செவ்வாய், 13 அக்டோபர், 2009

கொல்லியும் – அறப்பள்ளியும்

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் அறப்பள்ளி ஈச்வரம் உள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் உள்ளது. சேலம், நாமக்கல் நகரங்களிலிருந்து பேருந்துகள் உண்டு. மலையின் மேற்குப்பக்கம் அமைந்துள்ள காரவள்ளியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அறப்பள்ளி அமைந்துள்ளது.




தமிழகத்தில் சமண சமயம் உயர்நிலையில் இருந்தபொழுது இக்கோயிலும் சமணத்தலமாக இருந்து பின் சைவக்கோயிலாக மாற்றம் பெற்றது. கோயிலை ஒட்டியுள்ள பாறையில் சமண தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டினர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தத்தம் பதிகங்களில் அறப்பள்ளியைக் "கொல்லிக் குளிரறைப் பள்ளி" என்றும், "குற்றாலத்தான் குளிர்தூங்கு கொல்லியான்" என்றும், "கள்ளார் கமழ்கொல்லி யறைப்பள்ளி" என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அறப்பள்ளி தேவார வைப்புத் தலமாகும். அறப்பள்ளி கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கும் முன்பே புகழ் பெற்றிருந்தது. அருணகிரி நாதரும் தம் திருப்புகழால் இங்குள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார்.



தற்போதுள்ள பதினான்கு நாடுகளில் ஒன்றான வளப்பூர் நாட்டில் அறப்பள்ளி ஈச்வரர் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி. 1.37 ஏக்கர் பரப்பளவில் கோவிலும் சுற்றுப்புறமும் அமைந்துள்ளது. ஒரே பிரகாரம். நுழைவாயில் உயர்ந்து கோபுரமின்றியுள்ளது. கொடிமரம், பலிபீடம், நந்தி அடுத்து மகா மண்டபம். பின் அர்த்தமண்டபம், அந்தராளம் பின் கருவறை. கருவறை சோழர் காலக் கட்டடக்கலை. இறைவன் அறப்பள்ளி ஈச்வரர், அம்மன் தாயம்மை. தர்மகோசீச்வரர், தர்மகோசீச்வரி என்றும் வழங்குவர். அர்த்த மண்டபத்தின் இடப் பக்கம் அம்மன் கருவறை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அண்மைகாலத் திருப்பணியால் அம்மன் கருவறை சற்றுப் பின்னோக்கி அமைக்கப்பட்டு அர்த்த மண்டபம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏறக்குறைய முப்பத்திரண்டு செப்புத் திருமேனிகள் உள்ளதாக அரசுக் குறிப்புத் தெரிவிக்கின்றது. கோயில் பிரகாரத்தின் தென் பகுதியில் ஆறுமுகப் பெருமான் கோயில் அமைந்துள்ளது. கருவறையின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் இலிங்கோத்பவரும், வடக்கில் பிரம்மாவும் தேவ கோட்டங்களில் வீற்றிருக்கின்றனர். கருவறையின் பின்புறம் விநாயகர், காசிவிசுவநாதர், விசாலாட்சிக்குத் தனித்தனியாகக் கோயில்கள் உள்ளன. விமானங்கள் உண்டு. கருவறை விமானம் மூன்று நிலைகளைக் கொண்ட வட்ட வடிவில் உள்ளது. கருவறை வடக்கில் சண்டேச்வரர் கோயில் உள்ளது. மகாமண்டபத்தில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது. சமயக்குரவர் நால்வருக்கும் சிலைகள் உள்ளன. மூன்று காலமும் குருக்கள் வழிபாடும் நடைபெறுகிறது.

கருவறையைச் சுற்றிலும், கருவறை நிலைக்காலிலும் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் தொன்மையானது உத்தம சோழனுடையதாகும்.

