

7. பிடித்துக் குவளைக் கழந்நிக்கேய் வன்து நட்ட 

8. புதலேய் புதாலாக மீகரைக் கருங்கயத்து நகரத்தாரது கு 

9. வளை கழந்னித்தலைக் கழந்னியூற்றுக்கேய் சென்று


முதல் ஏடு - இரண்டாம் பக்கம் 

10. கிழக்கு நோக்கி இற்றியொடு கல்லுக்கேய் சென்று கிழ 

11. க்கு நோக்கி சென்று திடுதிடுக்கை அறைக்கேய் சென்று கிழக்கு 

12. நோக்கி சென்று வடவூர் ஏரியேய் சென்று பூதப் பருதைய்க் 

13. கேய் செந்று சேற்றாம்பலொடுடறெக்கேய் செந்று கல்

14. லுரலுக்கேய் சென்று ஆற்றுக் கேய் செந்றற்றது. தேவர் நிலத்தி 

15. ல் எல்லை கருங்கயத்து நகரத்துக்கு வலப்பெருகோடு எல் 

16. லையாவது வடக்கு நோக்கி செந்று ஆறாறெய் வுற்றது கருங் 

17. கயத்து நகரத்தார்க்கும் பெருங்கறைக்குமே யெல்லை 

18. யாவது வடக்கு நோக்கி ஆறாறெய் செந்றறருவிக்கே அற்ற 

19. து பெருங்கறைய் கோட்டை எல்லை கருங்கயத்து


இரண்டாம் ஏடு - முதல்பக்கம் 

20. நகரத்தாரொடு அருவியூரொடு மெல்லையாவது அருவி பு 

21. னைத்துறையில் நின்றேறிக் கள்ளாரந் பள்ளி குந்று 

22. க்கேய் வந்து இந்நிரபாடெல்லாம் நகரத்தாரது அந்நி 

23. டாடு அருவியூரது கடுகுகால் குந்றுக்கேய் வந்து ஆற்று 

24. க்கேய் வந்து ஆற்றி நின்று மயிலாடிப் பருதைக்கேய் வ 

25. ந்து கற்கடைக்கேய் வந்து கற்க்கடை மேலை இற்றி 

26. கல்லுக்கேய் வந்து ஊமையந் வாரை தலை செட்டுக் 

27. கேய் வந்து நுணர்க்கற்றைக் கறாய்க்கேய் வந்து கடறு 

28. கேய் வந்து வெள்ளைக்கல்லுக்கேய் வந்து நெட்டறை ஆடி 

29. க்கேய் வந்து விழுத்தியலூற்றுக்கேய் வந்து பெரிய 

30. வாறைக்கேய் வந்து எருவம்புல்லொடறைக்கேய் 


இரண்டாம் ஏடு - இரண்டாம் பக்கம் 

31. வந்து வடக்கு நோக்கி கீழருக்கறைக்கேய் வந்து ந 

32. ன் நலப்பருதைக்கேய் செந்று தியாவகையார் எல்லை 

33. க்கேய் சென்றறது. அருவியூரார் எல்லை கருங்கயத்து நக 

34. ரத்தாரொடு தியாவகையாரொடெல்லையாவது பால்லுண் 

35. டந் பருதைக்கேய் செந்று பூண்டியது கல்லுக்கேய் 

36. சென்று கல்லுருட்டி ஆறே செந்று பெகறங்ககேய் 

37. செந்று ஆறாறாறெய் செந்று இழிந்துப் பள்ளத்துக் 

38. கேய் செந்றறது தியாவகையார் கோட்டை எல்லைய் 

39. பூண்டியர்கொடு கருங்கயத்து நகரத்தாரொடெல் 

40. லையாவது ஆற்று நின்றுத் தெற்க்கு நோக்கி 

விளக்கக்குறிப்பு: 

கொல்லிமலை குச்சகநாட்டுக் கருங்கயம் என்ற ஊரின் எல்லையும், திருவறப்பள்ளி தேவர் நிலத்து எல்லையும் இதில் குறிப்பிடப்பட்டு அறுதி செய்யப்படுகின்றன. நிலத்தின் எல்லை, அருவி, பாறை, ஆறு, குன்று, ஏரி, கழனி, பருதை, கிராய் முதலியவற்றைக் கொண்டு விளக்கப்படுகிறது. மலைப்பகுதியில் இவ்விடங்களே இருத்தல் முடியும். பருதை, கிறாய் என்பன மலைப்பகுதியில் உள்ள சமவெளியையும், பயிர் செய்யப்படும் நிலத்தையும் குறிக்கும். கட்டியன் சாத்தன் என்ற பெயரும் உள்ளது. பெருங்கிறாய்க் கோட்டை, தியாவகையார்க்கோட்டை என்ற கோட்டைகளும் இதில் குறிப்பிடப்படுகின்றன

கருங்கயம்: 

தற்போது குச்சகநாடு என்ற பிரிவு வழக்கில் இல்லை. கொல்லிமலையில் உள்ள பதினான்கு நாடுகளில் அரியூர் நாட்டைச் சேர்ந்த மேல் கலிங்கம் என்ற ஊரே இங்குக் குறிப்பிடப்படும் கருங்கயம் ஆகும். கருங்கயம் அறப்பள்ளி ஈசுவரர் கோயிலிலிருந்து வடமேற்கில் மூன்று கல் தொலைவில் உள்ளது. "மேல் கலிங்கம் கருங்கயத்து நகரத்து" என்னும் தொடரால், இவ்வூர் அக்காலத்தில் வணிகர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது எனலாம்

மேலும் 'கருங்கயத்து நகரத்துப் பல குடிகளாய்க் கடவ பொன்' என்றும் அறப்பள்ளி ஈச்வரர் கோயில் கல்வெட்டும் இக்கலிங்கத்தில், வணிகர்களேயன்றிப் பல்வேறு குடிகளும் இருந்துள்ளனர் என்பதைத் தெரிவிக்கின்றது. ‘வெருனூர் அறப்பள்ளி செட்டி' என்றும், 'கொல்லிமலை நாட்டு ஐந்நூற்றுவர் ரக்ஷை’, என்றும் அறப்பள்ளி ஈச்வரர் கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுவதால், கொல்லி மலையில் வணிகர் குழுக்கள் இருந்தமை உறுதி செய்யப்படுகின்றது. 

வரலாற்றில் புதியதாக பொன்முடி மாடத்தாண்ட மணிமுடி மஹாராஜன் என்ற தலைவன் பெயர் காணப்படுகிறது. ஆட்சியாண்டு கொடுத்துச் செப்பேடு வெளியிடும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றவனாக இருந்துள்ளான். அறப்பள்ளி ஈச்வரர் கோயில் கல்வெட்டில் 'பொன்னேரி வர்மன்' என்ற பெயர் வருகிறது. அப்பொன்னேரிவர்மனும் இப்பொன்மாடத்தாண்ட மணிமுடி மகாராஜரும் ஒருவராக இருத்தல் வேண்டும். மற்றபடி இப்பெயரில் மலையிலும் கீழேயும் தொடர்புடைய செய்திகள் கிடைக்கவில்லை. கொல்லிமலையின் தெற்கில் எருமைப் பட்டியை ஒட்டிப் பொன்னேரி என்ற சிற்றூர் உள்ளது. ஒருவேளை இவ்வூர் இத்தலைவன் பெயரில் ஏற்பட்டதாக இருத்தல் வேண்டும். 

மேல் கலிங்கத்தில் சோழமுடையான் கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது. இது சேலமுடையான் என்றும் வழங்கப் படுகிறது. பழமையான இக்கோயில் அண்மைக்காலத் திருப்பணியினால் முற்றிலும் மாறுபட்ட, சாதாரணக் கட்டடமாக உள்ளது. இக்கற்களின் சுண்ணாம்புப் பூச்சுக்குள் சில கல்வெட்டுத் தொடர்கள் தொடர்பின்றி உள்ளன. “தூணிப்பதக்கு", “கருங்கயத்து நகரத்து", என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவை கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இக்கோயில் சோழ அரசன் ஒருவனாலோ அல்லது அவன் பெயரிலோ கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அண்மையில் உள்ள அறப்பள்ளி ஈச்வரர் கோயிலில் உத்தம சோழன் தொடங்கிப் பல சோழ அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. செம்பியன் மாதேவியார் நூறு கழஞ்சு பொன்னைக் கொல்லிமலையில் உள்ள பன்னிரண்டு ஊரவரிடம் கொடுத்து, அதன் வட்டியைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளன்று வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ததைப் பற்றி உத்தமசோழன் கல்வெட்டுக் கூறுகிறது. அப்பன்னிரண்டு ஊர்களில் கருங்கயமும் ஒன்று. சோழமுடையான் கோவிலின் அருகில் கல்செக்கு ஒன்றுள்ளது. அதில், "ஸ்வஸ்திஸ்ரீ இச்செக்கு உள்ளூர் மாதேவர்க்கு குடுத்தேந் அறப்பள்ளி சாத்தநேந்” என்ற கல்வெட்டுள்ளது. அறப்பள்ளி என்ற இறைவன் பெயருடன் தம் குலப்பெயரையும் குறித்துள்ளான். செப்பேட்டிலும் கட்டியன் சாத்தன் என்ற பெயர் வந்துள்ளது. வாசலூர்ப்பட்டியில் செக்கில் உள்ள மற்றொரு கல்வெட்டில், பன்றி சாத்தன் என்ற பெயர் உள்ளது. இன்றும் மலைவாழ் மக்களிடையே வழங்கும் குலப்பிரிவுகளில் 'சாத்தன்' என்பதும் ஒன்றாகும். 