     "கண்டன் மதுராந்தகரான ஸ்ரீ உத்தமசோழதேவர்
      தங்களாச்சி பிராந்தகன் மாதேவடிகளார்
      செம்பியன் மாதேவியார்"

என்று உத்தமசோழனின் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. செம்பியன் மாதேவியார் குடிஞைக்கல்லால் நூறு கழஞ்சு பொன்னைக் கொல்லிமலையில் உள்ள பன்னிரண்டு ஊரார்களிடத்தில் கொடுத்து அதனின்று வரும் வட்டிக்கு மாதந்தோறும் ஒவ்வொரு ஊராரும் கோவிலில் பூசை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் இறைவனை "திருவறப்பள்ளி ஆழ்வார்", "திருவறப்பள்ளி மகாதேவர்", "திருவறப்பள்ளி உடையார்" என்று குறிப்பிடுகின்றன. பரகேசரி என்ற பெயரில் மேலும் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவை பிரதிகண்டன் சுந்தரசோழனைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மற்றொரு கல்வெட்டு, இராஜமகேந்திரன் காலத்தில் அறப்பள்ளி இறைவர்க்கு வாயலூரில் (வாசலூர்ப்பட்டி) கொடுக்கப்பட்ட நிலத்து இறை முறையாகச் செலுத்தப்படாமல் நின்று போயிருந்ததையும், முதற் குலோத்துங்கன் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி.1082) கோயில் தானத்தாரும் பல மண்டலத்து மாயேச்சுவரரும் கூடி வாயலூராரை வேண்ட, மீண்டும் கோயிலுக்கு வரி கொடுக்கப்பட்ட செய்தியையும் கூறுகிறது.

இரண்டாம் இராசாதிராசனின் ஒன்பது, பத்தாம் ஆட்சியாண்டைச் (கி.பி.1172, 1173) சேர்ந்த கல்வெட்டுகள் "பாண்டிகுலாசனி வள நாட்டு இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறையுடைய வீற்றிருந்தான் சேமாண்டரான பிள்ளை அகளங்க நாடாழ்வான்" கொல்லிமலை நாட்டில் பத்து ஊரவரிடம் கோயிலுக்கு வரி பெற்றதைக் குறிப்பிடுகின்றன. "பொன்னேரி வர்மன்" என்ற தலைவனின் கல்வெட்டும், அரசன் பெயர் இல்லாத சில கல்வெட்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் அறப்பள்ளி ஈச்வரர்க்குக் கொடுக்கப்பட்ட தேவதானங்களைப் பற்றியும், கோயில் ஊழியர்கட்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றியும் குறிப்பிடுவனவாகும். பூசை, விளக்கெரித்தல், திருவிழா, நந்தவனம் முதலியன தொடர்பாகவே கல்வெட்டுகள் உள்ளன.

சில கல்வெட்டுகள் கொல்லிமலையில் வாழ்ந்த வணிகக்குழுக்களைப் பற்றியும், செட்டிகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. "வெருனூர் அறப்பள்ளியுடையான் வீரானச்செட்டி", "வெருனூரில் பள்ளவழியில் குந்தன வரம்பனான திசைமாணிக்கச்செட்டி" என்று செட்டிமார்களையும் "கொல்லிமலை நாட்டு ஐந்நூற்றுவர் ரக்ஷை" என்று வணிகக்குழுவையும் குறிப்பிடுகின்றது. "சேர, சோழ பாண்டிய முக்கோக்கள் ரக்ஷை" என்று மூவேந்தர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.