சோழமுடையான் கோவிலின் சற்று மேற்கில் சமண தீர்த்தங்கரர் சிலை உள்ளது. சமணாண்டிப்பாட்டன் என்று தற்போது மக்கள் வழங்குகின்றனர். கோவில் இருந்து அழிந்து போன சுவடுகள் ஆங்குள்ளன. சமண தீர்த்தங்கரர் சிலையிலிருந்து சற்று வடக்கே சோலையில் அழகிய துர்க்கையின் சிலை உள்ளது. ஏறக்குறைய நான்கடி உயரமுள்ள இச்சிலை அழகிய வேலைப்பாடு கொண்டது. இச்சிலையைத் தற்கால மக்கள் கொல்லிப்பாவை என்று கூறுகின்றனர். கொல்லிப்பாவைக்கும் இத்துர்க்கை சிலைக்கும் தொடர்பில்லை. இத்துர்க்கை சிலைக்குப் போகும் வழியில் ஐயனாரின் சிற்பம் உள்ளது. இதுவும் புதரடைந்து கிடக்கின்றது. 

மேற்கண்ட செய்திகளைக் கொண்டு பார்க்குமிடத்துக் கருங்கயம் என்ற ஊர் வணிக இருப்பிடமாகவும், பல்வகைச் சமயங்களின் நிலைக்களனாகவும் சிறப்புப் பெற்றிருந்தது எனலாம். 

நன்றி: இக்கல்வெட்டினைப் பற்றி தெரிவித்தவர் தொல்லியல் துறை கல்வெட்டுப் பயிற்சி நிறுவன மாணவர் ஜெ முருகேசன். கல்வெட்டினைப் படியெடுக்க உதவியவர் ப.இராசேந்திரன் பதிவு அலுவலர் அலுவலகம். திருச்சி. 

- வெ.இரா. துரைசாமி, நாமகிரிப்பேட்டை.

குறிப்பு: இக்கட்டுரை தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்
சூலை 1997-இல் வெளியிட்ட ஆவணம் இதழ் 8-இல் வெளிவந்தது.
இணைப்பு: https://www.tamilheritage.org/Aavanam/Aavanam08.pdf

இதற்கு முன்னர், சூலை 1979-இல் திரு கொடுமுடி சண்முகம்
அவர்கள் நடத்திய தேனோலை இதழ்-21-இல் இச்செப்பேடுகள் 
கண்டறியப்பட்டக் குறிப்புடன் செப்பேட்டுச் செய்தியும் வெளியிடப்பட்டது.

வெள்ளி, 25 ஜூலை, 2025

அரசினர் உயர்நிலைப்பள்ளி தொ.சேடர்பாளையம் வெள்ளி விழா பாராட்டிதழ் 1951 - 1977



வெள்ளி விழா 1951 - 1977
அரசினர் உயர்நிலைப்பள்ளி தொ.சேடர்பாளையம்
பழைய மாணவ மன்றத்தினர் உவந்தளிக்கும்
வெள்ளி விழா பாராட்டிதழ்


“எங்கள் மனம்நிறைய ஏற்றமுடை நல்லறிவைத்

தங்கள் கனிமொழியால் தாமீந்த மங்காத

ஆற்றல் மிகுந்தநல் லாசான்கள் தம்மடியைப்

போற்றி வணங்குகிறோம் பொன்”


பாரோர்கள் போற்றுவளம் சூழ்ந்த சேடர்ப்

பாளையமாம் நற்பதியில் கலைகள் ஓங்கச்

சீராரும் செங்காட்டுப் பள்ளி தன்னைத்

திகழுமுயர் நிலைப்பள்ளி என்றே கொண்டு

பேராரும் நற்குருவாம் இனிய பண்பின்

பெருமைமிகு குருராசன் தலைமை ஆசான்;

ஏராரும் கட்டடங்கள் குழுவின் தலைவர்

இனிய புகழ்க் கைலாசக் கவுண்டர் தானாய்!


நிலையான புகழுக்கோர் வழியைச் செய்த

நெறிசான்ற நாராயணன் தலைமை ஆசான்;

அலையெனவே மாணாக்கர் ஓட ஆடி

அகமகிழ்ந்து விளையாட நிலமும் கண்டார்;

மலையாகப் பள்ளியினை உயர்த்திச் சென்ற

மல்புகழ் சவுண்டப்பன் தலைமை ஆசான்

விலையிலா கல்வியிலே சிறந்த ஏற்றம்

வேட்கைநீர் குடிநீர்க்கு வழியைச் செய்தார்


திங்களொன்றே தலைவரவர் பொன்னுச் சாமி 

சீலத்தால் மனங்கவர்ந்த சுந்தர ராசன் 

இங்குள்ள மாணாக்கர் நலனை வேண்டி 

ஏற்ற தொரு படக்கருவி அமைத்துத் தந்தார்

பொங்குபுகழ் நல்லியப்பன் தலைமை ஆசான் 

புன்னகையார் ஈஸ்வரனும் இடையிற் சின்னாள்

தங்கநிகர் பெரியன்ணன் இந்நாள் தலைமை 

சார்ந்துள்ளார் தேர்வினிலே விமுக்கா டுயர்வு

சான்றோர்கள் ஊரார் மற்றும் 

ஏற்றமுடை மாணாக்கர்கள் ஆசான் மார்கள் 

அள்ளிமிகத் தந்ததுடன் அரசும் ஈந்த 

அளப்பரிய செல்வத்தால் பள்ளிக்காக, 

வெள்ளி விழாக் கட்டடமும், அறிவின் தூண்டில்

விஞ்ஞான ஆய்வகமும், சைக்கிள் சாலை;