மதுரை முத்துவீரப்பநாயக்கர் ஆட்சிகாலத்தில் கி.பி.1580-ல் சேந்தமங்கலம் பாளையக்காரர் கோனூர் இராமச்சந்திர நாயக்கரின் மகன் இம்முடி இராமச்சந்திர நாயக்கர் அறப்பள்ளி ஈச்வரர்-நாச்சியார் திருக்கோயில்களைப் பழுது பார்த்துச் சாதாரண ஆண்டு மாசிமாதம் 5 ஆம் நாளில் குடமுழுக்குச் செய்துள்ளதை ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அக்குடமுழுக்கின் போது குத்தமலை நாட்டில் அசை என்ற ஊரைக் கோயிலுக்கு இறையிலியாக அளித்துள்ளார். அசை என்ற ஊர் அறப்பள்ளி ஈச்வரர் கோயிலுக்குத் தென்மேற்கில் அசக்காடு என்ற பெயரில் தற்போது உள்ளது. தற்போது வளப்பூர் நாடு என்று வழங்கப்படும் பகுதி 16 ஆம் நூற்றாண்டில் குத்தமலை நாடு என்று வழங்கப்பட்டது என அறியலாம்.

இராமச்சந்திர நாயக்கர் ஆட்சிக்குப்பின் கி.பி.1770 விக்குறுதி ஆண்டு தை மாதம் 27ஆம் தேதி புதன் கிழமை சுவாதி நாளில் அறப்பள்ளி ஈச்வரர்-தாயம்மைக்குக் குடமுழுக்கு நடைபெற்றதை மற்றொரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.

மீண்டும் கி.பி.1818 சுபானு வருடம் ஆவணி மாதம் 20ஆம் தேதி அறப்பள்ளி ஈச்வரர்-தாயம்மைக்குத் துறையூரைச் சேர்ந்த ராஜநரசிங்கநாயக்கர் தாசில் பண்ணிய காலத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.

அண்மைக்காலத்தில் 01.05.1985 மற்றும் 27.01.2002 தேதிகளில் இந்து அறநிலையத்துறையும் அடியவர்களும் சேர்ந்து குடமுழுக்குச் செய்துள்ளனர்.

தேவாரமே அன்றி அருணகிரிநாதரும் தம் திருப்புகழால் இங்குள்ள முருகப் பெருமானைப் பாடியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரான அம்பலவாணக்கவிராயர் "அறப்பள்ளீ்ச்சுர சதகம்" என்ற நூறு பாடல்களைக் கொண்ட நூல் பாடியுள்ளார். சதக நூல்களில் சிறந்ததாகக் கருதப்படும் இந்நூலின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும்,

     "அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
                அறப்பள் ளீச்சுர தேவனே"

என்ற புகழ்ச்சியுடன் முடிகின்றது. கொல்லிமலைக்குச் சதுரகிரி என்ற பெயரும் இருப்பதை அறியலாம். "கொல்லிமலைப் புராணம்" என்றொரு நூல் இருந்ததாகவும் தெரிகின்றது. உறையூர்ப் பசிப்பிணி மருத்துவர் அருணாச்சல முதலியார் அண்மைக்காலத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின் போது, "அறப்பள்ளி ஈச்வரர் அந்தாதி" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

கோயிலை ஒட்டி வளமான ஆறு ஒன்று உள்ளது. தெள்ளிய நீர்ப் பாறைகளில் பட்டுத் தெறித்து விழுந்து சலசலவென ஓடும் இந்த ஆற்றிற்குக் "கோயிலாறு" என்று பெயர். மலையின் மேற்கு, தெற்குப் பகுதிகளில் ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவுகளுக்கப்பால் மலைமுகடுகளில் இருந்து வரும் நீர்ப் பெருக்கே இவ்வாற்றின் நீர்வரத்தாகும். கோயிலைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று அருவியாகப் பாய்கின்றது. அவ்வருவிக்கு "ஆகாச கங்கை" என்றுப் பெயர். சுமார் நூற்றைம்பது அடி உயரத்திலிருந்து அருவி விழுகின்றது. நீர்வரத்து நிறைந்த காலத்தில் காண்பதற்கரிய காட்சியாக விளங்கும். இந்த ஆறு மலையின் கிழக்குப் பகுதியில் புளியஞ்சோலையில் "ஐயாறு" என்ற பெயருடன் சமவெளியில் இறங்கிப் பின் "சுவேதநதி" என்னும் வெள்ளாறாகவும் துணை ஆறுகளுடன் திட்டக்குடி, புவனகிரி வழியாகச் சென்று பரங்கிப் பேட்டை அருகில் கடலில் கலக்கின்றது.



ஆகாச கங்கை

கோயிலை ஒட்டி ஆற்றுப் படித்துறையில் ஏராளமான மீன்கள் உள்ளன. கோயிலில் இறைவனுக்குப் பூசை நடைபெறும் முன் இம்மீன்களிருக்கும் துறையில் மணியடித்துப் பூசை நடைபெறும். நைவேத்தியங்களை ஆற்றிலிடும் போது மீன்கள் திரளாக வந்து அவற்றை உண்ணும் காட்சி காண்பதற்கரியதாகும். "உணவை நீரருகே கொண்டு செல்லும்போதே மீன்கள் துள்ளி வந்து உண்ணும்" என்று திருச்சிராப்பள்ளி கெஜட்டியர் எழுதிய ஹெமிங்வேவும், "தினமும் மணியடித்து மீன்களுக்கு உணவிட்ட பிறகே இறைவனுக்குப் பூசை நடைபெறுகிறது" என்று சேலம் மான்யுவல் எழுதிய லீஃபானும் (1883) தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இம்மீன்களைப் பற்றிய சுவையான கதையொன்றும் வழங்கப்படுகின்றது.

முன்பு ஒரு காலத்தில் சில கொள்ளையர்கள் கோயிலைக் கொள்ளையிட வந்தனர். ஆற்றில் உள்ள மீன்களைக் கண்டதும், அவற்றைப் பிடித்துச் சமைத்துண்ண விரும்பினர். மீன்களைப் பிடித்து அறுத்துப் பாத்திரத்தில் வைத்துச் சமைக்கத் தொடங்கினர். அச்சமயத்தில் அறப்பள்ளி நாதரின் பாகமாகிய அறச்சாலைவல்லி என்னும் தாயம்மை தம் கயல்போன்ற கண்களால் அம்மீன்களின் மீது அருள் பாவித்து நோக்கினாள். அவ்வளவில் பாத்திரத்தில் அரிந்து வைக்கப்பட்டிருந்த மீன் துண்டுகள் முழுவடிவம் பெற்று துள்ளி ஆற்றில் குதித்து மறைந்தன. இவ்வரிய காட்சியைக் கண்ட கொள்ளையர்கள் ஓடிவிட்டனர் என்பதைக் கொங்கு மண்டல சதகமும் குறிப்பிடுகின்றது.

     "அச்சுதன் கொங்கி லறப்பள்ளி நாதர் ஆற்றிலுறை
       பச்சைநன் மீனைப் பிடித்தறுத் தாக்கப் பசுந்துருக்கர்
       கச்சணி கொங்கை அறச்சாலை வல்லிகயல் குதிக்க
       மச்சமும் துள்ளி விளையாடு மேகொங்கு மண்டலமே!"

என்பது வாலசுந்தரக்கவிராயர் பாடல்.

இக்காலத்தும் அடியவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் ஆற்றிலுள்ள மீன்களைப் பிடித்து அவற்றிற்குத் தங்கம், வெள்ளியில் மூக்குக் குத்திவிடுவர். அறுபட்ட மீன்கள் மீண்டும் பொருந்தியதன் அடையாளமாக மீன்களின் முதுகில் கரிய கோடு ஒன்று இருப்பதை இன்றும் காணலாம். மலைவாழ் மக்களின் குல தெய்வமாக விளங்கும் அறப்பள்ளி நாதரின் பெயரை மக்கள் வைத்துக் கொண்டுள்ளனர். மலைமக்கள் மட்டுமல்லாமல் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலிருந்தெல்லாம் திரளான மக்கள் நாடோறும் வந்து வணங்குகின்றனர். "மெய்யாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள், வேண்டிய வரம் கொடுக்கும் மெய்கண்ட தெய்வமாக" அறப்பள்ளி நாதர் விளங்குகிறார்.

- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)