பள்ளியிலே தோன்றுதற்கு முதலாய் நின்றார் 

பண்புடையார் பெரியண்ணன் தலைமை ஆசான்

பெற்றோர்கள் ஆசிரியர் கழகம் கண்ட 

பேராளர் கந்தசாமிக் கவுண்டர் தாழும்

தற்போது தலைவரனப் பள்ளிக் குழுவில் 

சலியாது உழைக்கின்றார் தொடக்க காலம்

பற்றாளர் செங்கோட கவுண்டர் சேர்மன் 

பண்புடைநற் சான்றோராம் இராசுக் கவுண்டர்

மற்றுமிங்கே ஊரகத்தில் பள்ளி வாழ

மனமுவந்து கொடையளித்தோர் பல்லோ ருண்டு 


ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஆக 

ஓங்கிநற் சுப்பராயக் கவுண்டர் தாமும்

பேராட்சி விளங்கிடவே கிணற்று மோட்டார் 

பிறங்கிடவே வைத்திட்டார் முருவாக் கவுண்டர்

சீராகக் காற்றாடி போட்டுத் தந்தார்

திகழ்பழைய மாணாக்கர் சங்கம் தாமும் 

தரராளம் நல்லுதவி செய்தார் பள்ளித்

தழைத்திடவே வாழ்த்து கிறோம் வாழ்க!


“அறிவுக் கனலை அழுக்கறுக்கும் நன்மருந்தைச் 

செறியுமுயர் கல்வியெனும் தேனைக் குறியுடனே, 

பெற்றுக் கொடுத்த பள்ளி பேரறிவின் ஆலயத்தை

உற்றுப் பணிந்திடுவோம் ஓர்ந்து”


இடம்: தொ.சேடர்பாளையம்  பழைய மாணவ மன்றத்தினர்

நாள் : 22-3-1977          அரசினர் உயர்நிலைப்பள்ளி 

    தொ.சேடர்பாளையம்.

- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி ) 

குறிப்பு: அரசினர் மேல்நிலைப்பள்ளி தொ.சேடர்பாளையம் 75-ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் புலவர் வெ.இரா.துரைசாமி அவர்கள் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவிற்காக மார்ச்சு 22, 1977-இல் எழுதிய பாராட்டிதழை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.


வியாழன், 1 மே, 2025

நாமக்கல் - சில வரலாற்றுக் குறிப்புகள்

நாமக்கல்! கடந்த நாற்பது ஆண்டுகால அளவில் நாட்டின் கவனத்தை ஈர்க்கும் சக்தியாய் விளங்கும் ஒரு காந்தக்கல். தொழில் வளர்ச்சியில் புத்துணர்வு பெற்று முன்னேறும் நகரம். லாரித் தொழில் வளர்ச்சியால் முன்னேறி இந்தியப் பெருவழிகளில் இரவும், பகலும் தம்புகழைப் பறை சாற்றுகின்றது. அத்துடன் வேளாண்துறை சார்ந்த துணைத் தொழிலான, கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தியில் உலகின் கண்களைத் தன்பால் இழுத்துள்ள ஒரு மாவட்டம். தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் வேகமாக வளரும் நகரம். மதுரை, திருச்சி, ஈரோடு, துறையூர், சேலம், பெங்களூர் ஆகிய நகரங்கட்குச் செல்லும் பெருவழியின் நடுநாயகமாய் விளங்குகின்றது. நாமக்கல் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளை இங்குக் காண்போம்.

1. சங்ககாலம்

நாமக்கல்லின் புகழும் பெருமையும் இன்று, நேற்று உருவானதன்று. ஈராயிரம் ஆண்டுகளை எட்டிப் பிடிக்கும் கால அளவு பெற்றது. சங்க இலக்கியங்களில் பலவாறு பாடப்பெற்ற நாமக்கல் கொல்லிமலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. கொல்லி மலையின் நீர்வளத்தால் கிழக்குப் பகுதியும், காவிரியின் நீர்ப் பெருக்கால் தெற்கும், மேற்குமாக மாவட்டம் வளம் பெற்று விளங்குகின்றது. கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரிக்குப் பின் தகடூர் அதிகமான் மரபினரின் பாதுகாப்பில் நாமக்கல் இருந்துள்ளது. அக்காலத்தில் இப்பகுதி கொல்லி கூற்றம் என்று வழங்கப்பட்டது. கொல்லிக் கூற்றத்தின் நடுகாவலனாக அதிகமான் மரபினர் இருந்தனர். கொல்லிமலையைக் கைப்பற்ற எண்ணிய தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, அதிகமானொடும், அவனுக்குத் துணை வந்த சோழ, பாண்டியர்களையும் வென்று கொல்லிமலையைக் கைப்பற்றினான். வெற்றியின் நினைவாகக் "கொல்லிப் பொறை” காசினையும் வெளியிட்டான். "கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறைய" என்று பதிற்றுப்பத்தில் பாடப்பெற்றான். 


“கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை 
பல்வேல் தானை அதிக மானொடு 
இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று”

  

என்பது பதிற்றுப்பத்து (8ஆம் பத்து) கூறும் செய்தியாகும். 

2. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் 

சங்க காலத்திற்குப் பின் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அதிகமான்கள் மீண்டும் வருகின்றார்கள். அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய புகழ்ச் சோழர் உறையூரிலிருந்து தமக்குரிய நகரமாகிய கருவூருக்கு வந்தார். சோழ அரசர்க்குத் திறை செலுத்த மன்னர்கள் திரண்டனர். திறை செலுத்தாத மன்னவனும் உள்ளானோ? என அரசர் வினவினார். “அளந்த திறை முறை கொணரா அரசன் ஒருவன் உளன்.” என்று அமைச்சர் விடையறுக்கின்றார். அவர் யார் என அரசர் வினவ, “அதிகன்னென்பான் அவன். அண்மையில் உள்ள உயர்ந்த மலைசூழ் மலை அரணுக்குள் இருப்பவன்” என அமைச்சர் பதிலுரைக்கின்றார். சோழர் படை சென்று அரணழித்து அவனைக் கொணர்க! என அரசர் ஆணையிடுகின்றார். அதன்படி சோழர் படை திரண்டு அதிகனின் மலை அரண்களைத் தகர்த்து அதிகனை தேடுகின்றது. அதிகமான், “கொடிமா மதில் நீடு குறும்பொறையூர்” அரணில் ஒளிந்து கொண்டான். சோழர் படைகள் அரண்களை அழித்து அதிகனைச் சிறைப்பிடித்துப் புகழ்ச் சோழரின் முன் நிறுத்துகின்றது. அதிகன் தங்கிய இடம் இன்றைய நாமக்கல்லே ஆகும். அக்காலத்தில் குறும்பொறையூர் என்று வழங்கப்பட்டது. “கொடி மா மதில் நீடு குறும்பொறையூர்” எனப் பெரியபுராணம் குறிப்படும் ஊர் நாமக்கல்!


“வடிவேல் அதிகன் படைமா ளவரைக் 
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக் 
கொடிமா மதில் நீடு குறும் பொறையூர் 
முடிநே ரியனார் படைமுற் றியதே” 

என்ற பெரியபுராணப் பாடலினால் குறும்பொறையூரைச் சோழர் படை முற்றுகையிட்டது தெரிகிறது. கருவூரிலிருந்து சோழர் படை மோகனூர் வழியாகக் காவிரியைக் கடந்து வந்தது. நாமக்கல்லின் தெற்கில் நெடிய மலைத் தொடர்கள் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இம்மலைத் தொடரையே ஓங்கு எழில் சூழ் மலையரணம் என பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. மலைத் தொடரைக் கடப்பதற்குச் சோழர் படை மலைத் தொடரைத் தகர்த்து வழி ஏற்படுத்தியது. அப்படித் தகர்க்கப்பட்ட இடம் இன்றைய கணவாய்ப்பட்டி ஆகும். இதையே “கடிசூழ் அரணக் கணவாய் நிரவி” எனப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. கணவாய் வழியாக வடக்கு நோக்கி வந்த சோழர் படை இன்றைய நாமக்கல்லைச் சூழ்ந்து முற்றுகையிட்டது. நாமக்கல் குறும்பொறையூர் என்பது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. குறும்பொறை என்பதற்கு, காடு, குறிஞ்சி நிலத்தூர் சிறுமலை எனப் பொருள். இவற்றுள் சிறுமலை என்பதே நாமக்கல். குறும்பொறையில் மண் கோட்டைக் கட்டி அதிகமான் வாழ்ந்துள்ளான். குறும்பொறையை ஒட்டிக் கீழே குடிமக்கள் வாழ்ந்தனர். மலையைச் சுற்றிலும் மதில்கள் பாதுகாப்பாக இருந்தன. அம்மதில்களில் கொடிகள் விளங்கின எனப் பெரியபுராணம் கூறுகின்றது. எனவே கி.பி.5-ஆம் நூற்றாண்டு அளவில் நாமக்கல் குறும்பொறையூர் என்று வழங்கப்பட்டது உறுதியாகிறது. 


3. கி.பி.8-ஆம் நூற்றாண்டில் 

கி.பி.5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எட்டாம் நூற்றாண்டில் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் படையெடுப்பு நிகழ்ந்தது. அக்காலத்தில் கொல்லிக்கூற்றம் மழகொங்கம் என்று வழங்கப்பட்டது. மழவர்களின் ஆட்சிக் கீழ் இருந்த சோழ நாட்டுப் பகுதி மழநாடு என்றும் மழவர் ஆட்சிக்குக் கீழ் இருந்த கொங்குநாட்டுப் பகுதி மழகொங்கம் என்றும் வழங்கப்பட்டது. கொல்லிமலையும், குறும்பொறையூரும் மழகொங்கத்தில் இருந்தன. அப்பொழுதும் இப்பகுதியில் அதிகமான்கள் ஆட்சியே நடைபெற்றது. எட்டாம் நூற்றாண்டில் கி.பி.765 முதல் 790 வரை ஆட்சி செய்த நெடுஞ்சடையன் பராந்தகன் தன் சீவரமங்கலச் செப்பேட்டிலும் வேள்விக்குடிச் செப்பேட்டிலும், மழகொங்கத்தில் அதிகமானொடு சேரனையும், பல்லவனையும் வென்றடிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளான். அதனால் நாமக்கல் பகுதி அக்காலத்தில் மழகொங்கத்தில் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.


“பூவிரியும் பொழிற் சோலைக்

காவிரியைக் கடந்திட்டு

அழகமைந்த வார் சிலையின் 

மழகொங்கம் அடிப்படுத்தி”

 

என்று வேள்விக்குடிச் செப்பேட்டிலும், 


“மாயிரும் பெரும்புனல் காவிரி வடகரை 

ஆயிரவேலி அயிரூர் தன்னிலும் 

புகழி யூரிலும் திகழ்வே லதிகனை 

ஓடுபுறங் கண்டவன் ஒலியுடை மணித்தேர் 

ஆடல்வெம்மா அவையுடன் கவர்ந்தும் 

பல்லவனும் கேரளனும் ஆங்கவற்குப் பாங்காகி” 

எனப் பல்லவனையும், சேரனையும் சேர்த்து வென்றதைச் சீவரமங்கலச் செப்பேட்டிலும் பாண்டியன் குறித்துள்ளான். பாண்டியன் வெற்றிபெற்று அதிகமானை மதுரையில் சிறைவைத்தான். இருப்பினும் அதிகமானின் வீரத்தையும், ஆற்றலையும் கண்டு பாண்டிய குடும்பத்தின் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அனுப்பினான் எனக் கருதலாம். பாண்டியனுடை மகள் வயிற்றில் பிறந்தவனே அதிகமான் குணசீலன் என்பவன் ஆவான். இக்குணசீலனே புகழ் பெற்ற நாமக்கல் குடைவரைகளை எடுப்பித்தவன் ஆவான். இப்பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் தீவிர வைணவன். இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் தமிழ் வேதம் பாடித் திருமாலின்புகழ் பரப்பியவர். நெடுஞ்சடையன் பராந்தகன் பெரியாழ்வார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். அதனால் தான் சீவரமங்கலச் செப்பேட்டில், 


“பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு 

மணி நீள்முடி நில மன்னவன்”


என்று பாராட்டப்படுகின்றான். பாண்டிய நாட்டிலும் திருமாலுக்குப் பல கோயில்களை எடுப்பித்தான். அரசன் மட்டுமின்றி அவன் கீழ் அதிகாரிகளும் திருமாலுக்குக் கோவில் எழுப்பித்துள்ளனர். மாறன் காரி, மாறன் எய்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். மழகொங்கத்தை வென்ற பாண்டியன், 


“பூஞ்சோலை அணிபுறவில்

காஞ்சிவாய்ப் பேரூர்புக்குத்

திருமாலுக் கமர்ந்து றையக் 

குன்றமன்ன தோர் கோயிலாக்கி” 

எனக் கோவையை அடுத்த பேரூரில் திருமாலுக்குக் குன்ற மன்னதோர் கோயில் எடுப்பித்ததைச் சீவரமங்கல செப்பேடு குறிப்பிடுகிறது. இதனால் பாண்டியன், நெடுஞ்சடையன் பராந்தகன் திருமாலின் தீவிர அடியவனாக விளங்கியது தெளிவாகிறது. பாண்டிய குலத்து மகள் வயிற்றுப் பேரனாகிய அதிகமான் குணசீலனும் தன் தாய்வழி பாட்டனைப் போல வைணவ ஈடுபாடு கொண்டவனாக இருந்துள்ளான். அதனால் தான் "அதியேந்திர விஷ்ணுக் கிரகம்” என்றப் பெயரில் நரசிங்க பெருமாளுக்கும், பள்ளி கொண்ட பெருமாளாகிய ரங்கநாதருக்கும் குடைவரைக் கோயில்கள் எடுத்துப் பெருமைப்பட்டான் எனலாம். பாண்டியர்கள் சந்திர குலத்தினர் என்பதற்குத் திருவரங்கத்தில் உள்ள பாண்டியர் கல்வெட்டே சான்றாகும்.


“சமஸ்த ஜகதாதார சோமகுல திலக 

மதுராபுரி மாதவ”


என்பது கல்வெட்டு வாசகம். சோமகுல திலகன் என்பதால் பாண்டியர்கள் சந்திர குலத்திற்குத் திலகம் போன்றவர்கள் என்பது விளங்கும். உலகம் போற்றும் இக்குடைவரைகள் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும். பல்லவர்காலக் கலைவடிவைக் கொண்டிருந்தாலும் பாண்டியர் தொடர்பால் உருவாக்கப்பட்டதே இக்குடைவரைகள்.


4. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் 

கி.பி.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாமக்கல் சோழர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. ஆதித்த சோழன், முதற்பராந்தகன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், இராசராசன், இராஜேந்திரன் ஆகிய பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைப்பதால் சோழருடைய ஆட்சி இப்பகுதியில் நிலைத்திருந்தது எனலாம். இன்று நாமக்கல் என்று வழங்கப்படும் பெயர் சோழர் காலத்தில் திரு ஆரைக்கல் என்று வழங்கப்பட்டதை கல்வெட்டு வாயிலாக அறியலாம். ஆரைக்கல் என்பதற்கு மதிலால் சூழப்பட்ட கல் என்பது பொருள். ஆரை-மதில். ஆரைக்கல் என்பது காலப்போக்கில் ராரைக்கல் > ராரிக்கல் > ராமக்கல் > நாமக்கல் என்று மாறியுள்ளது. 


கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை ஆரைக்கல் என்றே வழங்கிவந்துள்ளது. பிற்காலத்தில் நாமக்கல் ஆகி அதற்கான தலபுராணங்கள் உருவாகி மலையில் நாமம் சாத்தப்பட்டது. சோழர்காலத்தில் வளநாடு, மண்டலம், கூற்றம், நாடு என்ற பிரிவுகள் உருவாகின. அதில் வடகரை “இராசாச்சிரைய வளநாட்டு வல்லவரையர் நாட்டு” என்ற பிரிவிலே நாமக்கல் வந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் “கொங்கான வீரசோழ மண்டலத்து” என்ற பிரிவிலும், “நாடாழ்வார் நாடு” என்ற பிரிவிலும் அடங்கியது. சோழர் காலத்தில் பல சதுர்வேதி மங்கலங்கள் உருவாயின. நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்களுக்கு இறையிலியாக வளமான ஊர்கள் கொடுக்கப்பட்டது. கூலிப்பட்டி, பொம்மசமுத்திரம், மணப்பள்ளி, நன்செய் இடையாறு, பில்லூர், குன்னமலை, கதிராநல்லூர், பாச்சல், கல்யாணி, ஏழூர் ஆகிய ஊர்கள் சோழர் ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. தூசியூர் சோழர் காலத்தில் மிகச்சிறந்த வணிக நகரமாக விளங்கியது. 


5. கி.பி.13-ஆம் நூற்றண்டில் 

சோழர் ஆட்சிக்குப்பின் கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் செல்வாக்கு வளர்ந்தது. சடையவர்மன் சுந்தரபாண்டியன், இராசகேசரி, வீரபாண்டியன் காலக்கல்வெட்டுகள் நாமக்கல்லிலும், சுற்றுப்பகுதிகளிலும் கிடைத்துள்ளன. பாண்டியர்காலத்திலும் பல சதுர்வேதி மங்கலங்கள் உருவாயின. நாமக்கல், “வடகொங்கு ஏழூர்” நாட்டைச் சேர்ந்ததாக குறிப்படப்படுகின்றது. மலைமேல் கோட்டையில் உள்ள திருமால் கோவில், சுந்தரபாண்டியன் கல்வெட்டில் அருளாள விண்ணகரான எதிரிலிப் பெருமாள் என்று குறிப்பிடப்படுகின்றது. இக்கோவிலுக்கு நாமக்கல் பகுதியில் உள்ள 11 ஊர்களில் 11 காணி நிலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இக்காலத்தில் கொங்கு 24 நாடு என்ற நாட்டுப்பிரிவும் வழக்கில் வந்தது. 


6. மதுரை நாயக்கர் ஆட்சியில் 

பாண்டியர் காலத்திற்குப்பின் விஜயநகர, மதுரைநாயக்கர் ஆட்சியில் நாமக்கல் வந்தது. மதுரை எழுபத்திரண்டு பாளையக்காரர்களில் சேந்தமங்கலம் இராமச்சந்திரநாயக்கர் மரபினரும் அடங்குவர். அவர் காலத்தில் நாமக்கல், பரமத்தி ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டப்பட்டன. முற்காலத்தில் மலைமேல் மண்ணினால் கோட்டை கட்டப்பட்டிருந்தது. காலப்போக்கில் அவைகள் அழிவுற்றன. அதனால் பிற்காலத்தில் கற்களினால் கோட்டைகள் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டன. தொடர்ந்து வந்த மைசூர், ஆட்சியாளர்களும், ஆங்கிலேயர்களும் கோட்டையைப் பராமரித்து வந்தனர். 


பரமத்தி கோட்டைத் தலைவனாக இருந்த இளையா நாயக்கன், இராமச்சந்திர நாயக்கன் சார்பில் இராமப்பையனுடன் சேர்ந்து சேதுபதியோடு போரிட்டான் என்பதை இராமப்பையன் அம்மானை குறிப்பிடுகிறது. இக்காலத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் பல மண்டபங்களும், நாமகிரித் தாயார் சன்னதியும் கட்டப்பட்டன. தாரமங்கலம் கட்டிமுதலிகளின் திருப்பணியும், நரசிங்கப் பெருமாள் கோவிலில் நடந்துள்ளது. பெருமாள் சன்னதியின் கீழ் உள்ள பெரிய மண்டபம் கட்டிமுதலிகளின் திருப்பணி ஆகும். கட்டிமுதலிகளின் சின்னமான வாடாமாலை, வண்ணத்தடுக்கு முதலியவை மண்டபத்தின் மேல் விதானத்தில் உள்ளது. மலையின் மேற்கில் கட்டிமுதலித் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


நாமக்கல் குடைவரைகளைத் தவிர குறிப்பிடத்தக்க ஒன்று நாமக்கல் ஆஞ்சநேயர் ஆகும். நரசிங்கப் பெருமாளின் சன்னதியின் நேர் எதிரில் உயர்ந்த நிலையில் பெருமானைக் கைகூப்பி சேவித்து உள்ள காட்சி உள்ளத்தை உருக்குவதாகும். நாமக்கல்லுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் உள்ளது. எல்லா நாட்களும் திருவிழாதான் என்றபடி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இவ்வாஞ்சநேயர் 18-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோற்றுவிக்கப்பட்டது. மானத்தி பெரிய ராசாக்கவுண்டர் (மானத்தி ஜமீன்தார்) ஆஞ்சநேயருக்கு நந்தவனம் அமைத்து கொடுத்ததைப் பற்றி ஒரு கல்வெட்டுக் குறிப்பு உண்டு.

 

கி.பி. 1874-ஆம் ஆண்டில் முத்துகாப்பட்டி ஜமீன்தாரினியாக இருந்த முத்தியாலம்பாள் நரசிங்கப் பெருமாள் கோவில் கொடிக் கம்பத்திற்குப் பொன்தகடு வேய்ந்துள்ளார். அக்காலத்தில் அதன் மதிப்பு 12,000/- ரூபாய் ஆகும். இவ்வம்மையாருடைய கணவர் பொலமரெட்டியார் ஆவார். 


7. ஆங்கிலேயர் ஆட்சியில் 

சில காலம் மைசூர் ஆட்சி நடைபெற்றது. ஊர்பெயர்கள் கன்னட ஒலிப்பில் மாற்றம் செய்யப்பட்டன. கி.பி.1786-ல் கர்னல்-உட் அவர்களின் நடவடிக்கையினால் நாமக்கல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தது. அதே ஆண்டில் ஐதர்அலி நாமக்கல்லை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டார். மூன்றாம் மைசூர்ப் போரின் விளைவால் சேலம் கோவைப் பகுதிகள் நிரந்தரமாக ஆங்கிலேயர் கீழ் வந்தது. நாமக்கல் சேலம் மாவட்டத்தில் ஒரு வட்ட தலைநகரமாக விளங்கியது. கி.பி. 1910-ல் நாமக்கல் வட்டம் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நாமக்கல் சேலம் மாவட்டத்திற்கு வந்தது. இதன் இடையில் தாத்தையங்கார்பேட்டை, காட்டுப்புத்தூர் ஆகிய பிர்காக்கள் திருச்சியோடு சேர்க்கப்பட்டது. அக்காலத்தில் ஈரோடு, நாமக்கல், அரியலூர் வழியில் புகைவண்டித் தொடர் அமைக்க திட்டமிடப்பட்டு என்ன காரணத்தினாலோ திட்டம் கைவிடப்பட்டது. 


8. விடுதலைப் போராட்டத்தில் 

விடுதலை போராட்டத்திலும் நாமக்கல் முன்னிலையில் விளங்கியது. “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்குச் சென்ற அறப்போர் தியாகிகளுக்கு வேதகீதமாக போராட்டப்பண் பாடிக்கொடுத்த கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவருடைய நினைவாக சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை எனப் பெயரிட்டு அரசு சிறப்பித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் நாமக்கல் பகுதியில் 42 பேரும், இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் 165 பேரும் முனைந்து சிறை சென்றனர். 14 பிப்ரவரி1934-ல் மகாத்மா காந்தி முதன் முதலில் நாமக்கல்லுக்கு வந்தார். மிட்டாதார் வெங்கடாசலம் செட்டியாரும், வக்கீல் நாகராஜ அய்யங்காரும் மற்றும் பலரும் காந்தியடிகளை வரவேற்றனர். கமலாலயக் குளக்கரையில் கூட்டம் நடைபெற்றது.


"இந்தியாவிலேயே இயற்கை அழகு நிறைந்த இடங்களில் ஒன்றிற்கு என்னை அழைத்து வந்து இருக்கின்றீர்கள். இத்தகைய கூட்டங்கள் நடத்துவதற்கு இந்த இடம் மிகவும் ஏற்றது.” என்று காந்தியடிகள் மனமுவந்து கூறினார். 


நன்றி !


- வெ.இரா.துரைசாமி - நாமகிரிப்பேட்டை

தானிய கிடங்கு திறப்பு விழா சிறப்பு மலரில் வெளிவந்த கட்டுரை